சிறு முதலீட்டாளரை நசுக்கும் மத்திய அரசின் அன்னிய முதலீட்டுத் திட்டங்கள்.

1

தலையங்கம் (26)

பவள சங்கரி

பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி மத்திய தர மக்களை பாடாய்ப்படுத்தி விட்டு, போக்குவரத்துத் துறை ஊழியர்களின் அகவிலைப்படியை முன் தேதியிட்டு இப்போது உயர்த்தி அளிக்க வேண்டியத் தேவை மாநில அரசிற்கு ஏன் என்று புரியவில்லை.

மத்திய அரசின் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு, அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் ஆகியவற்றின் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதன் பின்னணிதான் என்ன?

அன்னிய முதலீட்டாளருக்கு 51 விழுக்காடும், உள்நாட்டு சிறு முதலீட்டாளருக்கு 49 விழுக்காடும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது பன்னாட்டு நிறுவனங்கள் நம் விவசாய நிலங்களைக்கூட குத்தகை எடுத்து பயிர் செய்யலாம். சிறு விவசாயிகளை எளிதாக விலைக்கு வாங்க அனுமதி அளிக்கும் திட்டம் இது. அது மட்டுமல்லாமல், மருந்து தயாரிப்புத் துறையில் 100 விழுக்காடு முதலீடும், காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடும் விமானப் போக்குவரத்துத் துறையில் 26 விழுக்காடும் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான எதிர்ப்புகள் பொது மக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மத்தியில் வலுவடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் இன்று நாடாளுமன்றம் 5வது நாளாக முடங்கியது.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு தொடர்பாக, இரு அவைகளிலும் ஓட்டெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அதற்கான நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது.

எதிர் கட்சிகளோ, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளோ எதுவாக இருப்பினும், சில்லரை வணிகர்களின் குடும்பத்தின் வயிற்றில் அடிக்கும் நிலையைக்கூட அரசியல் ஆக்காமல், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு அரசிற்கு உணர்த்த வேண்டியதே மனிதாபிமான செயலாகும் என்பது உறுதி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிறு முதலீட்டாளரை நசுக்கும் மத்திய அரசின் அன்னிய முதலீட்டுத் திட்டங்கள்.

  1. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது
    அபாயகரமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
    வெளிநாடுகளின் ஆசீர்வாதம் வேண்டும் என்ற நிலையில்
    இருக்கும் அரசியல்வாதிகளால் இதைத் தவிர வேறு எப்படி
    நடந்து கொள்ள முடியும்? உலகமயமாதலில் இச் செயல்கள்
    சாதாரணம் தான்! ஆனால் இந்தியா என்ற ஒன்று இருக்க வேண்டும்
    என்பதை நம் ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. அமெரிக்கப்
    பொருளாதாரமும் ஐரோப்பியப் பொருளாதாரமும் ஆட்டம்
    கண்டுள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரம் பெரிதாக
    பாதிக்கப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. ஆனால்
    அந்த ஆறுதலுக்கு அஞ்சுதலைக் கொடுத்து விடுவார்களோ
    என்ற எண்ணம் எழுகிறது!
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *