அமெரிக்க இடைத் தேர்தலுக்குப் பின்..

1

முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை

Nageswari_Annamalaiஅமெரிக்க காங்கிரஸின் மேலவையான செனட்டின் சில இடங்களுக்கும் கீழவையின் எல்லா இடங்களுக்கும் 2010 நவம்பர் இரண்டாம் தேதி தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. அரசியல் ஆய்வாளர்கள் அறிவித்திருந்தபடி தான் முடிவுகள் வந்திருக்கின்றன. ஒரு வேளை அவர்கள் கூறுவது பொய்யாகிவிடுமோ என்று எதிர்பார்த்த என்னைப் போன்றோர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள், பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றன. மேலவையில் ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டியைத் தக்க வைத்துக்கொண்டாலும் கீழவையில்  மிக மோசமாக இழந்திருக்கிறது.  மாநில ஆளுநர் தேர்தலிலும் நிறைய குடியரசு அங்கத்தினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

நடுநிலைப் பத்திரிக்கையான நியுயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் தேர்தல் அன்று வெளிவந்த பதிப்பில் கூட “தயவுசெய்து எல்லோரும் ஓட்டுப் போடுங்கள்.  நிதானமாக யோசித்துப் போடுங்கள். 2008இல் நீங்கள் ஒபாமா என்னென்ன சாதிப்பார் என்று நினைத்து ஓட்டுப் போட்டீர்களோ, அவை எல்லாவற்றையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் ஏன் சாதிக்க முடியவில்லை என்று எண்ணிப் பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டு பத்திரிக்கை ஆதரிக்கும் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் ஒருவர் தவிர எல்லோரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அதற்கு முன்னும் பல தடவை தான் ஆதரிக்கும் வேட்பாளர்களாக ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களின் பெயர்களையே கொடுத்து வந்தது. இப்போது ஒபாமா தான் செய்த அரசியல் திட்டங்கள் எதையும் சரியாக ஜனங்களிடம் எடுத்துச் சொல்லவில்லை என்று குறை கூறியிருக்கிறது. ஒரு வேளை தனக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தைத் தணித்துக்கொள்ள இப்படிக் கூறியிருக்கலாம் என்று சமாதானம் செய்துகொள்வோம்.

Obamaதேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கூட ஒபாமா பல மாநிலங்களுக்குச் சென்று, தன்னுடைய ஆட்சி அதுவரை செய்ய முயன்று, ஆனால் முடிவுறாமல் இருக்கும், பல திட்டங்களை முடிப்பதற்குத் தன் கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்ல, இரண்டு கட்சி அங்கத்தினர்களையும் அரவணைத்துச் சென்று, அமெரிக்கா போய்க்கொண்டிருந்த பாதையிலிருந்து அதைத் திசை திருப்ப முயன்றார். சில வருடங்களாக உலக அரங்கில் அமெரிக்கா இழந்து வந்த அதன் படிமத்தை(image) திருப்பிப் பெற முயன்றார்.

ஜனாதிபதி ஒபாமா செய்ய விரும்பிய சீர்திருத்தங்களை முடிக்க விடாமல் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சிக்கு மக்கள் மிகுந்த ஆதரவு அளித்திருக்கிறார்கள். சாரா பேலின் போன்ற அரைவேக்காடுகள் இந்த குடியரசுக் கட்சியின் வெற்றியை அரசியல் பூகம்பம் என்று வர்ணித்திருக்கிறார்கள். கீழவையின் தலைவராகப் போகும் பேனர் (Boehner) ‘அமெரிக்க மக்கள், ஒபாமா அரசுக்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய செய்தி’ என்று அறைகூவுகிறார்கள். ரேண்ட் பால் என்னும் டீ பார்ட்டியின் தலைவர் ஒருவர், அமெரிக்காவை அமெரிக்கர்களுக்காக மீட்டுவிட்டோம் என்று கொக்கரிக்கிறார்.

இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? அமெரிக்காவை இந்தக் கட்டத்தில் திசை திருப்ப ஒபாமாவால் கூட முடியாது என்பதுதான். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக அரங்கில் பிரிட்டனின் செல்வாக்குக் குறைந்துகொண்டு போனபோது அமெரிக்காவின் கை உயரத் தொடங்கியது. அமெரிக்காவின் வளம் பெருகிக்கொண்டே போனது.  இந்த வளம், ஓரளவு எல்லாப் பிரிவினருக்கும் கிடைத்தது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற வாழ்க்கை வசதிகளைப் பெரும்பாலான அமெரிக்க மக்கள் அடைய முடியும் என்ற அமெரிக்கக் கனவு உருவாகியது. அது நடைமுறையிலும் சாத்தியமாயிற்று. உலக அரங்கில் அமெரிக்கா வளத்தில் முதல் இடம் வகிக்கத் தொடங்கியது. எல்லா நாடுகளும் அமெரிக்காவைப் பின்பற்ற முயன்றன. உலக மக்களின் மனத்தில் அமெரிக்கா சொர்க்க லோகம் போல் தெரியத் தொடங்கியது.

ஆனால் கடந்த முப்பது வருடங்களாக அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செய்த அரசியல்வாதிகளின், குறிப்பாக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ரீகனில் ஆரம்பித்து, ஜனாதிபதி புஷ்ஷின் காலம் வரை, அரசியல் மாற்றங்கள் எல்லாம் பெரிய வணிக நிறுவனங்களுக்கும் பெரிய பணக்காரர்களுக்கும் சலுகை அளிப்பதாகவே அமைந்திருந்ததால் அமெரிக்க சமூகம் ஏற்றத்தாழ்வுகள் உள்ள, சமமற்ற சமூகமாக உருவாகத் தொடங்கியது. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறினர்; நடுநிலை வசதிகள் உள்ள குடும்பங்கள் மறையத் தொடங்கின. 2008இல் மட்டும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துகொண்டிருந்த போதுகூட மிகப் பெரிய பணக்காரர்களின் வருமானம் ஐந்து மடங்கு கூடியதாம். நாட்டின் முப்பத்தெட்டு பெரிய கம்பெனிகளின் பெரிய அதிகாரிகள் ஒரு வருடத்தில் 14000 கோடி டாலர்கள் சம்பாதித்தார்களாம்.

இப்படி ஒரு சிலர் கைகளிலேயே நாட்டின் செல்வம் குவிந்துகொண்டு போவது நாட்டிற்கே நல்லதல்ல என்று உணர்ந்த ஒபாமா போன்ற அரசியல்வாதிகள், அமெரிக்காவின் இந்தப் போக்கை மாற்ற எண்ணி, ஜனாதிபதி பதவியை அடைந்து அந்தப் போக்கை மாற்ற எண்ணினர். 2008இல் ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா போட்டியிட்டபோது, இளம் தலைமுறையினர் உண்மையாகவே அவர் சமூக மாற்றங்கள் கொண்டு வருவார் என்று நம்பி அவருக்கு வாக்களித்தனர். அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவை அவர் தடுத்து நிறுத்துவார், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பார், நட்டின் ஏற்றத்தாழ்வைச் சரிபடுத்துவார் என்று நம்பினர்.

இப்போது அந்த நம்பிக்கை எங்கே போயிற்று? ஏன் மறுபடி குடியரசுக் கட்சியின் அங்கத்தினர்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்? இதற்குப் பல காரணங்கள் கூறுகிறார்கள். 2008இல் ஆர்வத்தோடு வாக்களித்தவர்களுக்கு இப்போதைய தேர்தலின் முக்கியத்துவம் தெரியவில்லையாதலால் அப்போது வாக்களித்த எல்லோரும் இப்போது வாக்களிக்கவில்லை என்கிறார்கள்.

இரண்டாவதாக, நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டுப் போயிருக்கும் நேரத்தில் ஒபாமா, மருத்துவ சீர்திருத்தச் சட்டத்தையும் (Healthcare law) நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தையும் கொண்டு வந்ததற்குப் பதிலாக வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதற்குத் தீவிரமாக முயன்றிருக்க வேண்டும் என்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வேலையில்லாத் திண்டாட்டம் புஷ் காலத்திலேயே ஏற்பட்டது. அதைக் குறைக்க ஒபாமா செய்த முயற்சிகள் பலனளிக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என்பதை மக்கள் உணரவில்லை. பதவிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே அதை ஒபாமாவால் சமாளிக்க முடியாது என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை? நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் பொருளாதாரம் இன்னும் சீர்கெடாமல் இருக்கும் என்பதையும் ஏன் இவர்கள் உணரவில்லை? எல்லாம் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களின் கைங்கரியம்.

இவர்களுக்கு ஒபாமா ஜனாதிபதி ஆனது சுத்தமாகப் பிடிக்கவில்லை. எப்படியாவது அவர் இன்னொரு முறை பதவிக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒபாமா மேல் மக்களுக்கு தப்பெண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள்.  குடியரசுக் கட்சி அங்கத்தினர்களின் செனட் தலைவர், ஒபாமாவிற்கு இரண்டாவது முறை ஜனாதிபதி கிடைக்காமல் பார்த்துக்கொள்வதே எங்களின் முக்கிய குறிக்கோள் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

இனி அமெரிக்கக காங்கிரஸ் எப்படி செயல்படும், அமெரிக்கா எந்த திசையில் செல்லும் என்று பார்ப்போம். ஒபாமா என்ன செய்ய நினைத்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதே குடியசுக் கட்சி அங்கத்தினர்களின் குறிக்கோளாக இருக்கும். ஒபாமா மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்த மருத்துவச் சீர்திருத்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்யக்கூட இவர்கள் தயங்க மாட்டார்கள். அரசியல் தரகர்கள் (lobbyists) பணம் மூலம் பதவிக்கு வந்திருக்கும் இவர்கள், வணிக நிறுவனங்களின் நலனுக்காகவே செயல்படுவார்கள். வணிக நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் காட்டில் இனி மழை பெய்யும். இவர்கள் பணப் பைகள் நிரம்பும். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர் கூறுவது போல், அமெரிக்க சமூகம் வெகு வேகமாக சமத்துவமற்ற சமூகமாக மாறும்.

================================

ஒபாமா படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்க இடைத் தேர்தலுக்குப் பின்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *