வானளவு உயர வாழ் வளித்தார் அப்பா!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
ஈன்றெடுத்தாள் அம்மா எனைச் சுமந்தார் அப்பா
சான்றோனாய் என்னைச் சபை வைத்தார் அப்பா
நான் தடுக்கும் வேளை தாங்கிடுவார் நாளும்
வானளவு உயர வாழ்வளித்தார் அப்பா
ஊனுருக எனக்குப் பால் கொடுத்தாள் அம்மா
உயரோங்கி நிற்க உழைப்பீந்தார் அப்பா
தனக்கெனவே எதுவும் சேர்க்காத அப்பா
எனக்கெனவே தேடிக் குவித்திட்டார் வாழ்வில்
விருப்பென்று எதையும் வெளியிடார் அப்பா
பொறுப்புடனே யாவும் ஆற்றிடுவார் அப்பா
என் உயர்வு ஒன்றே தனக்கான தென்பார்
கண்மணியாய்க் கருத்தில் இருத்தினார் அப்பா
தோளேற்றி என்னை, சுகங்காண்பார் அப்பா
தோழனாய் இப்போது ஆகிவிட்டார் எனக்கு
வாழ்வினிலே எனக்கு வரம் ஆனார் அப்பா
வணங்குகின்ற தெய்வமாய்த் தெரிகிறார் அப்பா
ஊண் உறக்கம் மறந்து உழைப்பாரே அப்பா
உலகமே நான் எனவே நினைப்பாரே அப்பா
தோள் கொடுத்து என்னைச் சுமந்தாரே அப்பா
சுகம் அனைத்தும் கொடுத்து மகிழ்ந்தாரே அப்பா
நாவினிக்கப் பேசு எனவுரைப்பார் அப்பா
நலஞ் சிறக்கும் நட்பை நாடென்பார் அப்பா
கோபமெனும் குணத்தை மறந்துவிடு என்பார்
குணம் என்னும் குன்றேறி நின்றிடுவாய் என்பார்
குறை காணின் களைவார் நிறைவானால் மகிழ்வார்
பொறை நிறைக வென்றே மனமெண்ணி நிற்பார்
நரை காணு முன்னே பலதேடு என்பார்
அரை குறையாய்க் கருமம் ஆற்றாதே என்பார்
ஊற்றுப் போல் நில்லு உறங்காது வெல்லு
காற்றைப் போல் இயங்கு கண்ணியத்தை ஏந்து
நாற்றாக விளங்கு நல் விளைச்சல் நல்கு
என்றப்பா நாளும் எடுத்துரைத்து நிற்பார்
இடர் வரா எனக்கு அணையாவார் அப்பா
படர் துன்பம் அனைத்தும் துடைத்திடுவார் அப்பா
விட முடைய அனைத்தும் வெறுத்திடுவார் அப்பா
நட முன்னே என்று வழியாவார் அப்பா
இலக்கியம் ஆவார் இலக்கணம் ஆவார் எங்களப்பா
குலைத்திடு தலைக்கனம் கொண்டிட மாட்டார் எங்களப்பா
நிலைத்திட நினைப்பார் நிம்மதி நிறைப்பார் நெஞ்சிலப்பா
நிமிர்ந்துமே நிற்பார் நீள்நிலம் வியக்க எங்களப்பா
அப்பாவை எண்ண எண்ண அளவில்லா ஆனந்தம்
அப்பாவின் அருகிருந்தால் அனைத்தும் என் வசமாகும்
அப்பா என் வாழ்வினுக்கு அருமருந்தாய் ஆகிவிட்டார்
அப்பாவை ஆண்டவனாய் அனு தினமும் போற்றுகிறேன்