காயத்ரி பாலசுப்ரமணியன்   

வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும்  கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.  ஆதலால்தான் ஆய கலைகள் அறுபத்து நான்கில், ஜோதிடமும் சேர்க்கப் பட்டுள்ளது. வாழ்வை வளம் பெறச் செய்யும் ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றி நாம்  தெரிந்து கொள்வோம்.

கணிதம்: இது பெரும்பாலும், ஜாதகத்தோடு தொடர்பு கொண்டு, ஜாதகக் கணிதம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் இதற்காவே ஜோதிடரை அணுகுவதுண்டு. ஒருவரின் பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றைக் கொண்டு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஜாதகம் கணித்த பின் பலன்கள் பார்க்கப் படுகிறது. ஜாதகத்தில் 12 பாவங்கள் உண்டு. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்தப் பாவங்களோடு தொடர்பு உடையவை. பணியில் அமர்தல், வியாபாரம் செய்தல், திருமணம், குழந்தை பாக்யம் இவை எந்தக் காலக் கட்டத்தில் நடக்கும் என்பதை ஜாதகத்தின் உதவி கொண்டு அறியலாம்.

எண்கணிதம்: 1 முதல் 9 எண்களை வைத்துப் போடப்படுவது எண்கணிதம். இந்த எண்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு. ஒருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதியின்  அடிப்படையில் பலன்கள் சொல்லப்படும். இன்றும்  பலரால் விரும்பப் படுகின்ற ஒன்றாக விளங்குவது எண்கணிதம்.

கை ரேகை சாஸ்திரம்: மனிதனின் கையில் ஓடும் ரேகைகளை வைத்துப் பலன்கள் சொல்லப் படுகிறது. பிரபலமாக விளங்கும் சாஸ்திரங்களில் இதுவும் ஒன்று.

ருது ஜாதகம்: ஒரு பெண் பூப்படையும் நேரத்தின் அடிப்படையில், ஜாதகம் கணித்துப் பலன்கள் சொல்லப்படும். திருமணம் பற்றி அறிய ருது ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் பழக்கம் இன்றும் பல இடங்களில் நடை முறையில் உள்ளது.

சாமுத்திரிகா லட்சணம் என்றும் அழைக்கப் படும் அங்க ஆருடம்: இது ஆண், பெண் இருவருக்கும் உண்டு. கண், பல், மூக்கு, காது, இவற்றின் அமைப்பு, நிறம், கைகளின் நீளம், இப்படித் தலை முதல் பாதம் வரை, பல அங்க அடையாளத்தின்  அடிப்படையில் பலன்கள் கூறப்படுகிறது.

இது வரை தனி மனிதனோடு தொடர்புடையவற்றைப் பார்த்தோம். அடுத்து வரும் இரண்டும், மனிதன் வசிக்கும் இயற்கைச் சூழலோடும், அவன்  அன்றாடம் காணும் பறவைகள், மிருகங்கள் இவற்றோடு தொடர்புடையதா கும்.  

பஞ்ச பட்சி சாஸ்திரம்:  இதுவும் ஜோதிடத்தின் ஒரு அங்கமே. அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் 5 பட்சிகள் உண்டு. அவை காகம்,கோழி, ஆந்தை, வல்லூறு, மயில். இந்த 5 பட்சிகளும் அரசு, ஊண், நடை, துயில், சாவு ஆகிய 5 தொழிலைச் செய்கின்றன. ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தை வைத்து, அவரின் பட்சி அறியப் படுகிறது. பிறகு இந்த பட்சிகள் மேற்கொள்ளும் தொழிலின் அடிப்படையில் பலாபலன்கள் சொல்லப் படுகின்றன. இவற்றைப் பற்றிய விவரங்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட் டிருக்கும்.

கிளி ஜோதிடம்: கூண்டில் உள்ள பறவையை ஒரு ஏட்டை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள பலன்களை அறிந்து கொள்வது. பழங்காலத்தில் இருந்த முறை, இப்போது அரிதாகி விட்டது.

வாஸ்து ஜோதிடம்: இன்றையக் காலக் கட்டத்தில்,  மனிதன் பல லட்சங்களைச் செலவழிக்கும் அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது  வாஸ்து ஜோதிடமாகும். இவற்றில் மீன்கள், மிருகங்கள்,  பொம்மைகள், நிறங்கள், இயற்கைக் காட்சிகள் ஆகியவை பெருமளவில் இடம் பெற்றிருக்கும்.    மனிதன்  வசிக்கும் இடத்தைப்  பொறுத்து, பல நேரங்களில் அவனின் வாழ்க்கை அமைகிறது. அதனால்தான் இந்த ஜோதிடத்திற்கு வாஸ்து புருஷன் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குகிறார். புதிய மனை கோலுதல், குடியிருக்கும் வீடு, அவற்றின் நீள அகலம், அறைகள் அமைக்கும் விதம்,  வியாபார நிறுவனங்கள் அமைத்தல், ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகள், அவைகள் தரும் பலாபலன்கள் ஆகியவற்றைப் பற்றி வாஸ்து சாஸ்திரம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அடுத்து வருவது விவசாய ஜோதிடம். இதுவும் ஜோதிடத்தில் ஒரு முக்கிய பிரிவாகும். உணவில்லையேல் மனித உயிர்கள் வாழ்வது கடினம். அதனால்  தான் மனிதன் விவசாயம் மூலம் நல்ல பலனையும், மகசூலையும் பெற வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள், வயலில் எந்தப் பயிர் எப்போது போடலாம், எப்போது மழை அதிகமாய் வரும், இப்படிப் பல அரிய செய்திகளை எடுத்துக் கூறியுள்ளார்கள். இது மட்டுமின்றி, உழவர்களுக்கு வழி காட்டும் விதமாக, ஏர் உழுதலுக்கு உரிய காலம், எப்போது விதை விதைக்கலாம், எப்போது கதிரறுக்கலாம், எப்போது தானியங்களைக் களஞ்சியத்தில் சேர்க்கலாம் போன்ற  செய்திகளையும் விவசாய ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மனிதன், அவன் இருக்கும் வீடு மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? அவன் இருக்கும் நாடும் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றிக் கூறுவது மேதினி ஜோதிடம்.  நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள், பல் வேறு உலக நாடுகள் உருவான விதம், அவற்றின் வளமை, அரசியல் தலைவர்களின் ஏற்ற இறக்கம், இயற்கையின் சீற்றம், பொருளாதார நிலை, மக்களின் வளம், இவை எல்லாம் இதில் அடங்கும்.

“ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று” நாம் அனைவரும் அறிந்த பழமொழிகள் இவை. மனிதனுக்கு நிம்மதி அளிப்பது ஆலயங்கள். இந்த ஆலயங்கள் எப்படி இருக்க வேண்டும்?  இவை எவ்வாறு   நிர்மாணம் செய்யப்பட வேண்டும் போன்ற செய்திகளைப் பற்றிக் கூறும் சாஸ்திரம் ஆகம ஜோதிடம். 

நாடி ஜோதிடம்: நமது ரிஷிகள் எழுதி வைத்த ஓலைச் சுவடிகளில் இருந்து பலன்களைப் பார்த்துச் சொல்வர். இதற்கு மனிதனின் கைவிரல் ரேகை தேவைப்படும். இந்த முறையில் பிறப்பு காண்டம், திருமண காண்டம் என்று பல்வேறு காண்டங்கள் உள்ளன. இந்த நாடி ஜோதிடம் முனிவர்களின் பெயரில் அகஸ்திய நாடி, பிருகு நாடி, ஸப்த ரிஷி நாடி என்று அழைக்கப் படுகிறது.

ஆருட சாஸ்திரம்: மனிதனின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு, அவர்கள் கேள்வி கேட்கும் நேரத்தின் அடிப்படையில், கிரகங்களின் அமைப்பைக் கொண்டு விடை கூறப்படும். உதாரணத்திற்கு, களவு போன பொருள் கிடைக்குமா? இது போன்ற கேள்விக்கான விடைகளை இந்தச் சாஸ்திரம் சொல்லும்.

தேவப்பிரச்னம், அஷ்டமங்களப் பிரச்னம்: இவை இரண்டும் கேரள மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. தேவப்பிரச்னத்தில், ஆலயங்களில் தெய்வ சாந்நித்யம் எப்படி இருக்கிறது, நிகழும் தவறுகள், அவற்றை நிவர்த்தி செய்யக் கடைப்பிடிக்க  வேண்டிய பரிகாரங்கள், சாந்திகள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை அறியலாம்.

அஷ்டமங்களப் பிரச்னம் மூலம் மனிதர்களின் பிரச்னைக்கான தீர்வுகள் சொல்லப்படும். இந்த முறையில் பெரிய ராசிக் கட்டம் போடப்பட்டு, இறை வழிபாடு செய்தபின், சோழிகளைக் குலுக்கிப் போட்டுக், கணக்கிட்டு, பிரச்னைக்கு உரிய பலன்கள், தீர்வுகள் ஆகியவை சொல்லப் படும்.

சாமக் கோள் ஆருடம்: இதுவும் கேரள மாநிலத்தில் பிரபலமாக உள்ள ஒன்றாகும்.  இந்த முறையிலும், மனதை கலங்க வைக்கும் பிரச்னைக்கான விடைகள் கிடைக்கும். சாமங்களையும், கிரகங்களையும் சேர்த்து பலன்கள் கூறப் படுவதால் சாமக் கோள் ஆருடம் என்று அழைக்கப் படுகிறது. அத்துடன் கிரகங்களின் வலிமை, அவை நிற்கும் ராசிகள் ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் பெறும். கேள்வி கேட்கும்  நேரத்திற்கு ஏற்ப, சாமங்களில் உள்ள கிரகங்களின் நிலைகேற்ப பலன்கள் சொல்லப் படுகின்றன.

தாம்பூலப் பிரச்னம்: ஜோதிடர்களை நாடி வருபவர்கள் கொண்டு வரும் தாம்பூலத்தின் எண்ணிக்கையின் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படும். தற்போது சில இடங்களில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

வியாபார ஜோதிடம்: தானியங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வியாபாரப் பொருட்களின் ஏற்ற இறக்கம், பங்குச் சந்தை நிலவரம், புதுக் கணக்குத் தொடங்க ஏற்ற நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள வியாபார ஜோதிடம் உதவும்.

சீட்டுக் கட்டு ஜோதிடம்: மேல் நாடுகளில் இந்த முறை தற்பொழுது பிரபலமாக உள்ளது. சீட்டுக் கட்டில் வரும் படங்கள், வண்ணங்கள், அவை சொல்லும் செய்திகள் இவற்றின் அடிப்படையில் பலன்கள் சொல்லப்படும்.

மருத்துவ ஜோதிடம்: ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையில் என்ன நோய், அது எப்போது தீரும், அறுவை சிகிச்சை எப்போது வைத்துக் கொள்ளலாம், எப்போது மருந்துண்ணலாம் என்றெல்லாம் அறிந்து கொள்ள உதவுவது மருத்துவ ஜோதிடம்.

குறி ஜோதிடம்: கையில் பிரம்பை வைத்துக் கொண்டு, கேள்வி கேட்பவரின் மன நிலையையும் கருத்தில் கொண்டுச் சொல்லப்படுவது. இதைத் தவிர பல்லி விழும் பலன், பல்லி சொல்லுக்கு உரிய பலன், கௌரி பஞ்சாங்கம், சீதை, ராமர் சக்கரம் ஆகியவையும் உள்ளன.

இவ்வளவு வகை ஜோதிடம் இருப்பதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. அது பிரச்னைகளுக்கு உரிய தீர்வு. மனிதன் நாள் தோறும் வாழ்வில் பல வகையான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறான். ஏதேனும் ஒரு வழி மூலம் அதற்கான விடை கிடைத்தால் சரி. இந்தத் தேடலின் விளைவுதான் இத்தனை வகை ஜோதிடம்! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவரவர் இருக்கும், இடம், சூழலுக்கு ஏற்ப தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் வேண்டிய தீர்வுகளை மனிதன் பெற்றுக் கொண்டிருக்கிறான்.  அதற்கு ஜோதிடம் வழி காட்டிக் கொண்டிருக்கிறது! 

 முகவரி: திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc. P.G.Dip. in journalism, சித்தாந்த ரத்னம், சித்தாந்த நன்மணி, ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு, மாரியம்மன் நகர், காராமணிக் குப்பம், புதுச்சேரி-605004.

செல்:(0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com,  gayabala_astro@yahoo.co.in,  astrogayathri@rediffmail.com 

 

படங்களுக்கு நன்றி: http://www.indusguru.com/five-differences-between-vedic-and-western-astrology

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வழி காட்டும் ஜோதிடம்

  1.  Hi enakku oru santhekam pirantha jathakam sari ellai enral  ruthuvana jathakam vaithu thiruman pannalama. pls reply pannunga

  2. Respected madam ungal punithamana jothida sevaikku naan thalai vanunku kiren,
    nanri vanakkam.

    anbudan,

    ramu babu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *