குறளின் கதிர்களாய்…(467)
செண்பக ஜெகதீசன்
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
-திருக்குறள் 980 (பெருமை)
புதுக் கவிதையில்…
மற்றவர் குறைகளை
மறைத்தே அவர்தம்
பெருமைகளைப்
பெரிதாய்ப் பேசுவர்
பெருமைப் பண்புடையோர்,
சிறுமைப் பண்பு கொண்டோர்
பிறர் பெருமையை
மறைத்துக்
குறைகளைப் பெரிதாய்க்
கூறுவர்…!
குறும்பாவில்…
பிறர் குறைகளை மறைத்துப்
பெருமையைப் பேசுவது பெருமைப் பண்பு,
நிறைமறைத்துக் குறைசொல்வது சிறுமை…!
மரபுக் கவிதையில்…
மற்றவர் குறைகளை மறைத்து வைத்தே
மாசிலாப் பெருமையைப் பேசுவது
சற்றுமே குறைவிலாப் பெருமையாளர்
சார்ந்திடும் பெருமையின் பண்பதுவே,
முற்றிலும் பண்பிலாச் சிறுமையாளர்
முழுவதும் பெருமையை மறைத்துவிட்டே
குற்றமே பார்த்தவர் கொண்டுள்ள
குறைகளை மட்டுமே பேசுவரே…!
லிமரைக்கூ…
மறைத்து மற்றவர் குறைகளை
பெருமையைப் பேசுவர் பெருமையாளர், குறைபேசும்
சிறுமையாளர் மறைத்திடுவர் நிறைகளை…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும்
பெரும வேணும்,
ஒலக வாழ்க்கயில
பெரும வேணும்..
அடுத்தவன் கொறய
மறச்சி அவனோட
பெருமய மட்டும்
பெருசாப் பேசுறதுதான்
பெருமக் கொணம்,
கொறய மட்டும்
காட்டிப் பேசுறது
சிறுமக் கொணம்..
அதால
வேணும் வேணும்
பெரும வேணும்,
ஒலக வாழ்க்கயில
பெரும வேணும்…!