சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி (2)
முனைவர். நாக பூஷணம்
சென்ற முறை சட்டத்தின் பல பிரிவுகள் குறித்துப் பார்த்தோம். இம்முறை குழந்தைகள் நலம் பேண என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்”. சமுதாய உயர்வு தாழ்வு , ஆண் , பெண் என்ற வேறுபாடு , சிறார் முதியோர் என எந்த வகையான பாகுபாடும் சட்டத்திற்கு இல்லை. சட்டத்தின் வரம்பிற்குள் வாழ்வோருக்கு அதன் பாதுகாப்பும் , மீறுவோர்க்கு உரிய தண்டனை என்பதும் அனைத்துத் தரப்பினருக்கும் சமமானதே என்பதே சட்டத்தின் அடிப்படை.
ஆனால் காலம் காலமாக நிகழ்ந்து வரும் வேறுபாடுகள் நம்முன் பல கேள்விக்கணைகளை வீசுகின்றன. சட்டம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்றாற்போல செயல்படுகிறது என்று பலரும் நினைக்கும் நிலைக்கு என்ன மாற்று? சட்டம் என்பது ஒரு வலை , அதில் சிக்கிக்கொள்வோர் பலசாலி/வலியோர் என்றால் வலையைப் பிய்த்துக்கொண்டு தப்பித்துக்கொள்வர் , எளியோர் என்றால் சிக்கித்தவிப்பர் என்ற வழக்காறு குறித்தும் நம்முள் சந்தேகம் எழக்கூடும்.
உதாரணமாகச் சொல்வதானால் , எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடிப்பதில்லை. மீனின் தன்மைக்கேற்ப பிடிக்கும் முறை மாறுபடுகிறது. சுறா மீனை ஒரு மாதிரியாகவும் , சகதியில் இருக்கும் மீனை கம்பியால் குத்தியும் பிடிக்கிறார்கள். அது போன்று தவறு செய்வோர் யாராயினும் அவர்கள் சட்டத்தை அசட்டை செய்பவரேயாவர் , அவர்கள் அதற்கான தண்டனையை அடைந்தே தீர வேண்டும். அதற்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. தவறு செய்பவன் , அதைச் செய்யத் தூண்டுபவன் , செய்யக் காரணமானவன் என்று இந்த முத்திறத்தோருமே சட்டடத்தின் முன் தவறிழைத்தவர் எனலாம்.
எளியோரைக் காட்டிலும் , வலியோருக்கே சமுதாயச் சிந்தனையும் பொறுப்பும் அதிகம். காரணம் அவரிடம் இருக்கும் செல்வம் அவருக்கு மட்டுமே உரியதன்று . அவர் அச்செல்வத்தின் காவலர் / பொறுப்பாளர் என்பதே உண்மைத்தன்மையாகும். தேவைக்கு அதிகமாக செல்வத்தைக் குவித்து வைத்து யாருக்கும் பயன் படாது செய்வதும் கூட ஒரு வகையில் சமுதாயக் கொள்ளை என்றே கொள்ள வேண்டும்.
இயற்கை விதி எல்லாருக்கும் ஒன்று தான். சமுதாயமாகக் கூடி வாழும் போது தான் காலம் , இடம் , சார்ந்திருக்கும் சமயம் , கொண்டிருக்கும் நம்பிக்கை , பழக்க வழக்கங்கள் , பண்பாடு எனப் பல வகையிலும் நாடுதோறும் சட்டங்களில் வேறுபாடு அமைந்திருக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக common law , civil law , குடும்ப நலச் சட்டம் , சொத்துரிமைச் சட்டம் முதலியவை.
பிறக்க இருக்கும் குழந்தை முதல் , முது பெரும் வயதினர் வரை அவர்தம் நலம் காக்கும் சட்டங்கள் பலவாகும். பிறக்க இருக்கும் குழந்தை குறித்த சட்டங்கள் யாவை? அவர் தம் உரிமைகள் என்ன? அவற்றைக் காக்கும் கடமைகள் யாருக்கு? என்பவற்றை வரிசையாகப் பார்ப்போம்.
1. பிறக்க இருக்கும் குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் உரிமைகள் தொடங்கி விடுகின்றன. உரிமை குறிப்பிட்டு வரையறுக்கப் படும் முன்னரே பிறந்த உடன் அடையக் கூடிய உரிமைகள் சட்டத்தில் உறுதி செய்யப் படுகின்றன.
