பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
நேரடி வருணனை: புதுவை எழில்
படங்கள்: திருமதி லூசியா லெபோ.
தகவல்: ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ
================================
தொடக்கம் :
பாரீஸ் நகரில் பல்கலைக்கழக நகரம் (Cité de l’Unviersité) ஒன்று உள்ளது. அங்கே இந்தியத் தாயகம் (Maison de l’Inde) என்ற மண்டபத்தில் 31/10/2010 (ஞாயிறு) அன்று, பிரான்சு கம்பன் கழகத்தின் 9ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. காலை 11 மணி அளவில் பிரான்சு கம்பன் கழகத்தின் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன், செயலர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ இருவரும் ஒருசேரக் ‘கம்பன் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க’ என்று குரல் எழுப்ப, மக்கள் கூட்டுக் குரல் கொடுத்தார்கள். பேராசிரியர் பெஞ்சமின் லெபோவின் சிறிய அறிமுக உரைக்குப்பின் புதிய தொகுப்பாளர் திருமதி சுகுணா சமரசம் அழைப்பு விடுக்க, கம்பன் கழகத்தின் துணைப் பொருளாளர் அசோகன், திருமதி அசோகன் பிரபா இணையர் மங்கல விளக்குக்கு ஒளி ஊட்டினர். திருமதி சிவகவுரி கணாநந்தன் தன் இனிய குரலில் கவிச் சக்கரவர்த்தியின் கடவுள் வாழ்த்து, பாவேந்தனின் தமிழ்த் தாய் வாழ்த்து பாட, விழா இனிதே தொடங்கியது.
உரை விருந்துகள் :
கம்பன் கழகத்தின் பொதுச் செயலர் செவாலியே சிமோன் யூபர்ட் அனைவரையும் வரவேற்றார். விழாவுக்குத் தலைமை தாங்கிய பண்டிட் அரிஅர சிவாச்சார்யார், கம்பன் புகழ் பாடி உரை ஆற்றினார். ஆசி உரை என்றால் என்ன என்று விளக்கிய அருள்திரு கணேச. சிவசுத குருக்கள், ‘கம்பன் கழகம் வாழ்க, வளர்க’ என்று ஆசி கூறி விடை பெற்றார். வாழ்த்துரை வழங்க வந்த கவிமணி ச. விசயரத்தினம் கவிதையிலேயே வாழ்த்தை அமைத்திருந்தது மிகச் சிறப்பாக இருந்தது. சுவிஸ் கம்பன் கழகத்தின் தலைவரும் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்து ஆன்மீகப் பணியாற்றி வருபவரும் ஆன அருட்பெருந்தகை சரவணபவானந்த குருக்கள், ‘கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்’ என்று வலியுறுத்திப் பேசினார்.
இந்த ஆண்டு சிறப்புரை வழங்க வந்திருந்தவர் கலை விமரிசகர், எழுத்தாளர், கவிஞர் இந்திரன் அவர்கள். அவரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்த பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சிறப்பு விருந்தினர் பற்றிய சுவையான செய்திகளைச் சுவை படக் கூறியதை அவையினர் பெரிதும் ரசித்தனர். 133 அடி உயர வள்ளுவர் சிலையைக் கன்னியாகுமரியில் நிறுவியதன் நினைவாக 133 குறள் அதிகாரங்களுக்குத் தக்கவாறு 133 ஓவியர்களைக் கொண்டு 133 ஓவியங்களை எழுத வைத்துக் கண்காட்சி நடத்தித் தமிழக முதல்வர் பாராட்டைப் பெற்றவர், புதுச்சேரி மாநிலத்தவர் அவர் எனப் பேராசிரியர் அறிவிக்க, மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
‘கம்பனில் அழகியல்’ என்ற தலைப்பில் உரை ஆற்றிய இந்திரன், ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச’ என்ற வரி ஒன்றை வைத்துக்கொண்டு கம்பனில் எப்படி அழகியல், பண்பாட்டு அழகியல் விளக்கமுறுகிறது என அழகாக விளக்கினார். பண்பாட்டு அழகியலை விளக்கும் போது, பாமர மக்கள் எப்படிப் பாம்படம் என்ற அணிகலன் வழி தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லிப் பாவேந்தர் பாடல் ஒன்றையும் பொருத்தமாகத் தொடுத்துச் சொன்னார்.
பூக்கொடி, மாங்காய் மாலை… போன்ற நகை நட்டு வழியாகப் பெண்கள் தமிழ் அழகியலை வளர்க்கிறார்கள் என்று சொன்னபோது மகளிர் பக்கம் இருந்து ஏகப்பட்ட ஆமோதிப்புகள். அடித்தட்டு மக்கள் தாம் மொழியை வளர்கிறார்கள் என்பதையும் விளக்கிய கலை விமரிசகர் இந்திரன், தமிழ்ப் பண்பாட்டைப் பெண்கள் தாம் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து விடை பெற்ற சமயம் அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது. உருளைக் கிழங்குச் சீவல், உருளைக் கிழங்குக் கறி, மசால் வடையோடு சித்திரான்னம் பரிமாறப்பட, மக்கள் உண்டு களித்து உறவு நட்புகளுடன் உரையாடி மகிழ்ந்தனர். சுவையான உணவைச் சமைத்து வழங்கிய திருமதி குணசுந்தரி பாரதிதாசன், திருமதி வாணி மூர்த்தி இருவரையும் மக்கள் வாழ்த்தி நெகிழ்ந்தனர். இடையே, நிகழ்ச்சி நிரலில் இல்லாத நிகழ்ச்சியாகச சின்னஞ் சிறிய அன்னம் அனைய – எட்டு வயதும் எட்டாத – சிறுமி ஒருத்தி ஆத்திச் சூடி, வடமொழிச் சுலோகம் முதலியன கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.
கலை விருந்துகள் :
காலை நிகழ்ச்சியின் போது, திருமதி சிவகவுரி கணாநந்தன் மாணவியர் இருவர் வாய் பாட்டுப் பாட, மாணவர் ஒருவர் வயலின் வாசிக்க, மற்றவர் ஒருவர் தபேலா வாசிக்கக் கச்சேரி களை கட்டியது. மதிய விருந்துக்குப் பின்னர் கலை விருந்துகள் நடைபெற்றன.
செல்வி வியார் ப்பன்னி என்ற வெள்ளைக்கார இளம் பெண், ஜதி பிசகாமல், தாளம் தவறாமல், பாவ, அபிநய, முத்திரைகளோடு பரதம் ஆடியபோது அந்த இந்திர உலகமே இந்த மண்ணில் வந்தது போல் இருந்தது.
திருமதி இராதா சிறீதரன் தம் மாணவியர் இருவருடன் மேடையில் அமர்ந்து, இனிய தமிழிசை விருந்து அளித்தார். நாட்டிய கலைமாமணி செலினா மகேசுவரன் மாணவியர் அடுத்தடுத்து நடனங்கள் அளித்து, அவையினரை இன்பக் கடலில் ஆழ்த்தினர். கலைமாமணி அருள்மோகன் ஆடற்கலையக நடன மணிகள் மணியான நடனங்களை ஆடிக் களிபூட்டினார்கள். திருமதி நித்தியா சிவகுமார், திரைப்படப் பாடல்கள் சிலவற்றை அழகாகப் பாடிக் கைதட்டலைப் பரிசாக அள்ளிச் சென்றார்.
பட்டயம், விருதுகள்….:
இந்தியத் தூதரக அதிகாரி திருமிகு வெ. நாராயணன், கம்பன் விழா மலரை வெளியிட்டு, பட்டயம், விருதுகளை வழங்கினார். எழுத்துப் பணிப் பட்டயம் பேராசிரியர் ச.சச்சிதானந்தம் (இங்குள்ள அண்ணாமலை தொலைதூரக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. மணி விழா வாழ்த்துப் பெற்றவர், வண்ணைத் தெய்வம்.
கவிதாயினி எழில் துசியந்தி, கவிதைப் பணிப் பட்டயம் வழங்கப்பெற்றார். கவிதாயினி அருணா செல்வம் படைத்த ‘கம்பன் விருத்தத்தில் வைத்த விருந்து’ என்ற மரபுக் கவிதை நூல் வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் திருமதி பிரியா நாராயணன். இக்கவிதாயினிக்கு யாப்பிலக்கணம் கற்பித்துக் கவிதைப் பயிற்சியும் அளித்த கவிஞர் கி. பாரதிதாசன் இந்நூலைப் பற்றி விரிவாகப் பேசிப் பாராட்டினார். நேரடியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் அவருக்குத் தாம் அளித்த பயிற்சியினை விளக்கமாகக் கூறினார்.
கவிஞர்கள், கம்பனிடம் கேட்ட கேள்விகள்:
கவிஞர் கி.பாரதிதாசன் தலைமை தாங்க, கவிதாயினி சிமோன் இராசேசுவரி, கவிதாயினி சரோசா தேவராசு, கவிஞர் தேவராசு, கவிதாயினி அருணா செல்வம், கவிஞர் பாமல்லன்…. ஆகியோர் ஆளுக்கொரு கேள்விக் கணையைக் கம்பனை நோக்கி வீசினர், கவிதை வடிவில். இந்த நிகழ்ச்சி புதுமையாக விளங்கி மக்களை ஈர்த்தது.
பட்டிமன்றம்:
இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்ற பட்டி மன்றத்துக்குத் தலைவராகவும் நடுவராகவும் அமர்ந்தவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.
தலைப்பு : தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர்: கூனியே ! சூர்ப்பணகையே ! இராவணனே!
கூனிக்குக் குரல் கொடுக்க வந்த திருமதிகள் : சரோசா தேவராசு, லூசியா லெபோ. சூர்ப்பணகை பக்கம் நின்றவர்கள் திருவாளர்கள் பாரீசு பார்த்தசாரதி, சிவப்பிரகாசம். திருமதிகள் சிமோன் இராசேசுவரி, ஆதி லட்சுமி வேணுகோபால் இருவரும் இராவணனுக்காக வாதாடினார்கள். பேசிய அனைவருமே சிறப்பாகப் பேசப் பட்டிமன்றம் சூடும் சுவையுமாகத் தூள் பறக்கத் தமக்கே உரிய வெண்கலக் குரல் எடுத்து ஆங்காங்கே நகைசுசுவைச் சரம் தொடுத்துப் பட்டி மன்றத்தை நடத்திச் சென்றார் பேராசிரியர். சூர்ப்பணகை செய்த தீமை அவள் குலத்தை மட்டுமே நாசம் செய்தது; ஆனால் கூனியோ மூன்று உலகினுக்குமே இடுக்கண் மூட்டியவள்; மேலும் ‘இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்’ என்று கம்பன் கூறி இராவணனுக்குச் சமமாகக் கூனியை நிறுத்துகிறான். ஆகவே, சூர்ப்பணகையை மன்றத்தில் இருந்து நீக்கி விடுவதாக நடுவர் அறிவித்தார். பிறன் மனையை நயந்த தீமையைச் செய்தவன் இராவணன். அந்தத் தீமைக்கு முதல் காரணமாக, அடிப்படைக் காரணமாக அமைவது கூனியின் தீமையே. மேலும், இராமாயணத்தின் முதன்மைப் பாத்திரங்கள் இராமன், சீதை, இராவணன். மூன்றுமே கூனியின் தீமையைத்தான் நினைவு கூர்ந்து சுட்டிக் காட்டிப் பேசுகிறார்கள். ஆகவே தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே என்று தீர்ப்பு வழங்கினார் நடுவர்.
இதற்கும் மேலான இன்னொரு தீர்ப்பு இருக்கிறது என்று தொடர்ந்த பேராசிரியர், ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’ என்ற பாரதியின் வரியை எடுத்துக் காட்டி, அதனால்தான் தீமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதனை வளர விடாமல் உடனடியாக அணைத்துவிட வேண்டும்; இல்லெனில் வெந்து மடியும் காடு. பல இடங்களில் தீ வைத்து, இந்தக் கருத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார், ‘தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்’ என்று. எனவே நம் உள்ளத்தில் தீமையின் சிறு பொறியும் எழாதவாறு விழிப்பாக இருப்போம்; இருக்க வேண்டும் என்பதையே இந்தப் பட்டி மன்றத்தின் உச்சத் தீர்ப்பாகப் பேராசிரியர் அறிவித்தபோது, ‘ஆகா இரட்டைத் தீர்ப்புகள், நல்ல தீர்ப்புகளே’ என மக்கள் கை தட்டிப் பாராட்டி ஏற்றுக்கொண்டனர்.
பிரான்சு கமபன் கழத்தின் பொருளாளர் தணிகா சமரசம் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது. முதல் முறை என்றாலும் நிகழ்ச்சிகளைத் திருமதி சுகுணா சமரசம் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.