தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் கண்டன அறிக்கை – செய்திகள்
சென்னையில் டிசம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை ‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’ நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கை கீழ்வருமாறு :
“இந்தோ சினி அப்ரிசியேஷன்ஸ் ஃபாரம் என்கிற தனியார் அமைப்பு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 22 வரை சென்னையில் ‘சென்னை சர்வதேச திரைப்பட விழா’ என்னும் பெயரில் ஒரு திரைப்பட விழா நத்துகிறது. இந்த விழாவில் இந்த ஆண்டு மூன்று தேசிய விருது பெற்ற திரு. சீனு இராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படமும், இந்திய பனோரமாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லீனா மணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ திரைப்படமும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்பட விழாக்குழுவில் (ICFA) ADVISORY COMMITTEE ல் எங்கள் சங்கத்தின் தலைவர் திரு. பாரதிராஜா மற்றும் செயலாளர் திரு. அமீர் ஆகியோரும் இடம் பெற்றிருப்பதாக தவறான தகவல்களை அளித்து தமிழக அரசிடமிருந்து மேற்கண்ட திரை விழாவிற்கு ரூ. 25,00,000/- பெறப்பட்டிருக்கிறது.
எங்கள் சங்கத்தின் சார்பில் இந்தத் திரைப்பட விழாக்குழுவின் ICFA இத்தகைய செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்தத் திரைப்பட விழாவை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் புறக்கணிக்கிறது. மேலும் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க தமிழ அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.”