பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 9

2

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

வெ.ஜனனியின் கேள்விகள்:

i) கிரேக்க நாடு, பல வரலாற்றுச் சிறப்புகளை உடையது. அறிவியல், தத்துவம், இலக்கியம், கணிதம், படையெடுப்பு என முன்னேறி இருந்ததாக வரலாறு சொல்கிறது. கிரேக்க மொழியும் சரி, தமிழ் மொழியும் சரி, செம்மொழிச் சிறப்பினைச் சுமக்கிறது. ஆனால் இதுவரை நான் படித்த புத்தகங்களில் தமிழரின் சிறப்புகளை வேறு எவரும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. நாமும் கிரேக்கமும் சம காலத்தில் பயணித்தோம். அப்படி என்றால் நாம் அவர்களோடு, அதாவது செம்மொழிகளோடு, எப்படி போட்டி போட்டோம்?

ii) சங்க இலக்கியம் நகர வாழ்க்கையைப் பற்றி எங்காவது பேசி இருக்கிறதா? நாகரிகம் மற்ற இடங்களில் தோன்றுவதற்கு முன் நம்மிடைய இருந்த நாகரிக வளர்ச்சி?

iii) ‘ஐஸ் ஏஜ்’ பற்றிய ஆய்வு, பல புதுப் புது  கண்டுபிடிப்புகளைக்  கைவசம் வைத்திருக்கிறது. இதைப் பற்றி சமீப காலத்தில் பல கட்டுரைகள் படிக்க நேரிட்டது. இதில் பெரும்பாலான கட்டுரைகள் ஐரோப்பா, அமெரிக்காவைப் பற்றியே கூறுகின்றன. சில பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் சங்க இலக்கியம் இதற்கெல்லாம் முன்னாலே தோன்றியமையால் அவற்றில் குறிப்புகள் இருந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறாகள். அப்படி இருப்பின், அது போன்ற புதிய ஆய்வுக் களங்களை உருவாக்கலாமா?

இலக்கியம் மூலம் பருவ நிலை, சுற்றுச் சூழலை பற்றிப் புரிதல் பெற முடியுமா? இந்த ஆய்வு, புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. சிந்து வெளி நாகரிகத்திற்கு முன்பே ‘ஐஸ் ஏஜ்’ தோன்றிவிட்டது. மேலும் ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” தமிழ்க் குடி என்று ஒரு செய்யுள் கூறுகிறது. இதற்கான பதிலுக்கும் என் கேள்விக்கும் தொடர்பு இருக்கிறது எனக் கருதுகிறேன்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் திரண்ட பதில்:

பனிபடர் காலம் (ice age), பூமியின் வரலாற்றில் அவ்வப்போது பூமி குளிரும்போது உள்ள காலத்தைக் குறிக்கும். கடைசிப் பனிபடர் காலம் 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். சங்க இலக்கியம் இதற்கு மிகவும் பின்னால் தோன்றியது. அதில் பனிபடர் காலத்தைப் பற்றிய குறிப்பு இருக்க முடியாது. இலக்கியத்தில் அது தோன்றிய காலத்து நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கையின் சீற்றம் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் பனிபடர் காலத்தைப் பற்றிய குறிப்பு இருக்க முடியாது. உலகின் எந்த மொழியின் இலக்கியமும் அவ்வளவு பழமையானது அல்ல.

பெருமளவு வணிகத்தையும், பல பிரிவுகள் கொண்ட சமூகத்தையும், இவற்றின் விளைவாக வரும் மையப்படுத்தப்பட்ட ஆட்சியையும், எழுத்து வடிவம் பெற்ற மொழியையும் கொண்ட நாகரிகத்தையே நகர நாகரிகம் என்பார்கள் ஆய்வாளர்கள். சங்க காலத்தில் தமிழகத்தில் கடல்கரையை ஒட்டி அமைந்த துறைமுகம் சார்ந்த பட்டினங்களும் இருந்தன; மக்கள் வேட்டையாடி உண்டு வாழ்ந்த காடுகளும் இருந்தன. நகர வாழ்க்கையும் இருந்தது; சிறுகுடி வாழ்க்கையும் இருந்தது.

நகர வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் சங்க காலத்தில் தமிழகம் ரோமானியர்களுடன் (யவனர்களுடன்) வணிகம் செய்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கிரேக்கம் பேசிய பகுதிகள், ரோமின் ஆளுகையின் கீழ் இருந்தன. குதிரை உட்பட சில வணிகப் பொருள்களும், சில சொற்களும் (ஒரை என்ற நேரத்தைக் குறிக்கும் சொல் hora என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. இதன் இன்றைய ஆங்கில வடிவம் hour) வந்தது போல், கிரேக்கப் பகுதிகள் சேர்ந்த ரோம் நாட்டின் வழியாகத் தத்துவம், கணிதம் போன்ற அறிவியல் சிந்தனைகள் தமிழகத்திற்கு வந்ததற்குத் தக்க  சான்று இல்லை.

தமிழின் செம்மொழித் தன்மை அதன் செவ்விலக்கியத்திலிருந்தும் செவ்விலக்கணத்திலிருந்துமே வருகிறது. சங்கம் மருவிய காலத்தில் நீதி வரையறைகள் பேசப்பட்டது போல், அப்போதும் அதற்கு முன்னாலும் மதம் சாராத தத்துவ விசாரணைகள் தமிழ்ச் சமூகத்தில், கிரேக்கச் சமூகத்தில் போல, தனித்து இல்லை. பருப்பொருள் உலகம் பற்றிய சில சிந்தனைகள் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்தச் சிந்தனைகள், இலக்கணம் போல், ஒரு அறிவுத் துறையாக உருவாகவில்லை.

===============================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *