குறளின் கதிர்களாய்…(443)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(443)
இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு.
-திருக்குறள் – 1054 (இரவு)
புதுக் கவிதையில்…
உள்ளதை இல்லையென
மறைத்துக் கூறும் தன்மையைக்
கனவிலும் அறியாதவரிடம்
சென்று ஒன்றை
இரந்து கேட்பதும்,
இல்லாதவர்க்கு
ஈவது போன்றதே…!
குறும்பாவில்…
எதையும் மறைக்கும் இயல்பைக்
கனவிலும் நினையாதவரிடம் சென்று இரப்பதும்,
இல்லாதவர்க்கு ஈவதற்கு ஒப்பானதே…!
மரபுக் கவிதையில்…
இருப்பதை யிலையென மறைக்கின்ற
இயல்பதைக் கனவிலும் நினைத்திடாமல்
இருப்பவர் தம்மிடம் சென்றாங்கே
இரந்தெதும் கேட்டிடும் செயலதுவும்,
வருந்தியே வறுமையில் இல்லையென
வந்தவர் கேட்பதை யெல்லாமே
விருந்தென அளவிலா வகையினிலே
விரும்பியே யீவதற் கொப்பாமே…!
லிமரைக்கூ…
இருப்பதை இல்லை யென்றே
மறைப்பதைக் கனவிலும் நினைக்காதவரிடம் இரப்பதும்,
வேண்டுவோர்க் கீவதும் ஒன்றே…!
கிராமிய பாணியில்…
ஒண்ணுதான் ஒண்ணுதான்
ரெண்டும் ஒண்ணுதான்..
கையில இருக்கத
இல்லண்ணு மறைக்கிறத
கனவுலயும் நெனைக்காத
ஒளிவுமறவு இல்லாதவங்கிட்ட
போய் எரக்கிறதும்,
கையில இருக்கிறத
கேக்கிறவங்களுக்கு
இல்லண்ணு சொல்லாமக்
குடுக்கிறதும் ஒண்ணுதான்..
ஒண்ணுதான் ஒண்ணுதான்
ரெண்டும் ஒண்ணுதான்…!