குறளின் கதிர்களாய்…(495)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(495)
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை.
– திருக்குறள் -327 (கொல்லாமை)
புதுக்கவிதையில்…
தனது உயிரது போகும்
நிலை வந்தாலும்,
தன்னைக் காத்திட
இன்னொருவரின்
இனிய உயிரைப் போக்கும்
இழிசெயல்
எப்போதும் வேண்டாம்…!
குறும்பாவில்…
தன்னுயிர் போய்விடும் நிலைவரினும்
இன்னொரு இனிய உயிரைப் போக்கிடும்
தீய செயலைச் செய்யாதே…!
மரபுக் கவிதையில்…
தன்னுயிர் உடலதை நீங்கிடவே
தக்கதோர் நிலையது வந்தாலும்,
தன்னையே காத்திடும் வழியதுவாய்
தடையதாய் வந்திடும் மற்றொருவர்
இன்னுயிர் தன்னையே போக்கிவிடும்
ஈரம தற்றதாம் இழிசெயலைத்
தன்னலம் கருதியே செய்வதனை
தவிர்த்திட வேண்டிய தறிவாயே…!
லிமரைக்கூ…
போய்விடும் நிலைவரினும் தன்னுயிர்,
தன்னைக் காத்திடத் தரமிலாச் செயலாய்ப்
போக்காதே பிறரின் இன்னுயிர்…!
கிராமிய பாணியில்…
கொல்லாத கொல்லாத
எந்த உயிரயும் கொல்லாத,
எதுக்காகவும் கொல்லாத..
தனக்க உயிரே போற
நெலம வந்தாலும்
தன்னக் காப்பாத்த
வேற ஒருத்தரோட நல்ல
உயிரப் போக்குற
செயல மட்டும்
செய்யவே வேண்டாம்..
அதால,
கொல்லாத கொல்லாத
எந்த உயிரயும் கொல்லாத,
எதுக்காகவும் கொல்லாத…!