செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(447)

காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

– திருக்குறள் – 485 (காலமறிதல்)

புதுக் கவிதையில்…

தவறாமல் தரணி முழுவதையும்
தன்வயப்படுத்த எண்ணும் மன்னர்,
தன்வலிமை மிகுந்திருந்தாலும்
அதனைக் கருதாமல்
அதற்குரிய காலத்தை எதிர்பார்த்தே
அதற்காகக் காத்திருப்பார்…!

குறும்பாவில்…

அகிலமெலாம் அடையக் கருதும்
அரசர் தம்வலிமையைக் கருதாமல் செயல்படத்
தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பார்…!

மரபுக் கவிதையில்…

தரணி யெல்லாம் ஒன்றாகத்
தனது சொந்த ஆட்சியிலே
வரவே யெண்ணும் மாமன்னர்
வலிமை தமக்கே உள்ளவற்றின்
தரத்தைக் கருத்தில் கொள்ளாமல்
தானாய் வெற்றி பெற்றிடவே
வரட்டும் தக்க காலமென
வாளா யிருப்பார் காத்திருந்தே…!

லிமரைக்கூ…

உலகெலாம் கொள்ள எண்ணம்
கொண்ட வேந்தரும் வலிமையிருப்பினும் உரிய
காலம்வரக் காத்திருப்பது திண்ணம்…!

கிராமிய பாணியில்…

காத்திருக்கணும் காத்திருக்கணும்
காலம்வரக் காத்திருக்கணும்,
காரியம் செய்யிறதுக்குச் சரியான
காலம்வரக் காத்திருக்கணும்..

ஒலகம் பூரா
ஒண்ணாப் புடிக்க நெனைக்கிற
ராசாவும் பெரிய
படபெலமெல்லாம் இருந்தாலும்
அவசரப்படாம
அதுக்கு சரியான
காலம் வரட்டுமுண்ணு
காத்துக்கிட்டு இருப்பாரே..

அதால
காத்திருக்கணும் காத்திருக்கணும்
காலம்வரக் காத்திருக்கணும்,
காரியம் செய்யிறதுக்குச் சரியான
காலம்வரக் காத்திருக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *