அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும் . . . (2)

0

சக்தி சக்திதாசன்

வாழ்வின் தேடல்கள் பலவகைப்படும். அத்தேடல்களின் வழி நாம் எமது வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கிறோம். சிலருக்கு அத்தேடல்களின் வழியான வாழ்க்கை வெற்றியாக அமைகிறது சிலருக்கு அதுவே வேதனைகளின் காரணமாகிறது.

ஆன்மீகம் என்பது மதங்களைக் கடந்த ஒரு மார்க்கம் என்பதைப் புரிந்து கொள்வதர்கு முன்னால் வாழ்வில் பல மைல்களைக் கடந்து போய்விடுறோம். சிலருக்கு அது புரியப்படாமலே போய்விடுகிறது.

இது எல்லாவற்றையும் கடந்தவர் நமது கவியரசர் என்றால் மிகையாகாது. ஆன்மீகத்தை அதன் உண்மை வடிவிலேயே கண்டு கொண்டவர் என்பதுவே உண்மையாகிறது.

உள்ளத்தின் உணர்வுகளைப் பேசினார். அதை சத்தியத்தின் வாக்காகவே கூறினார். வாழ்வின் யதார்த்தங்களுக்கு மதம் எனும் சாயத்தைப் பூசிப்பார்க்க முனைந்து அதன் மூலம் மதங்களைக் கடந்த ஆன்மீகத்தின் வாசற் கதவைத் தட்டிப்பார்த்தார்.

அவரது பாடல்களில் சோகம் இருக்கும், காதல் இருக்கும், ஆனந்தம் இருக்கும், பரவசம் இருக்கும், பக்தி இருக்கும் ஆனால் அனைத்தினுள்ளும் கொஞ்சம் மூழ்கிப் பார்த்தால் ஏதோ ஒரு ஓரத்தில் ஆன்மீகம் கலந்திருக்கும்.

அவரது ஆன்மீக எழுத்துகளில் இழைந்தோடும் எளிமை மனித வாழ்க்கையின் அடிப்படையை எம்மோடு பேசும்.

அவசரமான வாழ்க்கை வாழ்கிறோம். அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் ஒரு அவசர கதியிலேயே நடக்கிறது. எதையும் நிதானமாக, ஆழமாக சுவைத்துப் பார்த்து ரசிக்க முடியாதவாறு வாழ்க்கையின் வேகம் எம்மை இழுத்துச் செல்கிறது.

இந்த நிலையில்தான் இன்றைய வாழ்வில் ஒரு சமநிலையைப் பேணுவதற்காக எமது தாயக நாடுகளில் மட்டுமல்லாது மேலை நாடுகளிலும் யோகா, தியானம் போன்ற ஆன்மீக வழிகாட்டுதல்கள் பிரசித்தி பெற்று வருகின்றன.

அறுபதின் நடுப்பகுதிகளைக் கடந்த ஒரு நிலையில் தான் தியானம் எனும் ஒரு வழியின் மூலம் ஆன்மீகத்தின் உண்மைநிலையை அறியக்கூடிய சூழல் எனக்கு உருவாகியது.

அத்தகைய ஒரு சூழலில் அத்தியான அனுபவத்தினுள் நுழைந்த எனக்கு எனது எழுத்துகளின் மானசீகக் குருவான கவியரசர் கண்ணதாசனின் பாடலின் வரிகள் ஏதோ எனக்காகவே ஒலிப்பது போன்று தென்பட்டது. அவரது ஆன்மீக அறிவியலுடன் கூடிய வரிகளைக் கொண்௶ட பாடலது.

அது எந்தப் பாடல் என்று கேட்கிறீர்களா?

அன்னை வேளாங்கண்ணி எனும் திரைப்படத்தில் நவரசத் திலகம் முத்துராமன் அவர்களுக்காக காந்தர்வக் குரலோன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலித்த பாடல் அது.

ஆனந்தமானது , அற்புதமானது – நான் அந்த மருந்தைக் கண்டு கொண்டேன் – அந்த

ஞாலத்திலே என்னை அறிந்து கொண்டேன்

நிதானத்திலே உண்மை புரிந்து கொண்டேன்

ஆகா ! என்னே அருமையான வரிகள் ஒரு மதங்கடந்த ஆன்மீக கோணத்திலே பார்த்தால் எமது உள்ளத்துக்கு எது தேவையோ , ஒரு அமைதியான வாழ்க்கைக்கு எது தேவையோ , எமது தேடல்கலின் விடையாக எது தேவையோ அதைக் கன்டு கொள்ளும் வழிக்கு சைகை காட்டுவது போல கவியரசர் எமக்கு அற்புத வரிகளைத் தந்திருக்கிறார்.

தியானம் எனும் ஒரு சாதனத்தை மதங்கடந்த ஆன்மீகத்தை நான் முதற்தடவையாக உளச்சுத்தியோடு கையாண்டபோது அதன் பயனாக என் மனம் கண்ட உணர்வுகளை அப்படியே வரிகளாக்கித் தந்தது போன்ற ஒரு எண்ணமே என்னுள்ளத்தில் இவ்வரிகள் ஏற்படுத்திய தாக்கம்.

இத்தனை சிறிய விதையிலிருந்து
எத்தனை பெரிய மரம் வந்தது
அத்தனை மரமும் இத்தனை காலமும்
அதற்குள் எப்படி குடி கொண்டது

மிகவும் எளிமையான கேள்விகள் . இயற்கையின் அதிசயம் . வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் எத்தனையோ பெரிய மரங்களைக் கடந்து செல்கிறோம். அம்மரத்தின் கனி பழுத்து விதையாகி அதன்கீழ் விழுந்து பரவிக் கிடப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் எத்தனை பேரின் உள்ளத்தில் இத்தகைய கேள்விகளை இயற்கையை நோக்கி வீசக்கூடியதாக இருந்தது . நிச்சயமாக எனக்கு இருக்கவில்லை . இக்கேள்விகளில் ஏதாவது மதச்சாயம் தென்படுகிறதா ?

இதுதான் எமது கவியரசரின் அறிவியல் ஆன்மீகத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை .

பத்தாம் மாதம் பிறப்பது என்பதை
பரம்பொருள் யாருக்கும் எழுதி வைத்தான்
இத்தனைநாளில் இறப்பது என்பதை
இரகசியமாக ஏன் வைத்தான் ?

நாமனைவரும் எமது அன்னை வயிற்றிலிருந்து பத்து மாதங்களில் இவ்வுலகில் தவழுவோம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆனால் எப்போ எமது ஆன்மா எமது உடல் எனும் சட்டையை அகற்றி விட்டு வெளியேறப் போகிறது என்பது மட்டும் எவருக்குமே தெரியாத ஒரு விடயமாக இருக்கிறது. இதுகூட மதங்களைக் கடந்த ஒரு உண்மைதானே ! இதை எத்தனை அழகாக , எளிமை பூத்த வரிகளினூடாக கவியரசர் யாத்துத் தந்திருக்கிறார் .

உடலெனும் கூடு வீழ்வதன் முன்னே
அவனுடன் கூடுதல் ஆனந்தம்
உயிரெனும் காற்று ஓடிடும் முன்னே
தத்துவக் காற்றே பேரின்பம்

ஆகா ! தத்துவங்களை இத்தனை எளிமையாக பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வல்லமை படைத்தவர் என் எழுத்துக்களின் மானசீகக்குரு கவியரசர் என்பதற்கு மேற்கண்ட வரிகளை விட வேறேதும் சான்றுகள் ௹தேவையோ ?

உயிரெனும் காற்று எமது இறுதிச் சுவாசத்தின் வழி ஆன்மாவுக்கு வெளியேறும் வாசலைக் காட்டுகிறது. அவ்வான்மா அகன்றதும் உடலென்ன வெறும் கூடுதானே !

இங்கென்ன கவியரசர் கூற வருகிறார் ?

அந்நிகழ்வு நடப்பதன் முன்னரே ” அவனுடன் கூடுதல் ஆனந்தம் ” என்கிறார். இங்கேதான் கேள்வி எழுகிறது யார் அந்த ” அவன் ” ?

சிவனா ? அல்லாவா ? இயேசுவா ? அனைவர்க்கும் பொதுவான ஆன்மாவே அந்த அவன் என்கிறார் எனலாம் அல்லவா ?

அப்படியானால் அந்த அவனுடன் ஆன்மாவுடன் உயிர் பிரிவதன் முன்னால் கூடுவது எப்படி ?

ஆம் ஆன்மாவுடன் பேசும் மொழி, ஆன்மாவுடன் இணையும் வழி தியானம் ஒன்றே அதற்கு மதமில்லை, மொழியில்லை, இனமில்லை. அனைவருக்கும் பொதுவானது. அனைவராலும் கைக்கொள்ளப்படக்கூடியது. இப்போது மீண்டும் ஒருமுறை கூறிப்பாருங்கள்,

ஆனந்தமானது , அற்புதமானது நானந்த மருந்தைக் கண்டு கொண்டேன்.

எத்தனை அழகாக ஆன்மீக அறியலுடன் எம்மை இணைத்திடும் வரிகளவை.

நம்பிக்கையுடனே இறைவனைத் தேடு
நாளைய பொழுதே அவன் வருவான்
நன்மை, தீமையில் அவனை நாடு
நன்மை மட்டும் அவன் தருவான்

ஆமாம் நாம் எதைச் செய்தாலும் அதை நம்பிக்கையுடன் தான் செய்ய வேன்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்தச் செயலும் வெற்றியளிக்காது. இது யாவரும் அறிந்த சத்திய வார்த்தைகள்.

இறைவன் எமக்குள்ளேதான் இருக்கிறான். அப்படியானல் எங்கே அவனைத் தேடு என்கிறார் எமது கவியரசர்?

ஓ ! எமக்குள்ளே தேடச் செல்கிறாரோ இக்கவிச்சக்கரவர்த்தி?

உன்னையறிந்தால் , நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றுன் சொன்ன வித்தகரல்லவா இவர்.

எமக்குள்ளே தேடும்போது அங்கே நாம் யாரைக் காண்கிறோம் எம்மது ஆன்மாவின் மூலத்தை அறிகிறோம். அப்போது அங்கே உறைந்திருக்கும் இறைவனை அடையாளம் காண்கிறோம். அதற்கான பாதைதானே தியானம்?

எமக்குள்ளே உறைந்திருக்கும் அவ்விறைவன் மதச்சாயம் கொண்டவரா? மதங்களைக் கடந்தவராயிற்றே, அனைவர்க்கும் பொதுவான இறையல்லவா அவன்?

அழிந்து போகும் உடலல்ல நாம், சிதைந்து போகும் மனமுமல்ல நாம். நிலையான ஆன்மாவே நாம். அந்த ஆன்ம நிலையில் நாமனைவரும் ஒன்றே ! ஒரு பரமத்தின் துகள்களே!

இங்கேதான் எமது கவியரசரின் அறிவியலுடன் கூடிய ஆன்மீகம் துலங்குகிறது. அவருடைய ஒவ்வொரு வரிகளுக்குள்ளும் அவர் புதைத்து வைத்திருக்கும் ஆன்மீக அதிசயங்கள் அளப்பரியன .

இது என்னுடைய பார்வையின் கோணமே! இதே வரிகள் வேறோருவர் பார்வையில் வித்தியாசமான ஆன்மீக விளக்க்லங்களை அளிக்கலாம். இதுதான் கவியரசர் படைப்புகளின் மகுடமாகிறது. அதனால்தான் அவரது பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் இன்றுவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

என் அன்பு உள்ளங்களே! நான் ஒரு ஆன்மீக அறிஞல்லன். ஒரு சாதாரண பாமரனே! ஆன்மிக அறிவியல் எனும் ஆழியின் கரையோரத்தில் கால்களை நனைக்கும் ஒரு வழிப்போக்கனே நான். எனது எழுத்துக்களின் மானசீகக்குருவான கவியரசரின் படைப்புகளில் ஒளிந்திருக்கும் ஆன்மீக அறிவியலை சுவைக்கும் நோக்கத்தில் என்னோடு உங்களையும் இணைத்துக் கொள்கிறேன்.

இப்போது மீண்டும் அந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்களேன்.

மீண்டும் வருவேன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *