பத்திகள்

புதிய கலாச்சாரங்கள் புகுவது ஏன்?

விசாலம்

Vishalamநமது கலாச்சாரம், தொன்றுதொட்டு வரும் ஒன்று. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அவை பெருமளவு குறைநது வருவதைக் காண்கின்றேன். முன்பு மஹாளய தினங்களிலும் மற்றபடி அமாவாசை, கிரஹணம் போன்ற தினங்களில், மனமொப்ப சிரத்தையாக முன்னோர்களை நினைத்து, அதற்குத் தகுந்தாற்போல் புரோகிதர்களை வரவழைத்து, தர்ப்பணம் செய்து, அவர்களது ஆசிகளைப் பெறுவார்கள். ஆனால் இப்போது இருக்கும் இயந்திர யுகத்தில் எல்லாம் “ஷார்ட் கட்” ஆகிவிட்டது. பலர் இந்த நாட்களை அனுசரிப்பதையே விட்டுவிட்டனர்.

கல்லூரிக்குப் போகாமல் ஒரு பெண் விடுப்பு எடுத்திருந்தாள். நான் அவளிடம் கேட்டேன்.

“என்ன கல்பனா, காலேஜ் போகவில்லையா? வீட்டில் மஹாளய தர்ப்பண நாளா?”

அவள் பதில் சொல்லத் தெரியாமல் திணறினாள்.

பின் கேட்டாள் “அப்படின்னா என்ன ஆன்ட்டி?”

நான் இதைப் பற்றிச் சொன்னேன். அவள் தன் வீட்டில் இது போல் எதுவும் செய்து பார்த்ததில்லை என்றாள். சடங்குகள் செய்வதும் செய்யாமல் இருப்பதும் தனிப்பட்டவரின் சுதந்திரம் தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால் வெளிநாட்டில் இதேபோல் செய்யும் ஒன்றை நம் மக்கள் “காப்பி” செய்து மகிழ்கின்றனரே!

இதுதான் ‘ஹாலோவீன்’ (Halloween) என்ற திருநாள். எது வெளிநாடுகளிலிருந்து வந்தாலும் அது இந்தியர்களுக்கு “அல்வா” மாதிரிதான். இசையுடன் யோகா செய்வது. அவர்கள் செய்யும் மெடிடேஷன் என்ற தியானம் {பிராணாயாமம், தியானம் எல்லாம் நமதுதான்} போன்றவை, அமெரிக்கா, கனடா போன்ற தேசங்களிலிருந்து வந்தால் பலர், பல ஆயிரங்கள் கொடுத்துக் கற்றுக்கொள்கின்றனர். இவை எல்லாம் நமது இந்தியாவின் சரக்குகளே. நாம் கண்திருஷ்டி, ஏவல், தீய சக்திகள் அண்டாமல் இருக்கப் பூசணிக்காயில் பெரிய மீசை வரைந்து, ஒரு ராட்சசன் போன்ற உருவத்தைப் புது வீட்டின் முன் கட்டுகிறோம்.

ஹாலோவீன் போதும் மக்கள், டர்னிப் என்ற காயிலும் பூசணி அல்லது பரங்கிக்காயிலும் பலவிதமான உருவங்கள் வரைந்து தேவைப்பட்டால் அழகாகச் செதுக்கி, அதை சன்னல் அருகில் தொங்க விடுகின்றனர் ,

நாம், இறந்த மூதாதைர்களுக்காகச் சில சடங்குகள் செய்து அன்னதானமும் செய்கிறோம். இந்த ஹாலோவீன் நாளிலும் வெளிநாட்டவர்கள், இறந்தவர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள். இந்தத் தினத்தில் பலர் பலதரப்பட்ட பிசாசுகளின் உருவங்களை முகமூடிகளாகத் தயாரித்து, அவற்றை அணிகின்றனர். இதன் காரணம் என்னவென்றால் அன்றைய தினத்தில் வரும் தீய சக்திகள் இந்த முகமூடி பிசாசுகளைப் பார்த்து மறைந்துவிடுமாம்.

ஸ்காட்லாந்தில் ஆண்கள், வெள்ளை உடையுடன் இந்த அரக்கன் போன்ற முகமூடிகளை அணிந்தோ அல்லது முகம் முழுவதும் கறுப்பு வண்ணம் பூசியபடியோபயமுறுத்துவார்களாம். நாம் ஹோமம் வளர்ப்பது போல் இவர்களும் நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி அமர்ந்து நடனம் ஆடுகிறார்கள். இந்த நாளை மனத்தில் கொண்டுதான் ‘டிராகுல்லா’, ‘தி மம்மி’ படங்கள் தயாரிக்கப்பட்டு மிகவும் ‘ஹிட்’ ஆயின.

halloweenஇன்றைய தினத்தை மேலும் பயமாக்க, செயற்கைப் பொருட்கள் தயாரிக்கின்றனர். அதில் பெரிய எட்டுக்கால் பூச்சி, எலும்புக் கூடு, செயற்கை மயான பூமி, கறுப்புப் பூனை,  ரப்பரால் ஆன பிசாசு போன்றவற்றைத் தயாரித்து, கம்பெனிகளும் லாபம் பெறுகின்றனர். பள்ளிச் சிறுவர்களும் பூதம் போல் வேஷம் போட்டுக்கொண்டு, வீடுகளுக்குச் சென்று
விருந்து கேட்கின்றனர். ஆப்பிளை ஒரு பெரிய தொட்டியில் மிதக்கவிட்டு, பற்களால் கவ்வி எடுக்கும் விளையாட்டும் உண்டு.

நம் கிராமங்களில் இருந்து வரும் மூடநம்பிக்கைகள் போல் அங்கும் இருக்கின்றன. ஸ்காட்லாந்தில் இந்த நாளில் திருமணமாகாதவர், ஆப்பிள் பழத்தின் தோலை மெல்லியதாகச் சீவி, தோளில் போட, அது எந்த உருவத்தின் எழுத்தில் அமைகிறதோ, அந்த எழுத்தின் ஆரம்பம் தான் அவள் மணக்கப் போகும் மாப்பிளையின் பெயராம்.
தவிர, இன்னொரு பழக்கமும் இருக்கிறது. கன்னிப் பெண், ஒரு இருட்டு அறையில் ஹலோவீன் நாளில் இரவைக் கழிக்க, அவளது வருங்காலக் கணவரின் முகம் மறுநாள் அங்கிருக்கும் கண்ணாடியில் தெரியுமாம். திருமணம் இல்லாமல் வேறு அபசகுனமாக இருந்தால், எலும்புக்கூடு தெரியுமாம். நம் நாட்டிலும் வெற்றிலையில் கறுப்பு தடவி, இறந்த காலம், நிகழ்காலம் எல்லாம் சொல்லும் ஜோசிய மேதைகள் இருப்பதைக் கேள்விப்படிருக்கிறேன்.

சிலர் இந்த நாளில் பரிசாக வாங்கும் ஆப்பிள் கேக்கின் உள்ளே ஒன்று இரண்டில் தங்கக் காசு, மோதிரம் போன்றவை வைத்து விற்பார்கள். இதனால் அவரது விற்பனை அதிகமாகும்.

கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டின் பல கலாச்சாரங்களை இளைஞர்கள் எடுத்துக்கொள்கின்றனர். இது போல் வந்ததுதான் காதலர் தினம் (valentine day). இப்போது இந்த ஹாலோவீன் நாளும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் வந்துவிட்டது. சென்னை அதற்கு விதிவிலக்கல்ல. கல்லூரி மாணவிகள், இதற்கென்று தயாரித்த
பயங்கரமான பிசாசு முகமூடியை அணிந்துகொண்டு வலம் வருகிறார்கள். இதைத் தயாரிக்கும் மனிதனும் இதனால் பணம் கொள்ளை அடிக்கிறான்.

நமது கலாச்சாரத்துடன் வெளிநாட்டுக் கலாச்சாரமும் சேர்ந்தால் நல்லதுதான். ஆனால், நம் சம்பிரதாயங்கள், சடங்குகள் எல்லாம் மூட்டைக் கட்டிவிட்டு, வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் நாட்டம் கொள்ள, பெற்ற தாயை உதறித் தள்ளுவது போல் ஒரு பிரமை தோன்றுகிறது.

வெளிநாடுகளில் சுத்தம், சட்டத்தை மீறாமல் இருப்பது…. போன்றவை நம்மைக் கவருகின்றன. இந்த நல்ல அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ளலாமே!

==================================

Halloween படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    As the writer said we are copying only wrong things from advanced countries. But when it comes to the question of adhering to discipline we are not copying other countries.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க