(அ) குற்றவியல் சட்டத்தின் கீழ் கருவிலிருக்கும் குழந்தைக்கு நேரக்கூடிய காயத்திற்கும் தண்டனை உண்டு. கருச்சிதைவு , கருக்கலைப்பு செய்வோருக்கும் தண்டனை உண்டு. (பிரிவு IPC 312,313,316)
2. பிறக்க இருக்கும் குழந்தையும் சட்ட நபர் என்ற அடிப்படையில் அதன் நலம் , குடும்ப/பெற்றோர் சொத்தில் உரிய பாகம் , பிறந்த பிறகு உரிய பராமரிப்பு, வயதுத் தகுதி அடையும் வரை பெற்றோர்/காப்பாளர் பாதுகாப்பு , கல்வி வாய்ப்பு , தன் நிலையை உயர்த்திக் கொள்ளவும் , உரிய வாய்ப்பைப் பெறவுமான அனைத்து வாழ்வாதார உரிமைகளும் அக்குழந்தைக்கு உண்டு.
குழந்தை பிறந்த பின் அதன் நலம் பேண சட்டம் வகுத்துள்ள பாதுகாப்பு வட்டங்களைக் காண்போம்.
3. அரசியல் அமைப்புச் சட்டத்தில் குழந்தைகள் நலம்
(i). நாட்டின் பாதுகாப்பு கிடைக்கச் செய்ய அடிப்படையான குடியுரிமை. (Citizenship)
(ii). சட்டத்தின் முன் அனைவரும் சமம் , சட்டத்தின் சமமான பாதுகாப்பு ஆகியவை அனைவருக்கும் எந்த மறுப்புமின்றிக் கிடைக்க வேண்டும்.
(iii). மதம் , ஜாதி , பால் , பிறந்த இடம் ஆகியவற்றில் எவையேனும் ஒன்றின் அடிப்படையிலோ , இவற்றில் ஏதாவது ஒன்றின் பேரிலோ வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது.
(iv). மேற்கண்டவற்றின் காரணமாகக் கடைகள் , உணவுக் கூடங்கள் ,உணவு விடுதிகள் , மனமகிழ் மன்றங்கள் ஆகியவற்றை அணுகத் தடை செய்யக் கூடாது.
(v) பொது மக்கள் புழக்கத்திற்கான நீர்நிலைகள் , சாலைகள் , கழிப்பிடங்கள் , ஆகியவை அரசின் பராமரிப்பில் இருந்தாலோ , பொது மக்களுக்கென அமைக்கப் பட்டிருந்தாலோ அவற்றைப் பயன் படுத்தவும் மேற்கண்ட அடிப்படைகள் தடையாக இருக்கக் கூடாது.
அதே நேரத்தில் பின் தங்கியவர் , சமுதாயப் புறக்கணிப்புக்கு ஆளாக்கப் பட்டவர்கள் இவர்களின் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற மேற்கூறியவை அடிப்படையில் யாரும் தடை விதிக்கக் கோர இயலாது.
இங்கே பிறந்த குழந்தையின் உரிமைக்குரல் ஒலிக்கும் ஒரு கவிதையைச் சுட்ட விரும்புகிறேன்.
நான் ஒரு குழந்தை –
என் வருகையை எதிர்நோக்கி உலகம் காத்திருக்கிறது.
நான் என்னவாக உருக்கொள்வேன் என்று ஆர்வத்தோடு பார்த்திருக்கிறது.
நாகரிகம் துலாக்கோலில் தொங்கிக் கொண்டிருக்கிறது , ஏனெனில்
நான் எவ்வாறு உருக் கொள்கிறேனோ அதைப் பொறுத்தே நாளைய உலகம் அமையும்.
நான் ஒரு குழந்தை –
என் விதி உங்கள் கையில்.
நான் வெல்வதும் தோற்பதும் பெருமளவு நீங்கள் தீர்மானிப்பது.
உங்களை வேண்டிக் கொள்கிறேன் , எனக்கு மகிழ்ச்சியூட்டுபவற்றை எனக்கு அளியுங்கள்.
உங்களை இரைஞ்சிக் கேட்டுக் கோள்கிறேன் , உலகிற்கு நான்
வரமாக அமைய எனக்குப் பயிற்சி அளியுங்கள்.
குழந்தை இவ்வுலகில் மனிதத்துவத்தின் மூலதனம் ஆகும்.
“பல தவறுகளையும் , குற்றங்களையும் இழைக்கும் குற்ற உணர்வுக்கு நாம் பொறுப்பேற்கும் நிலையில் இருக்கிறோம். எல்லாக் குற்றங்களுக்கும் உச்சமாக அமைவது குழந்தைகளைக் கை விடுவது.”
“நம் தேவைகள் அனைத்தும் காத்திருக்கலாம் , குழந்தையால் காத்திருக்க இயலாது. குழந்தையின் உடற்கூறுகள் ஒவ்வொன்றாய் உருவாகும் தருணமிது. எனவே குழந்தைக்கு எதையுமே நாளை பார்க்கலாம் என்று நம்மால் கூற இயலாது. குழந்தையின் பெயர் இன்று (இப்பொழுது) ” என்று அறிஞர் கேப்ரியேல் மிஸ்ட்ரல் மிக அழகாக கூறியிருக்கிறார்.
இனிவரும் நாட்களில் சட்டத்தின் மற்ற பாதுகாப்பு வட்டங்களைக் குறித்துப் பார்க்கலாம். இது குறித்து வாசகர்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் வல்லமைக்கு , vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு தக்க பதில் அடுத்த பகுதியில் வெளியிடப்படும்.
தட்டச்சு & ஒருங்கிணைப்பு – ஸ்ரீஜா
படத்திற்கு நன்றி – http://curiousphotos.blogspot.com/2007/11/cute-new-born-baby-pictures.html
இன்று அடிமை ஒழிப்பு தினம், ஐ.நா. 62 வருடங்களுக்கு முன் இயற்றிய தீர்மானத்தின் படி. எனவே. அந்த தினத்தில் இந்த நன்கட்டுரை வந்தது நல்வரவு ஆகுக. மேலும்,’…அது போன்று தவறு செய்வோர் யாராயினும் அவர்கள் சட்டத்தை அசட்டை செய்பவரேயாவர் , அவர்கள் அதற்கான தண்டனையை அடைந்தே தீர வேண்டும். அதற்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. தவறு செய்பவன் , அதைச் செய்யத் தூண்டுபவன் , செய்யக் காரணமானவன் என்று இந்த முத்திறத்தோருமே சட்டடத்தின் முன் தவறிழைத்தவர் எனலாம்…’என்பதை வழிமொழிகிறேன்.‘வேலியே பயிரை மேய்ந்தால் என் செய்வது?’ என்பது தான் என் கேள்வி.‘அன்றொரு நாள்: டிசம்பர் 2:தோலுரிக்கும் படலம்’ என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு தருவதின் நோக்கம், நமது சட்ட ஆலோசகரின் கருத்து அறிய:
பிரபாத்.ஸி. சதுர்வேதி என்ற இந்திய மத்திய அரசின் லேபர் காரியதரிசி மார்ச் 2011ல் ஒரு நேர்காணலில் CNN யிடம் திருவாய் மலர்ந்தருளியது:‘எனக்கு வியப்பு ஒன்றுமில்லை.கொத்தடிமை இருக்கிறது.சிறார்கள் கொத்தடிமையும் உளது. அதற்காக ‘அடிமை‘ என்ற சொல் தகாத வார்த்தை. எனக்கு பிடிக்கவில்லை. இது என்ன அடிமை என்ற சொல்? இது ஏழ்மையின் விளைவு. அதை சொன்னால் போதும்.நீங்கள் கேட்பது:‘அடிமைப்படுத்தப்பட்டோம்;அடிக்கிறார்கள். கூலி கிடையாது.பசியால் துடிக்கிறோம்.‘ என்று அலறுகிறார்களே.இது அடிமை நிலை என்று உங்களுக்குப் படவில்லையா?”. என்ன மிகைப்படுத்துகிறீர்கள்? நான் அடிமை என்ற சொல்லை உபயோகிக்கவேமாட்டேன்.’ [ஆதாரம்: http://thecnnfreedomproject.blogs.cnn.com/2011/03/10/india-official-its-not-slavery/%5Dஇந்த கண்மூடிகளை சட்டம் எப்படி கையாளவேண்டும்?
மிகவும் பயனுள்ள சட்டம் சம்பந்த பட்ட விஷயங்கள். மிக்க நன்றி.
தொடருங்கள்.