இராஜராஜேஸ்வரி  

தீபம், அத்தனை மாதங்களிலும் ஒளிர்ந்தாலும், 

உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே!. 

கார்த்திகைக்கும் தீபத்திற்கும்,
காலம் தொட்ட,
கலாச்சார உறவு உண்டு
அந்த உறவின் தன்மை 
ஒளிமயமானது. . .
பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது. .  

“அறுசமய சாத்திரப் பொருளோனே 

அறிவில் அறிவால் உணர் கழலோனே 

குறுமுனிவர் ஏத்தும் முத்தமிழோனே 

குமரகுரு கார்த்திகைப் பெருமாளே”  

என்று கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்த கந்தப் பெருமானை அருணகிரியார் பாடி மகிழ்வார்.  

சிவபெருமான் அருட்பெரும் ஜோதியாகத் தரிசனம் தரும் திருநாள். ஞானப் பேரொளி உமையையும், தீப லட்சுமியையும் திருவிளக்கில் போற்றும் நாள். திருமால் திரிவிக்கிரமனாக அவதரித்து மாவலியைப் பாதாளத்தில் அமிழ்த்திய நாள். பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று எல்லா ஆலயங்களிலும்,  கொண்டாடப்படும் திருநாள் இது. சிறு சிறு குடிசைகள் கூட விளக்குகளால் அலங்கரிக்கப் படும் நாள்.  

கார்த்திகையில் கார்த்திகை நாள் கார்மேனிக் கமலக் கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள்.   

உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள்…   

பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள்.  

ஆரியர்களின் ஆண்மை அவனியில் பொலிந்திடு நாள்.  

வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையின் வனப்பை எய்திய நாள்.  

மறமிடர்ப்படுக்கப் பட்ட மகிமைப் பெருநாள்.  

அறம் தழைத்தோங்க ஆரம்பித்தத ஆனந்தத் திருநாள்.  

தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள்.  

வாணவேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள்.  

பாரத மக்கள் ஸ்ரீ பகவானருள் பெற்ற நாள்.  

கிருபாநிதிக் கடவுள் கருணை பொழிந்திடு நாள். 

பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் கார்த்திகை நாளே. என்பார் மகாகவி பாரதி. 

இத்திருநாளில் நாம் ஏற்றும் தீபங்கள் புற இருளை அகற்றுவது போல், ஞானம் என்ற பேரொளி நம் மன இருளை மாய்க்க வேண்டும்.  

மனத்து இருளேதுமின்றி என்று அபிராமி அந்தாதியும்,  

மனத்திருள் மூழ்கி கெடலாமோ” என்று திருப்புகழும் சுட்டுவது இதைத் தான்.

ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா 

ஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் 

ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள 

ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே ! 

ஒளியை ஒலிக்கும்– திருமந்திரம்  பாடல் வரிகள் உள்ளத்தில் ஒளியேற்றும். 

சென்னைத் திருமயிலைக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் வந்த போது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன் வைத்துச் சிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –  

“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் 

துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள் 

தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும் 

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”  

இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.  

இந்து தர்மத்தின் சமய ஒருமையைப் பறை சாற்றும் திருநாள் கார்த்திகை.  

 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “கார் நாற்பது” என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் மூலம் இந்தத் தெய்வீகத் திருநாளின் தொன்மையை அறியலாம். சைவமும், வைணவமும் செழித்து வளர்ந்த காலக்கட்டங்களிலும் இத்திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாம் ஏற்றும் தீபங்கள் அக இருள் அகற்றும் தெய்வீக ஞானத்தின் உருவகங்கள் என்பதையும் பல பாடல்கள் உணர்த்தும்.  

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட 

தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப் 

புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித் 

தூதொடு வந்த மழை 

இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது .  

மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்குகிறோம்.  

அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!  

– ரவீந்திர நாத் தாகூரின் கவிதை.  

அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.  

திருநாவுக்கரசருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் மருள்நீக்கியார். என்ன பொருத்தமான பெயர்!.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *