மலபாரில் சிக்கார் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.
யாரைக் கொல்லலாமென்று ஆலோசித்து இருட்டைப்பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு துர்மந்திரவாதியின் ஜல பாத்திரத்தில் தெளிவது போல அவர்களுக்கு ஒரு முகம் தெளிவானது. கல்லொடைக்கும் சாத்துவின் இருளான முகமே அது. எப்போதும் போல ஒரு பாட்டில் கள்ளு குடித்துவிட்டு கள்ளின் நிறமுடைய ஸ்வட்டரைக் கையிலேந்திக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் சாத்துவுக்காக காத்துக்கொண்டு அவர்கள் பதுங்கி நின்றார்கள். ஆனால் சற்று நேரமாகியும் சாத்து அது வழியாக வரவில்லை. அவர்கள் அசௌகர்யத்துடன் காணப்பட்டனர்.
‘சாத்தண்ணன் முன்னாடியே போயிருப்பாரு’ பவித்ரன் சொன்னான்.
முதல் நாள் அவரு 7:00 மணிக்குத்தான் போனாரு என்பதை சிவதாசன் நினைவூட்டினான்.
‘இன்னக்கி ஒரு வேள வேலைக்குப் போய் இருக்க மாட்டாரு. நமக்கு வீட்டுக்குப் போலாம் நந்தன் கத்தியால கழுத்தை சொரிவதற்கிடையில் சொன்னான்.
‘வேலைக்குப் போலன்னாலும் சாத்துஅண்ணன் சாயங்காலம் கள்ளுக்கடைக்குப் போகாம இருக்க மாட்டாரு.’ சுதாகரன் கூறினார்.
“ஆமா. அது சரிதான் சாத்துஅண்ணனுக்கு தினமும் கள்ளு குடிக்காம இருக்க முடியாது’. கர்ணன் சிரித்தான்.
இருந்தாலும் நாம வீட்டுக்குப் போய் கேட்கலாம். அங்கேயா இருந்தா சீக்கிரமா காரியம் சாதகமாகும். நந்தன் சொன்னான்.
அதுக்கும் யாரும் ஒத்து வரல அவங்க கல்லொடைப்பவரான சாத்துவோட வீட்டை இலட்சியமாக்கி நடந்தனர். கார்த்திகை மாத இரவு குளிரத் தொடங்கி இருந்தது.
கல்லொடைப்பவரான சாத்துவின் மூத்தமகள், வனஜாவின் அஞ்சு வயசான மகனுக்கு வெளியில் சின்னதா ஒரு சீமெண்ணெய் விளக்கிற்குப் பக்கத்தில் உட்கார்ந்து மாதுவம்மா கதை சொல்லிக் கொண்டிருந்தாள். மாதுவம்மா சாத்துவோட அம்மா. வயசு எண்பதை நெருங்கி இருந்தது.
‘சாத்து அண்ணா இல்லயா?” வெளியில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது.
மாதுவம்மா கதையை நிறுத்தினாள்.
‘யாரது?” மாதுவம்மா கேட்டாள்.
இருட்டுல வெளில யாருன்னு மாதுவம்மாவுக்குத் தெரியல.
சாத்துண்ணாகிட்ட ஒரு வேலை சொல்லணும். தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் பவித்ரன் கூறினான்.
‘சாத்து ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா. மாதவிக்கு உடம்பு சரியில்ல.’ ஆஸ்பத்திரியில இன்னைக்கு அட்மிட் ஆக்கியிருக்கு. ஆப்ரேஷன் தேவப்படும்னு சொல்லி இருக்காங்க.’ மாதுவம்மா கூறினாள்.
பவித்ரன் திரும்பினான்
‘யாரு வந்து கேட்டாங்கனு சொல்லணும்? மாதுவம்மா சத்தமாகக் கேட்டாள்.
நான் பார்த்துக்கிறேன். பவித்ரன் இருள் வழியாக நடந்து அகன்றான்.
மாதுவம்மா தான் கூறிக்கொண்டிருந்த கதைக்குத்திரும்பினாள். பவித்ரன் மற்றவர்களிடத்துச் சென்றான். சாத்து சற்று தூரமாக உள்ள ஆஸ்பத்திரியில் தனது மனைவி மாதவி காபியில் ரொட்டித் துண்டு முக்கி உண்பதை பார்த்துக்கொண்டு பக்கத்தில் இருந்தான்.
‘இனி இப்போ என்ன செய்யறது.’ கர்ணன் இருட்டில் நடக்கும் போது தனக்குத்தானே பேசினான்.
‘சாத்துஅண்ணாவோட மகளோட மகனிருக்கானே அங்கே…….. அங்கே போய் அவனைக் கொன்றாலோ?’ சுதாகரன் கேட்டான்.
‘அவ சின்னப் பையனாச்சே’ நந்தன் சொன்னான்.
அவனோட அப்பாவ கிடைச்சாலும் போதும். சிவதாசன் சொன்னான்.
சனிக்கிழமை ராத்திரில கொஞ்சம் இங்க வாங்க. கர்ணன் சொன்னான்.
யாரை கொல்லலாம்னு அவங்க மறுபடியும் வட்டமாக உட்கார்ந்து யோசிச்சிட்டிருக்கும்போது ஒரு டார்ச் வெளிச்சம் அவர்களுக்கு நேராக வந்தது. டவுனில் கண்ணாடி மாத்தி வாங்கப் போன நாணு மாஸ்டர் ஊருக்குத் திரும்பி வந்துட்டார். வலது கையில் டார்ச் லைட், இடது கையில ஒரு பை.
கண்ணாசுபத்திரிக்குப் போயி பரிசோதிச்சு புதிய கண்ணாடியும் வாங்கிட்டு பஸ்ஸ்டாண்டுக்கு நடக்கும்போது அதுக்குப் பக்கத்தில ஒருபக்கம் வெங்காயமும் உருளைக்கிழங்கும் மலிவு விலைக்கு விக்க வெச்சிருக்கறத அவரு பார்த்தாரு. ரெண்டையும் ஒவ்வொரு கிலோ வாங்கினார்.
நம்மூரு விலையோட ஒப்பிட்டுப் பார்த்தா ஏழு ரூபாய் லாபம். ரெயில்வே ஓவர்பிரிட்ஜ் ஏறும்போது எதிர்பாராமல் பழைய தோழி ஒருவரை சந்தித்தார். பல வருடங்களுக்கு அப்புறம் உள்ள சந்திப்பு அதோடு அவர் மிக சந்தோஷவான் ஆனார்.
பஸ் ஸ்டாண்டில் பேக்கரிக்கு முன்பாக நிக்கும்போது அவருக்கு சின்ன மகளின் நினைவு வந்தது. அவளுக்காக அவர் ஒரு கிண்ணப்பத்தை வாங்கினார்.
பஸ்ஸ விட்டிறங்கி பையை தூக்கிக்கொண்டு வீட்டைப் பார்த்து நடந்தார்.
“யாரது அங்கே? அவர் டார்ச் அடித்துக்கொண்டு கேட்டார்.
நாணுமாஸ்டர் என்று பவித்ரனோடச் சத்தம் கேட்டு உணர்ந்தான்.
‘நான் தான் சாரே பவித்ரன்.’ அவன் சொன்னான்.
‘நீ என்ன இங்கே இருட்டில அவர் கேட்டார்.
‘சும்மாதா உட்கார்ந்திட்டு இருக்கே’ அவன் சொன்னான்.
ஓர் இளைஞன் இருட்டுல சும்மா இருக்கிறது அவ்வளவு நல்ல காரியம் இல்லை என்று சிந்தனையுடன் அவன் நடக்கத் தொடங்கிய போது அவருக்கு வேறு ஒரு யோசனையும் தோன்றியது.
‘நீ எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சுக்கு போனியா?” அவர் கேட்டார்.
‘இல்ல’ அவன் சொன்னான்
‘அது சரி உங்க அப்பாகிட்ட நேத்து கூட சொல்லிருந்தேனே’ அவர் குரல் உயர்த்தினார்.
அவருக்கு அவன் மேல கோபம் வந்தது இந்தக் காலத்தில் ஒரு வேலை கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டமானதுனு தெரியாமல் இல்லை. இருந்தாலும் நம்ம பக்கமிருந்து ஒரு முயற்சி வேண்டாமா? பாறக்கண்டியில் வேலுவோட மகன் பவித்திரனுக்கு வேலைய வெச்சு நீட்டிட்டு ஒரு அரசு பிரதிநிதியும் இங்கே வர மாட்டாங்களே?’
நாளைக்காவது போய் எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் ஒரு ரெஜிஸ்டர் செய்யணும்னு பவித்ரங்கிட்ட கண்டிப்போடு சொன்னதுக்கப்புறம் நாணு மாஸ்டர் தனக்கு நேராக உள்ள வழியைப்பார்த்து நடந்தார். இருட்டு வழியாக அவருடைய டார்ச்சின் வெளிச்சம் வயல்வெளிகளில் நகர்ந்தது
‘நமக்கு அவனெத் தூக்கனாலோ.?’ கர்ணன் ஆவேசத்தோடு மத்தவங்ககிட்டக் கேட்டான்.
வேண்டா சாரே பவித்ரன் திடிர்னு சொன்னான்.
‘சாரே யுதிர்ஷ்டரும், அர்ஜுனரும், பீமரும், துரோணாச்சாரியார் கிட்ட போர் செய்யலாமா?’ குருவை கொன்றோம் என்ற வருத்தத்திற்கு அவசியமில்லை என்றுதானே துரோணர் யுத்தத்திற்கு முன்பு தன்னை வந்து பார்த்த யுதிர்ஷ்டங்கிட்ட சொன்னாரு. கர்ணன் எதையோ எண்ணிக்கொண்டு சுற்றிலும் உள்ளவரைப் பார்த்தார். இருட்டில் யாரோட முகமும் தெளிவாகத் தெரியவில்லை.
‘அது சரிதா நந்தன் சொன்னான். அவன் தன்னுடைய கத்தியை மீண்டும் விரித்தான். அதன் வாய்ப்பக்கம் மின்னியது.
முதல் குத்து ஒன்னோடதா இருக்கட்டும் கர்ணன் பவித்ரங்கிட்ட சொன்னான்.
கையும் காலும் வெட்டிக்கொத்தி தனித்தனியாக்கணும்.சிவதாசன் கூறினான்.
‘தலையெ வெட்டி மதில்சுவரு மேல வைக்கலாம்’ சுதாகரன் சொன்னான்
அவர்கள் மொத்தமாக வயல் வரம்பில் நகருகின்ற டார்ச் வெளிச்சத்திற்கு நேராகப் பார்வையை செலுத்திக்கொண்டு வேகமாக நடந்தனர்.
வரம்பில் விட்டில் பூச்சிகளின் இரைச்சல் ஓயவில்லை. இருபக்க வயல்களிலுமிருந்து சாணியினுடையவும், சேற்றினுடையவும் நாற்றம் மிகுந்தது. நாணு மாஸ்டர் அதை கனிசமாக ஏற்றார். ஒரு விட்டில் பூச்சி குறும்பு காட்டும் விதம் அவருடைய இடதுகாலில் இடறியது. புதிய கண்ணாடி அணிந்ததிலும், மலிவு விலைக்கு வெங்காயமும், உருளைக்கிழங்கும் வாங்க முடிந்ததிலும், பழைய ஒரு தோழியை பல வருடங்களுக்குப் பிறகு எதார்த்தமாகக் காண முடிந்ததிலும், ஒரு விட்டில் பூச்சியின் ஸ்பரிசம் ஏற்றதிலும் உள்ள மனமகிழ்ச்சியோடு அவர் நடந்தார்.