மீனாட்சி பாலகணேஷ்

ஈழத்தில் எழுந்த பெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் முருகப்பெருமான் மீதுதான். இவற்றின் நயங்களைப் பின்வரும் சில பகுதிகளில் கண்டு மகிழலாம்.

1. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்

கதிர்காம பிள்ளைத்தமிழ் பற்றி முன்பொரு தொடரிலேயே (வல்லமை இதழில் வெளிவந்த குழவி மருங்கினும் கிழவதாகும்) எழுதியுள்ளேன். சிவங். கருணாலயப் பாண்டியப் புலவரால் இயற்றப்பெற்ற இது பல  வித்தியாசமான பருவங்களைக் கொண்டு சிறப்பான பாடல்களால் அமைந்தது. பதினான்கு பருவங்களுடன் பருவத்திற்கு மூன்றே பாடல்கள் கொண்டது. இருப்பினும் அங்கு காணாத சில செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

முருக வழிபாட்டிற்குரிய திருப்பதிகளுள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றாலும் பெருமையோடு திகழ்வதே கதிர்காமமாகும். இத்திருத்தலத்தின் பெயர்க்காரணம் பற்றிய ஆராய்ச்சி முடிவுறாத ஒன்றாகும். கதிர்காம (கடரகாம) நகரத்தருகே புண்ணிய நதியாகிய மாணிக்க கங்கை பாய்ந்துகொண்டுள்ளது. ஈழத்து ‘மகாவம்சம்’ கதரகாமத்தின் புரணத்தை பலவாறும் விரித்துக் கூறுகின்றது. கி. மு. 3000க்கும் முன்பே இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. பல சிங்கள அரசர்கள் வழிபட்ட குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன. அருணகிரிநாதர் பல பாடல்களை இப்பெருமான் மீது பாடியுள்ளார். இப்பிள்ளைத்தமிழை இயற்றிய ஆசிரியரும் இறைவன் திருவருளாலேயே இதனைப் பாடவியன்றது எனக் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் சிதம்பர முனிவராற் பாடப்பெற்ற ‘சுப்பிரமணியக் கடவுள் க்ஷேத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழி’ற் இத்தலத்தைப் பற்றிச் சிறப்பித்து எழுதப்பட்டதொரு செங்கீரைப்பருவப் பாடலைக் கண்டு மேற்செல்லலாம்.

‘ஆறுமுகத் தெய்வமே! மாணிக்க கங்கை எனும் ஆற்றில் நீராடி உன்னைப் பணியவரும் பூவுலக மக்களில் ஊமையானோர் பாடல்கள் பாடவும் குருடர்கள் கண்பார்வை பெறவும், மலடிகள் ஆகிய பெண்கள் பிள்ளைகள் பெறவும் நீ அருளுவாய். உன்னைக் ‘குமரா, வேலா’ என அழைக்கும் அன்பர்களை கரடி, புலி, யானை, சிங்கம் ஆகிய வனவிலங்குகள் அவர்கள் காலில் விழுந்து அஞ்சியோடச் செய்குவாய்.

‘ஆணிப்பொன் மண்டபத்தில் கச்சி எனும் காஞ்சியில் என்னை ஆண்டுகொண்டு என் உள்ளத்துப் பிணியைத் தீர்த்து முன்னே நிற்கும் ஆறுமுகத் தெய்வமே! புலோமசை வளர்த்த பெண்பிடியான தெய்வயானையின் கணவனே! நீ செங்கீரையாடியருளுக! தேவர்களோடு மனிதர்களும் பணிந்தேத்தும் கதிர்காம வேலவனே! செங்கீரையாடி அருளுவாயாக!’

மாணிக்க நிறைகங்கை யாடியுன் னைப்பணிய
வந்திடும் பூதலத்தோர்
வாயூமர் பாடவும் குருடர்கண் பார்த்திடவும்
மலடிகள்பின் மைந்தர்பெறவும்
காணிற்கு மாரவே லாவென்னு மன்பரைக்
கரடிபுலி யானைசிங்கம்
காலிற்ப ணிந்தஞ்சி யோடவும் கந்தனே
கண்கண்ட தெய்வமெனவே
ஆணிப்பொன் முத்திமண் டபமேவு கச்சியினுள்
அடியேனை யாண்டுகொண்டென்
ஆகத்தில் வந்தபிணி தீர்ந்திடவு முன்னிற்கும்
ஆறுமுக மெய்த்தெய்வமே
சேணிற் புலோமசை வளர்த்தபெண் பிடிகணவ
செங்கீரை யாடியருளே
தேவரொடு மனிதர்பணி கதிர்காம வேலனே
செங்கீரை யாடியருளே.

கதிர்காமப் பிள்ளைத்தமிழ் மொத்தம் பதினான்கு பருவங்களையும் பருவத்திற்கு மூன்று பாடல்கள் வீதம் நாற்பத்திரண்டு பாடல்களையும் கொண்டு பொலிவது. காப்பு, செங்கீரை, மொழிபயிலல், உணவூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல் (அம்புலி), சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேருருட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் எனப் பதினான்கு பருவங்கள்.

இவற்றுள் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் (கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்) ஆகிய அதிகப்படியான நான்கு பருவங்களையும் இந்த ஒரேயொரு ஆண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே காணவியலும். இப்பருவங்களின் விளக்கத்தையும் பாடல்களின் நயத்தையும் எனது முந்தைய தொடரான ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்பதில் காணலாம்.

தாலாட்டல் எனும் பருவத்தின் ஒரு அழகான பாடலின் நயத்தை இப்போது காணலாம்.

‘கடல்நீரில் முளைத்த   (சூரபன்மனாகிய) மாமரம்  உன்னால் (முருகனால்) வெட்டி வீழ்த்தப்பட்டது. நீ சிவனாரின் நெற்றிக் கண் நெருப்பில் முளைத்தவன்; தத்துவ ஞானம் தழைத்தவன்; கற்பக மரம் போன்று வேண்டுவது அத்தனையும் தருபவன்; உனது திருவடிகளின் குளிர்ச்சியான நிழலையன்றி வேறெங்கும் நிற்பவர்க்குப் பிறவியால் வரும் துன்பங்களாகிய வெப்பம் தணியுமோ? அவர்கள் நீண்டநாட்கள் வாழ்வாரோ? நீ யார் நான் யார் என யார் (எவர்) அறிந்து, வேதம், உபநிடதம் என்னும் ஞானநூல்களை ஆராய்ந்து உணர்ந்து அனுபவித்துள்ளனரோ அவரே உன் பெருமையையும் உணர்வார். கதிர்காமக் கடம்பனே! கண்வளராய்,’ எனும் பாடலில், சொற்களைக் கூட்டும் அழகில் யாராரோ ஆராரோ எனத் தாலாட்டும் ஓசை நயம் போன்றே பலமுறை வந்து அழகு சேர்ப்பதனைக் காணலாம். மிகுந்த கருத்தாழம் நிறைந்த பாடல்.

நீரின் முளைத்த மாவீழ
நெருப்பின் முளைத்தின் னருடழைத்து
நினைவு பூத்துப் புலங்காய்த்து
நிறையப் பழுத்த கற்பகமே
நேருன் னடித்த ணிழலன்றி
நிற்பார் வெப்பந் தணிவாரோ!
நெடுநாள் வானோர் வாழ்வாரோ?
நீதா னாரோ? யாமாரோ?
வோரின் னெனச்சொல் வடித்துணர்வா
ருலவாப் பெருமை யாராரோ?
வுணர்வார் கூற்றங் கொள்ளுங்கா
லுற்றார் பெற்றா ராரரோ?
காரின் மலருங் கதிர்காமக்
கடம்பா! தாலோ தாலேலோ
கலைமான் பாடக் கண்வளராய்
கனியே! தாலோ தாலேலோ!

இத்தகைய சொல்லாழமும் கருத்தாழமும் நிறைந்த பாடல்களைக் கொண்ட பெருமை உடையது இந்நூல்.

                                        ~~~~~~~~~~~~~~~

2. இணுவை முருகன் பிள்ளைத்தமிழ்

அடுத்து நாம் காணப்போகும் பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களால் இயற்றப்பட்டது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் உள்ள வயல்கள் செழித்த கிராமமே இணுவில் ஆகும். ‘இணையிலி’ எனும் பெயரே மருவி இணுவில் ஆகியதென்பர். இது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கோவில். இங்குள்ள முருகப்பெருமானின் ‘கந்தசாமி கோவில்’ என அறியப்படும் திருத்தலமே இணுவை / இணுவில் முருகன் கோவிலாகும்.

இனி நூலின் நயங்களைப் பார்ப்போம். செங்கீரைப்பருவப் பாடலொன்று ஒரு அழகான கதையை விரிக்கின்றது. கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் என்று கூறிய ஒரு புலவர்முன்பு (பொய்யாமொழிப்புலவர்) முருகன் பாலைக்காட்டில் தோன்றி, “என் பெயர் முட்டை,” எனக்கூறி அவரிடம் ஒரு பாடல் பாடச்சொல்லி, அப்பாடலில் குற்றமும் கண்டு, அவருடைய அகந்தையையும் அழித்தான். “வீதிதோறும் வீணை, வேய்ங்குழல், யாழ் இவைகளுடன் அடியார் தம் குரலை இணைத்து உன் புகழையே பாடுகின்றனர். இணுவை அழகனே, செங்கீரை ஆடியருளுக,” என வேண்டும் பாடல்.

“கோழிபாடும் வாயாலே
குஞ்சுபாட மாட்டேன்”என்று
குமரனுன்றன் அடியவர்முன்
கொக்கரித்த சிவகவியைப்
பாழில்சுடும் வழியில்நல்ல
பண்புமுட்டை என்றுநின்று
பாடுவித்து முட்டையென்றே,
பாட்டில்வேறு குற்றங்கண்டு
………………………………
அம்மிணுவை உயிரழகா
ஆடியருள் செங்கீரை!

அருமையான பாடல் என ஒப்புக் கொள்கிறீர்களல்லவா?

ஒரு சப்பாணிப்பருவப் பாடல், நாமறியாத கதையொன்றைக் கூறுகின்றது. இணுவைக்கோவிலில் முருகனின் திருவுருவம் வார்க்கப்பட்ட செய்தியை அது கூறுகின்றது.

பதிகம், கோவை, கலிவெண்பா, பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ், பாமாலை எனப்படுகிற பலவும் அள்ள அள்ளக் குறையாதபடி முருகா, உன்மீது இயற்றப்பெற்று இலங்குகின்றன. பண்டொருநாள், உன் திருவுருவை வார்க்க முயன்றபோது அதில் ஆறுமுகம் சரியாக அமையவில்லை. பின்பு அந்தணரின் மனைவியின் தாலியினை உருக்கி அதில் சேர்த்து மீண்டும் வார்த்திட அம்மூர்த்தம் மங்கள எழிலுடன் அமைந்தது. உன்னருள் கிடைத்தால் வாழ்வில் அனைத்தும் இன்பமே. நீ சப்பாணி கொட்டுவாயாக,” என வேண்டும் பாடல்.

பதிகம், கோவை, கலிவெண்பா,
பள்ளு, புராணம், பிள்ளைத்தமிழ்,
பாமா லைபோற் பொன்கலங்கள்
பலவும் அள்ளிக் குறையாத
……………………………………….
அன்று வார்க்க வார்க்கஉரு
அமையா ஆறு முகம்ஐயர்
அகத்தாள் தாலி உருக்கியிட்டுப்
புதிதாய் மீண்டும் வார்த்திடவே
பொலிந்து மங்கள எழில்பூண்டு
பூத்தாய் இணுவைப் பதியினிலே!
…………………………………
எழிலா கொட்டுக சப்பாணி! ( சப்பாணிப்பருவம்)

இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டமைந்தது இப்பிள்ளைத்தமிழ்.

                                        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3. கந்தவன கல்யாண வேலவர் பிள்ளைத்தமிழ்

இந்த பிள்ளைத்தமிழ் நூல் சிலேடைக் கவிரத்தினம் க. கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டுள்ளது. பிள்ளைக்கவி வ. சிவராசசிங்கம் (இவரும் பல பிள்ளைத்தமிழ் நூல்களை யாத்தவர்) அவர்களால் உரை எழுதப்பட்டுள்ளது.

பொலிகண்டி கந்தவன கல்யாண வேலவர் ஆலயம் ஈழத்தில் வடமராட்சி பொலிகைப்பகுதியில் உள்ளது. திருக்கோணேஸ்வரத்தின் மாண்பையும் இத்தலம் பேசுகின்றது. இதிலிருந்து சில அருமையான பாடல்களைக் காண்போம். முதலில் வருகைப்பருவத்தினின்றும் ஒரு பாடல்.

ஐம்புலன்களால் பிள்ளையின்பத்தை நுகரும் அற்புதமான பாடல். வாசம்வீசும் தாமரை மலர் போன்ற சிறிய அடிகள், முகம், தாமரையிதழ் போன்ற விழி இவற்றைக் கண்ணாற் கண்டு மகிழவும், (கண் – பார்த்தல்)

கனிவாகப் பேசும் மழலைமொழியோடு தேன் சிந்தும் இசைபோன்ற கிண்கிணியின் அமுத ஓசையைச் செவியின்பத்தால் நுகரவும் வருவாயாக. (செவி – கேட்டல்)

உன் தோள்களில் திகழும் கடம்பமாலையினின்றும் துளிக்கும் தெள்ளிய தேனை நான் சிறிது சுவைத்துப் பருகுமாறு வருக. (நா – சுவைத்தல்)

இங்கு சிவந்த நிறம் கொண்ட செவ்வந்திப் பூவில் பிறக்கும் வாசத்தை நாம் முகர்ந்துவக்க வருவாயாக. (நாசி – நுகர்தல்)

வீரக்கழலணிந்த தாமரைப்பாதத்தை நான் வருட வருவாயாக. (கை – வருடல்; உணர்வு)

தென்றல் தவழும் கந்தவன முருகனே வருக! உமையம்மை தந்த தேவாமிர்தமே வருவாயாக.

கந்தங் கமழும் கமலமெனும்
கழலும் முகமும் விழியெழிலும்
கண்ணாற் பருக வருகமதுக்
கனியும் மழலை மொழியொடுதேன்
சிந்தும் இசைக்கிண் கிணியமுதைச்
செவியாற் பருக வருகபுயம்
திகழும் கடம்புத் தெளிதேனைச்
சிறிதே சுவைக்க வருகசெச்சை
…………………………………………….
………………………… கந்தவன
மதலாய்! வருக வருகவே! (வருகைப்பருவம்)

அடுத்து அம்புலிப்பருவத்துப் பாடலொன்று. முருகனுக்கும் சந்திரனுக்குமுள்ள ஒப்புமையைக் கூறி, சந்திரனை முருகனுடன் விளையாட அழைப்பது. சாமம் எனும் உபாயத்தின் பாற்பட்டது.

“சந்திரனே! நீ விண்ணில் ஆடி வருகிறாய்; முருகன் மயில்மீதேறி விண்ணில் ஊர்பவன். நீ பதினாறு கலைகளை உடையவன்; முருகனும் சகல கலா ஞான பண்டிதன். நீ மலைமேல் சஞ்சரிக்கிறாய்; முருகனும் குன்றுதோறாடுபவனாவான். கங்கை எனும் மெல்லியளாளை உன் கரத்தால் தீண்டுகிறாய்; இவனோ அக்கங்கையின் மடிமீதர்பவன். அவளால் அணைக்கப் படுபவன். நீ சிவபெருமானின் இடக்கண்ணானவன்; இவனோ அவரது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். குளிர்ந்த ஒளியை நீ பரப்புகிறாய்; இவனும்  தண்ணருள் செய்பவன். உலகினைக் காத்தலாலும், காதலரிடையே காமப்போர் நிகழ்த்தலாலும், உலகைக் காத்து, அசுரருடன் போர்தொடுக்கும் முருகனுக்கு இணையானவன் நீ; நீ நட்சத்திரங்களுக்கு அதிபதி; இவனும் நவவீரர்களுக்குத் தலைவன்; உலகத்தோர் உன்னை மதி என்பர். இவனும் எல்லோராலும் மதிக்கப்படும் பெருமையுடையவன். ஆதலால் உலகம் வணங்கும் கந்தவனப்பதி குமரனுடன் விளையாட வருக,” என அழைக்கும்  சிறப்பான பாடல்.

விண்ணாடி வருதலால் மலைமேல் நடத்தலால்
விரிகலா நிதியென்கையால்
மேதினியர் தொழுதலால் வேணிபடர் கங்கையென்
மெல்லியற் கரந்தழுவலால்
புண்ணியர்தம் கண்களில் ஒன்றினிற் றோன்றலால்
பூக்குதண் ணொளி பரவலால்
புவனம்பு ரத்தலாற் பூசலெழ வருதலாற்
பூரணம் பெறவ ருதலால்
……………………………………………….
அவனிதொழு கந்தபுரி தழையவரு மைந்தனுடன்
அம்புலீ யாடவாவே. (அம்புலிப்பருவம்)

சிறுபறைப் பருவத்தினின்றும் ஒரு பாடலைக் காண்போம்.

புலவர்களின் சங்கத்தமிழ் முழக்கம் கேட்டு முருகனின் உள்ளத்துணர்வுகள் பொங்கி ஒலிக்கின்றன. அதற்கேற்ப சிறுபறையையும் முழக்க வேண்டும் பாடல்.

“புகழ்வாய்ந்த சங்கப்புலவர் நக்கீரர், முருகன், மீனாட்சியம்மை ஆகியோரின் அருள்வெள்ளத்தில் மூழ்கித்திளைத்த குமரகுருபரர், தேவர்களும் போற்றும் சந்தக்கவிஞரான அருணகிரிநாதர், பகழிக்கூத்தர், தங்கக் கவிஞர்  பாம்பன் சுவாமிகள், உடுவைக்கவிஞன் சிவசம்புப்புலவர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆகிய கவிஞர்களின் தமிழ் முழக்கம் பெரிதாக ஒலிக்கக்கேட்டு உனது உள்ளத்து உணர்வுகளும் பொங்கி ஒலித்ததுபோல, உனது சிறுபறையை முழக்குக குமரா,” எனும் பாடல்.

விந்தைப் புலவன் சங்கத் தமிழோன்
வியத்தகு கீரனருள்
மேவும் புலவன் குருபர முனிவன்
விண்ணவர் பரவவரும்
சந்தப் புலவன் அருணைப் பதியான்
தாழ்ப கழிக்கவிஞன்
தங்கக் கவிஞன் பாம்பற் பெயரோன்
…………………………
முனிவரர் பணியும் பொலிகையின் மணியே!
முழக்குக சிறுபறையே. ( சிறுபறைப்பருவம்)

இத்தகைய சுவையான பாடல்களைக் கொண்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

(வளரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *