மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன், உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

அம்மு சிவப்புநிற மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கும்போது வேனலின் முதல் மழை பெய்யத் தொடங்கியது. வரம்பிற்கு அப்புறம் வழியாக கால்நடை வியாபாரியான சங்கரன்  பசுவொன்றை  ஓட்டிக்கொண்டு வந்தான்.

”அம்மு மஞ்சாடியா  பொறுக்குற? அவன் சும்மா விசாரித்தான்.

அவள் கையில் உள்ள செரட்டையை நீட்டிக் காண்பித்தாள்.

“ இது இரண்டாவது. கொஞ்சம் கூட போட்டா இதுவும் நிறைஞ்சுரும்.” அவன் நடந்து புளிய மரத்துக்கு அடியில் போனான்

”அப்பா இல்லையா? வீட்ல அவன் கேட்டான்.”

“ இல்ல” அம்மு சொன்னா

“எங்க போனாரு?”

”பாலத்துக்கு பக்கத்துல ஒருத்தரு லாரி இடிச்சு செத்தாரில்ல. அது அப்பாவுக்கு உறவுமொறல ஒரு மாமா ஆகுது. செத்துப்போன செய்தி வந்ததும் அப்பா கிளம்பிட்டாரு.”

”அம்மாவோ”

“அம்மாவும் போய் இருக்காங்க”

பெய்து கொண்டிருந்த மழை அதற்குள் சற்று அதிகமானது.

அம்மு ரெண்டு செரட்டைகளையும் எடுத்துக்கொண்டு வீட்டைபார்த்து வேகமாக நடந்தா. வீட்டின் முற்றத்தில் தம்பியை உட்கார வைத்துவிட்டுதான் அவள் மஞ்சாடிக்கொட்டைகளைப் பொறுக்க சென்றிருந்தாள். அவன் ஒரு மரத்தாலான பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

”நமக்கு இனி மஞ்சாடி வெச்சு விளையாடலாம். நெறைய மஞ்சாடி கிடைச்சிருக்கு” அம்மு அவங்கிட்ட சொன்னா.

ஒரு சாக்பீஸ் எடுத்துத் தரையில கட்டம் போட்டா. மண்ணில குழிபண்ணி ஒவ்வொரு குழியிலும் மஞ்சாடி போட்டு விளையாடுவது தான் அவளுக்குப் பிடிக்கும். ஆனா அது ரெண்டரை வயசு மட்டுமே ஆன அவனோடு சேர்ந்து விளையாடுற விளையாட்டல்ல. அதுக்கு ஒத்த வயசுள்ள யாராவது வேணும். மழை பெய்றதுனால இனி யாரும் வர மாட்டாங்க.

”நான் தொடங்கறேன்.” அம்மு சொன்னாள்.

தம்பியோட விளையாட்டும் சேர்த்து  அவளே விளையாட வேண்டி இருந்தது. அவனுக்கு விளையாட்டோட விதிமுறை ஒண்ணும் தெரியாதது மட்டுமல்ல சில நேரம் அவனே தெரியாமல் மஞ்சாடி கொட்டைகளைத் தட்டி விடவும் செய்வான்.

மண்ணிலிருந்து ஈசல்கள் தூரம் தூரமாக பறந்தன. சங்கரன்குட்டி ஈசல்களுக்கிடையில்  வீட்டைப் பார்த்து நடந்தான்.

”அம்மு விளையாடுறியா?” அவன் கேட்டான்.

அவள் முகம் உயர்த்தினாள்

அவன் தனியாகத்தான் இருந்தான்.

”பசு எங்கே?”

”அத மேய விட்டுட்டேன். கோயில்கிட்ட நெறைய புல்லு வளர்ந்திருக்கறத பார்த்தப்போ அதுக்கு ஒரு சந்தோஷம் அப்படின்னா அங்கேயே கெடக்கட்டும்னு  வந்துட்டேன்.”

அவன் வெளியில் திண்ணையில் உட்கார்ந்தான். இடைவழி சூன்யமாயிருந்தது. ஈசல்கள் பறந்துகொண்டிருந்தன.

அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு பீடியெடுத்தான்.

”கொஞ்சம் தீ வேணுமே அம்மு.”

“அடுப்பில தீ எப்பவோ அணஞ்சாச்சு”

”தீப்பெட்டி இல்லையா?.”

“சங்கரன் குட்டி அண்ணாக்கு பீடி குடிக்காம இருக்கக் கூடாதா?”

“என்னோட செல்லம் இல்ல. போய் தீப்பெட்டி எடுத்துட்டு வா. மழை தூறும்போ பீடுகுடிக்க  நல்ல சுகமா இருக்கும்.”

”அடுக்களைல தீப்பெட்டி ஒருவேள அப்பா எடுத்துட்டு போயிருப்பாரு.”

” நீ வீட்டுக்குள்ள போய் பாருமா. எங்காவது இல்லாம இருக்காது.”

”இந்த சங்கரன் குட்டி அண்ணன வெச்சிட்டு முடியல.”

அம்மு மஞ்சாடிக்கொட்டைகள கீழே வைத்துவிட்டு எழுந்தாள். சங்கரன்குட்டி, அவளை கண்களால் ஈர்ப்புடன் மேலிருந்து கீழவர அளந்தான். அத கவனிக்காம அவள் உள்ளே போனா.

தீப்பெட்டி எங்க வச்சிருக்காங்கன்னு அவளுக்கு சரியா தெரியாது. அடுப்பு திட்டிலும், கரிப்புகைப்படிந்த ஜன்னலிலும் தீப்பெட்டியை காணாமல் அவள் சுவர் அறைகளில் தேடினாள். அதுக்குள்ள நிறைய லொட்டு லொசுக்கு சாமான்கள்.  மஞ்சத்தூளினுடையவும், மிளகாய்த்தூளினுடையவும், மஞ்சளினுடையவும்  நெடி. நாலஞ்சு சின்ன கரப்பான் வகைகள் அதில ஒண்ணு சின்ன சீன பரணிக்கு பக்கத்து வழியாக நகர்ந்தது. வேறொன்று எண்ணெய் பாத்திரத்தில் பற்றி பிடித்திருந்தது.

சங்கரன்குட்டி இடைவழியில் மீண்டும் பார்வையை செலுத்தி திண்ணையில் மேலே ஏறி வீட்டிற்குள் நுழையத் தொடங்கும் போது எங்கிருந்து என்று அறியாமல் ஒரு நாய் அங்கே பாய்ந்து வந்தது. அது அவனுக்கு நேராக நின்று குரைத்தது. பௌ….பௌ….. வாலை உயர்த்திக்கொண்டு குரைத்துக் கொண்டே இருந்தது.

”இது எங்கிருந்து வந்துச்சு. நாசமாப் போன நாய். சங்கரங்குட்டி அத பார்த்து பல்லைக் கடித்தான். அப்படி ஒரு நாயை அம்முவோட வீட்டிலயோ அக்கம் பக்கத்திலயோ இதுக்கு முன்னாடி  பார்த்ததா நெனைவேயில்ல.

”போடா இங்கிருந்து……… நல்ல காரியத்துக்குப் போகும்போது குறுக்கே வந்திட்டு.” அவன் கதவுக்கருகில் நெருங்கினான்.

நாய் கேட்கவில்லை. அது ஒரு குதி குதித்தது. அவன் திரும்பிப்பார்த்தான்.

”போய் பீய தின்னுடா.” அவன் நாய்கிட்ட எரிந்து விழுந்தான்.

இரண்டு அடி கூட எடுத்து வெச்சாப் போதும் வாசப்படி தாண்டி உள்ள இருந்து  கதவை இழுத்து அடைத்து தாழ்போட்டறலாம்னு நெனச்சான். ஆனா அது நடக்கல.  அதுக்குள்ள நாய் முன்னுக்கு குதித்து அவனுடைய காலில் கடித்தது. அவன் கதறினான்.  வலி அந்த அளவுக்கு சகிக்க முடியாததாக இருந்தது.

அம்மு தீப்பெட்டி எடுத்துகிட்டு முற்றத்திற்கு வரும்போது சங்கரங்குட்டி நொண்டி நொண்டி இடைவழியை லட்சியமிட்டு வேக வேகமாக நடந்து நீங்கினான்.

“சங்கரங்குட்டி அண்ணா……. தீப்பெட்டி………” அவள் சத்தமாகக் கத்தினாள்.

அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அம்மு ஆச்சரியத்தோடு நின்றாள். வாசலில் உக்ரபாவத்தில் நிக்கற கருப்பு நிற நாயை இதற்கு முன் பார்த்ததே இல்லை. அதுக்கு பயப்படுத்தற அளவுக்கு உருவமொண்ணும் பெரிசா இல்ல.  ஒரு சாதாரண நாய். ஆனா அதோட முகம் அசாதாரணமான பயமுடையதாக இருந்தது.

” நீ எங்கிருந்து வர?” அம்மு பயத்தோடு கேட்டா.

நாய் இப்போது அதன் உக்ரபாவம் கைவிட்டு  வாலை தாழ்த்தி செல்லமாக ஒரு சத்தமிட்டது.  வாலாட்டிக்கொண்டு அம்முவை உரசிக்கொண்டு அன்பை வெளிப்படுத்தும் விதம் ஒரு சத்தம் எழுப்பிக்கொண்டு   மெதுவாக முற்றத்தில் இறங்கியது.

இடைவழியாக சங்கரங்குட்டி போன வழியைப் பார்த்து  சத்தமாகக் குரைத்தது.

பிறகு அது எங்கோ போய்  மறைந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.