நட்பைப் போற்றுங்கள்….!

1

பாலுகீதா

இப்படியும் சிலர்……!  சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். என்னவென்று கேட்டேன். அவர் தனது மனவருத்தத்துக்கான காரணத்தைச் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. 

அந்த  நண்பர், ஒரு குடும்பத்துடன் மிகுந்த நட்புடன் கடந்த இருபது வருடமாகக் கலந்து பழகி வந்துள்ளார். அந்த அக்குடும்பம் மட்டுமல்லாது அவர்கள் சொந்தங்கள் அனைவரும் இவருடன் மிகவும் அன்பாகப் பேசிப் பழகி வந்துள்ளனர். எங்கு சென்றாலும் இவரையும் இவரது குடும்பத்தாரையும் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அவரவர்கள் குடும்ப விழாக்கள் ஒவ்வொன்றுக்கும் இவரை முன்னிறுத்திச் செயல் பட்டிருக்கிறார்கள். இவரும் வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும்  தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளார். சமீபத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்குத் தனது மறைந்த கணவரின் வாயிலாக ஒரு பெருந்தொகை கிடைத்துள்ளது.

அந்தத் தொகை கிடைத்தததும் அவர்கள் நிலை மிகவும் உயர்ந்து விட்டதாக அனைவரிடமும், குறிப்பாக அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடமும், நாங்கள் கோடீஸ்வரர்கள் என்று பெருமை பேசியபடி பணத்தையும் கணக்கில்லாமல் “அவர்களுக்கே” பயன் தரும் வகையில் செலவு செய்து கொண்டிருந்தார்கள். கணவரின் குடும்பத்தாரையும் தனது குடும்பத்தாரையும் மதிக்காமல் அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் இருந்த போதிலும், இவரது நண்பர் குடும்பத்துடன் மட்டும் மிகவும் நெருங்கிய தொடர்புடன் அவர்கள் இருந்தமையால் இவரும் நன்கு பழகி வந்தார்.

அந்தக் கோடீஸ்வரக் குடும்பத்தினரின் நெருங்கிய ரத்த சம்பந்தமுள்ள ஆனால் கருத்து வேறுபாடுகள் உள்ள உறவினரின் மகள் திருமணத்துக்காக சென்னைக்கு வந்தவர்களுக்கு இந்த நண்பர் உதவியுள்ளார். இவர் இப்படி உதவியது அந்தக் கோடீஸ்வரக் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். அதனால் அவர்கள் இவரைக் கோபித்துக் கொண்டார்களாம். “எங்களுக்குப் பிடிக்காதவர்களுக்கு நீங்க எதற்காக உதவி செய்தீர்கள்” என்று கோபித்துக் கொண்டார்களாம். எனது நண்பரோ, “நீங்கள் அனைவருமே எனக்கு நண்பர்கள்தான், எனக்கு அனைவரும் ஒன்றுதான். உங்கள் உறவுக்குள் இன்றைக்கு பிரிவு இருக்கும் நாளைக்குச் சேர்ந்து கொள்வீர்கள். நான் உங்களுக்கும் அவர்களுக்கும் பொதுவானவன்தான்” என்று சொல்லியுள்ளார்.

அவர்களுக்குத் திருப்தி வரவில்லை. அவர்கள் சொந்தங்கள் அனைவரிடமும் இவரைப் பற்றி, “இவர் எப்படிப் போய் உதவி செய்யலாம்” என்று சொல்லியதுடன், சமீபத்தில் அந்தக் கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசு வாங்கிய புதிய இல்லத்தின் “புதுமனை புகுவிழா”வுக்கு இவரைப் புறக்கணித்து அவர்கள் சந்தோஷப் பட்டிருக்கிறார்கள். இப்படி இவரைப் புறக்கணித்தது இவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்ததாகக் கூறினார். ஒவ்வொரு காலகட்டத்திலும் நல்லது கெட்டது அனைத்துக்கும் முன் நின்று செய்த உதவிகளை நானே நன்கு அறிவேன். ஒவ்வொரு முறையும் இந்த நண்பரின் மனைவியைத்தான்  நான் பாராட்டுவேன், இந்த நண்பரை இவ்வளவு தூரம் மற்றவர்களுக்கு உதவிட அனுமதி தந்தமைக்காக….! அந்த நல்ல உள்ளத்தின் மனதும் இவ்வளவு வேதனைப் பட்டிருக்கும் என்பதை எண்ணி எனக்கும் மனவருத்தமே. 

மேலும்,  இதுவரையில் அவர்கள் குடும்ப விழா எதுவும் இவர் இல்லாமல் நடந்தது இல்லை என்பதால் இவருக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்ததாகக் கூறியது எனக்கு வருத்தமாக இருந்தது ஒருபுறம் என்றாலும், “என்ன உலகம் இது! நட்புக்கும் சொந்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்களுடன் இவர் எப்படி இத்தனை நாட்கள் நட்புடன் இருந்தார்” என்று ஆச்சர்யமாகவும் இருந்ததுதான் உண்மை. சொந்தங்கள் ஒரு மனிதனுக்கு அவசியமானதுதான் என்றாலும் நட்பு என்பது எந்தக் காலகட்டத்திலும் எதையும் எதிர்பார்க்காமல் வந்து உதவி செய்து விட்டு விலகிச் சென்று விடும் என்பதையும், சொந்தம் என்பது நம்மிடம் பணம் இருக்கும் வரைதான் நம்மைச் சுற்றி இருக்கும் என்பதையும் அந்தக் கோடீஸ்வரக்குடும்பம்  என்று உணருமோ? எது எப்படியோ நண்பர்களே சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக உங்கள் நட்பை வேதனைக்கு உள்ளாக்காதீர்கள் என்பதே எனது அன்பு வேண்டுகோள்.

நட்பைப் போற்றி நலமுடன் வாழ்வோம்.  

 

படத்திற்கு நன்றி: http://www.eegarai.net/f64-2

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நட்பைப் போற்றுங்கள்….!

  1. புறக்கணிப்பின் வேதனையை அனுபவித்தவிர்களால்தான் உணர முடியும். மனித மனம் எவ்வளவு மென்மையானது என்பதை அது போன்ற தருணங்களில் நம்மால் கண்டுகொள்ள இயலும். காலம் எல்லா வேதனையையும் கரைககும் அருமருந்து. தங்கள் நண்பரின் மனம் அமைதியுறட்டும். உண்மையில் வருந்த வேண்டியது அவரது உறவை இழந்த குடும்பத்தினர்தான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *