குறளின் கதிர்களாய்…(450)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(450)
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்.
-திருக்குறள் – 573 (கண்ணோட்டம்)
புதுக் கவிதையில்…
இசையால்
எவ்வித பயனுமில்லை
அது
இணையாவிடில் பாடலோடு..
அதுபோல்
கண்ணோட்டம் இல்லாத
கண்ணினாலும்
பயனேதுமில்லை…!
குறும்பாவில்…
பாடலோடு பொருந்தாத பண்ணால்
பயனேதுமில்லை, அதுபோலத்தான் எவ்வித பயனுமில்லை
கண்ணோட்டம் இல்லாத கண்ணினாலே…!
மரபுக் கவிதையில்…
பாடும் நல்ல பாடலோடு
பண்ணும் பொருந்த வில்லையெனில்
நாடும் பயனும் வருவதில்லை
நன்மை யெதுவும் கிடைப்பதில்லை,
ஓடும் விழிகள் கொண்டுள்ள
ஒளிரும் கண்க ளதனில்தான்
கூடு மிரக்க மிலாதவைதான்
கொடுக்கும் பயனாய் எதுமிலையே…!
லிமரைக்கூ…
பாடலுடன் பொருந்தணும் பண்ணே,
பயனிலை தவறிடின், கண்ணோட்டம் இலையெனில்
பயனெதும் தருவதில்லை கண்ணே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
எரக்கம் வேணும்,
காணும் கண்ணுல
எரக்கம் வேணும்..
பாட்டோட ராகம்
பொருந்துனாத்தான்
பாட்டு அது,
இல்லண்ணா
அதுல ஒரு பயனுமில்ல..
அதுபோலத்தான்
எரக்கம் இல்லாத கண்ணால
எந்தப் பயனுமே இல்ல..
அதால
வேணும் வேணும்
எரக்கம் வேணும்,
காணும் கண்ணுல
எரக்கம் வேணும்…!