பைனரிகளால் நிரம்பி வழியும் பார்வைக் கோணங்கள் (நூல் விமரிசனம்)

0
பைனரிகளால் நிரம்பி வழியும் பார்வைக் கோணங்கள்

ஞா. குருசாமி
தொடர்புக்கு : jeyaseelanphd@yahoo.in

மனித வாழ்வை கோட்பாடு சார்ந்து எழுதிப்பார்க்கும் போது எதார்த்தம் சார்ந்தும் எழுதிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. கோட்பாட்டுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான முரணியக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் இவற்றில் எவையேனும் ஒன்றைச் சார்ந்து மட்டுமே மனிதனின் வாழ்வை எழுதிப் பார்ப்போமேயானால் பிறழ்வு ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இந்த விழிப்பு மனம் கைவரப்பெற்றுவிட்டால் நேர்த்தியான ஒரு சிந்தனையை உருவாக்கிவிட முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது ‘சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்’ நூல். சேசு சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் சி.பேசில் சேவியர் எழுதியிருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள ஏழு கட்டுரைகளிலும் பைனரி (Binary) ஓர் அணுகுமுறையாகவே அமைந்திருக்கிறது. அதை இந்நூலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சமாக வைத்துக்கொள்ளலாம்.

‘பைனரி’யை ஓர் உத்தியாக, அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. சில நேரங்களில் நூலின் ஒரு பகுதியாகக் கூட பைனரியை அமைந்ததுண்டு. இதற்கு உதாரணமாக தொ.பரமசிவனின் பல கட்டுரைகளையும் நூல்களையும் குறிப்பிடலாம். ஆனால் நூல் முழுமையும் தேர்ந்துகொண்ட ஆய்வுப்பொருளை வெவ்வேறு கோணங்களில் தனித்தனி பைனரிகளைக் கொண்டு அணுகியிருப்பது தமிழில் இதுவே முதல் முறையாகும். இது தன்னிச்சையாக அமைந்திருக்குமானால் உண்மையிலேயே வியப்புக்குரியது. நூலாசிரியர் தத்துவவியல் பேராசிரியர் என்பது கூட பைனரி அணுகுமுறைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். தத்துவம் என்பதே பரிசோதிக்கப்பட்ட பைனரி தானே.

‘அம்மணமாய் வருகிறோம் அம்மணமாய் போகிறோம்’ என்னும் முதல் கட்டுரையில் பொருளாதார, மெய்யியல், இறையியல் நோக்கில் ‘செல்வம்’ ஆராயப்பட்டிருக்கிறது. செல்வத்தைக் குறித்து விவாதிப்பது தமிழுக்கு மிகப் பழையது என்றபோதிலும் எது செல்வம்? என்பதில் இன்னும் முழுப் பொருளை நாம் கண்டடையவில்லை. அது சாத்தியமற்றதும் கூட. ஆனால் செல்வத்தின் இயல்பாக ‘நிலையாமை’யை அனைத்து சமய இலக்கியங்களும் சொல்லியிருக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக சில புதிய பார்வைக் கோணங்களுடன் செல்வம் இறைவனின் கொடையா? பகிரப்படாத செல்வம் பாவமாகாதா? அளவுக்கு அதிகமான சேமிப்பு திருட்டாகாதா? தலித், பழங்குடிகளை ஒடுக்கும் சக்திகளுக்கு கடவுள் விடுக்கும் செய்தி என்ன? என்கிற கேள்விகளை எழுப்பி கடவுளுக்கு அடிபணிவதே பொருளாதார மோகத்தில் இருந்து விடுபடுவதற்கான  வழி என்கிறார் நூலாசிரியர். இதில் ‘கடவுள்  x செல்வம்’ என்னும் பைனரி நுட்பமாகக் கையாளப்பட்டு இருக்கிறது. நவீன முதலாளியம் உலகமெங்கும் வியாபித்துள்ள, நுகர்வுக் கலாச்சாரம் நவீன அறமாக வலியுறுத்தப்படுகிற இன்றைய சூழலில் செல்வத்திற்கு நிகராக கடவுளை நிறுத்தி பொருளாதார விடுதலையை முன்வைத்திருப்பது ஆன்மிக வெளியில் மட்டும் சரியானதாகும்.

‘உடல் கொண்டாட்டம் x உடல் சிதைப்பு’ என்னும் பைனரி கொண்ட கட்டுரை ‘சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்’. இதில் விளிம்புநிலை மக்களுடனான அனுபவங்களையும் அவை தரும் சிந்தனைகளையும் கோட்பாடு, சமயம், எதார்த்தம் சார்ந்து விவாதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘உடல்’ ஒருவித அமானுஷ்ய தத்துவப் பொருளாக நிறுத்தப்பட்டு தொடர் விசாரணையினூடாக உடலையும் இறைவனையும் இணைக்கிறது. மனிதன் உருவாக்கிய பிரிவினைகளின் பேரில் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளில் சிதைக்கப்படும் உடல்களில் கடவுள் சிதைக்கப்படுகிறார் என்கிறார் நூலாசிரியர்.

உடல் ஓர் ஆயுதமாக இருந்து வந்திருக்கும் வரலாற்றில் உடல் தான் எல்லாவற்றையும் தீர்மானித்திருக்கிறது. இன்று கண்டுபிடித்திருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் உடல் என்னும் ஆயுதத்தின் துணைக் கருவிகள் தான். எப்போதும் பிரதான ஆயுதம் உடல் தான். அதனால் தான் வெற்றியில் வென்ற உடல் கொண்டாடப்படுவதும் தோற்ற உடல் சிதைக்கப்படுவதும் நிகழ்கிறது. அது சரியா? என்றால் இல்லை. இங்கு வென்ற உடலை விட தோற்ற உடல் தான் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில் வெற்றி என்பது நேர்மையால் மட்டுமே கண்டடைவது இல்லை. அது ஒருவகையான அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டத்தால் உருவாக்கப்படுவது. ஆகவே தான் சிதைக்கப்பட்ட உடல்கள் மீது நூலாசிரியர் கரிசனப்படுகிறார். போராளிகளின் மரணங்கள் விதைத்த உடல்களை இயேசுவின் உடலைக் குறியீடாக நிறுத்தி விவாதிக்கிறார். வீழ்த்தப்பட்ட உடல் மதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார். உடல் சிதைப்பையும் சிதைக்கப்பட்ட உடலின் வெற்றியையும் இயேசுவின் உடலை வைத்து பேசியிருப்பது அபாரம்.

‘அறிவுசார் நம்பிக்கை சாத்தியமா?’ என்னும் கட்டுரையில் ‘ஒழுங்கு x ஒழுங்கின்மை’  தான் பைனரி. ஒழுங்கு என்பது இயல்பாக அமைவது அல்ல. அது வன்முறையால் அமைக்கப்படுவது. வன்முறை நிகழாத இடத்தில் ஒழுங்கின்மை தான் இருக்கும். ஒழுங்கின்மையின் அடையாளமே சுதந்திர இயல்போடு வாழ்வை வாழ்ந்து கடத்தலாகும். ஒழுங்கின்மை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும் என்று பேசும் நூலாசிரியர், ஒழுங்கற்று இருக்கும் நாட்டுப்புற வழிபாட்டு மரபில் அன்பு இருக்கிறது. அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மானுடம் தமக்கான விடுதலைக் கூறுகளை வளர்த்தெடுக்க வேண்டும். அடிமையாக்க எத்தனிப்பை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கிறார்.

‘நாட்டார் சமயங்களும் கத்தோலிக்க வெகுசன பக்தி முயற்சிகளும் தமிழகத் திருஅவைக்கு விடுக்கும் சவால்கள்’ கட்டுரை தனித்த ஒரு நூலாக எழுதப்பட வேண்டிய அளவுக்கு அடர்த்தி கொண்டது. கட்டுரையாக இருப்பதால் பல இடங்களில் விஷயங்கள் சுருங்கச் சொல்லப்பட்டிருக்கின்றன.  ‘நாட்டார் வழிபாடு x கத்தோலிக்கம்’ என்கிற பைனரியில் இயங்கும் இக்கட்டுரையின் நுவல்பொருள் ஆங்காங்கே துணைப் பைனரிகளையும் நிறுவி விவாதித்திருக்கிறது. உதாரணமாக ‘இந்து தலித் – கிறித்தவ தலித்’ பைனரி. இந்து தலித்துகளிடம் இருக்கும் போராட்டக் குணம் கிறித்தவத் தலித்துகளிடம் ஏன் இருப்பதில்லை என்கிற கேள்வியைக் கேட்டு அதற்குக் காரணம் ஐரோப்பிய ஆதிக்கக் காலச்சார இறையியல் என்கிறார். ‘ஆதிக்க இறையியல்’ மானுட விடுதலைக்கான போராட்டக் குணத்தை மழுங்கடிக்கும் என்பது நூல் தரும் செய்தி.

ஆதிக்க இறையியலை விதைக்கும் வழிபாட்டு முறையை சரிசெய்ய வேண்டுமானால் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களைக் கொண்ட நாட்டார் சமய மரபிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ‘முன்வைப்பு’ இக்கட்டுரையில் முக்கியமான இடம்.

ஆண்டவரிடம் செலுத்தும் அன்பு என்பது அடிபட்டோருக்குத் துணையாக இருப்பதே ஆகும் என்கிறது ஐந்தாவது கட்டுரை. பொதுவாக, இந்தியச் சமூகம் ‘நடுநிலை’யைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அதுதான் அறம் என்பதாகச் சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்திருக்கிறது. உண்மையில் அது அதிகாரத்தின் பக்கம் நிற்பதற்கான மறைமுக ஏற்பாடு. இதைக் கச்சிதமாக ‘அடிப்போர் x அடிபட்டோர்’ என்னும் பைனரி வழியாக விவாதித்திருக்கிறார் நூலாசிரியர். ஏற்றத்தாழ்வுகளுக்குச் சமய அந்தஸ்து வழங்கி புனிதமாக்கப்பட்டு இருக்கும் தேசங்களில் ‘நடுநிலையோடு இருத்தல்’ என்பதை விட அடிபட்டோருக்கு ஆதரவாக இருப்பதே நியாயமானது. ஆன்மிகத் தன்மையில் சொல்வதென்றால் அது ஆண்டவருக்குச் செலுத்தும் அன்பு என்பது கட்டுரையின் மையப்பொருள்.

‘நாட்டார் சமயங்களும் கத்தோலிக்க வெகுசன பக்தி முயற்சிகளும் தமிழகத் திருஅவைக்கு விடுக்கும் சவால்கள்’ கட்டுரையில், மக்களை அடிமையாக வைத்திருக்கும் குணாதிசயம் கொண்டது ஆதிக்க இறையியல் என்றால் மக்களுக்கு அணுக்கமானது எது? எனத் தொக்கி நின்ற கேள்விக்கு விடையாக அமைந்திருப்பது ‘விடுதலை இறையியல் : குட்டியரஸ், அம்பேத்கர் ஓர் ஒப்பீடு’ என்னும் ஆறாம் கட்டுரை. இதில் பைனரி குட்டியரஸூம் அம்பேத்கரும்.

குட்டியரஸ், அம்பேதகர் இருவரும் விடுதலை இறையியலுக்குப் பணியாற்றியுள்ளனர். இருவருக்குமிடையேயான வேறுபாடுகள் நிலவியல், சூழலியல் அடிப்படையில் அமைந்தவை. ஆனாலும் இருவருக்கும் மானுட விடுதலையே நோக்கமாக இருந்தது. இதில் அம்பேத்கரின் நவீன பெளத்தத்தை அவரது விடுதலை இறையியலாகக் கொண்டது சரியான அவதானிப்பு.

‘நீ இருப்பதாலேயே நான் இருக்கிறேன்: பிறரோடு நல்லிணக்கம் நோக்கி’ கட்டுரையில் ‘நீ x நான்’ என்பது பைனரி. இது உளவியல், மெய்யியல், இறையியல் நோக்கில் மானுட இருப்பை விவாதித்து இருக்கிறது. இதில் இருக்கும் முக்கியமான அம்சம் ‘நீ x நான்’ என்று சொல்வதிலுள்ள உளவியல் ரீதியிலான ஒதுக்குதலைப் பற்றிய விவாதமும் ‘ஒற்றுமை’ என்பதை நூலாசிரியர் புரிந்துகொண்டிருக்கும் விதமும் தான். ‘ஒற்றுமை’ நல்ல கருத்தாக்கமாகத் தெரியும். ஆனால் அது பன்மைத்துவத்துக்கு எதிரானது. நல்லிணக்கம் என்பது அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அல்ல. அவரவருக்குரிய வேறுபாட்டுத் தனித்தன்மையும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு வாழ்வதாகும் என்பதாக நூலாசிரியர் வைக்கும் தருக்கம் இக்கட்டுரையின் அடர்த்தியைக் கூட்டியிருக்கிறது. அதாவது, ‘நீ’ இருப்பதற்கு ‘நான்’னும், ‘நான் இருப்பதற்கு ‘நீ’யும் அவசியம். எதுவும் யாரும் தனியாக தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. தேவை உள்ளவர்களின் பார்வையில் இருந்தே பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் பொதுத் தொனி.

விளிம்புநிலையினர் மீதான அக்கறையுடன் அவர்களுடனான அனுபவங்களைக் கணக்கில்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், காத்திரமான தருக்கங்களின் கலனாக இருப்பதோடு தொடர் ஆய்வுக்கும் விவாதத்திற்குமான திறப்புகளையும் கொண்டிருக்கிறது. ஆய்வுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆசிரியர் : சி.பேசில் சேவியர் சே.ச.
வெளியீடு : நம் வாழ்வு, 62, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை
விலை : ரூபாய்125/-
நூலைப் பெற : 94980 32244

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.