வார ராசி பலன்: 19.12.2011-25.12.2011 வரை
பிரபல ஜோதிடர் காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம் : இந்த வாரம், நன்மை தரும் பட்டியலில், புதன் உள்ளார். வியாபார வட்டத்தில் இருந்த தேக்க நிலை மாறி, மீண்டும் பழைய சுறுசுறுப்பு உண்டாகும். செவ்வாய்-5-ல். பணியில் இருப்ப வர்கள், உயர்மட்ட அளவில் உள்ள அதிகாரிகளிடம் பழகும் போது எச்சரிக்கையாய் இருக்கவும். இல்லையெனில், பிறர் செய்யும் தவறுகளுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். சனி 7-ல். சுய தொழில் புரிபவர்கள் பயணங்களில் கவனமாக இருந்தால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம். கலைஞர்களின் தேடலுக்கேற்பத் திறமை மேலும் மெருகு பெறும். அதிக அலைச்சல், பதற்றம், இரண்டும் பொது வாழ்வில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தைச் சற்றே நலிவுறச் செய்யும். எனவே எதிலும் சீரான போக்கை மேற்கொள்வதே புத்திசாலித் தனம்.
இ(ந)ல்லறம்: 2-ல் கேது. பெண்கள், சோம்பேறித்தனம் அவர்களை எதிலும் பின் தள்ளிவிடாமல் பார்த்துக் கொண்டால், வீண் பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம். 10-ல் சுக்ரன், வாழ்க்கைத் துணையோடு இணக்கமாக நடந்தால், சச்சரவு ஏதுமிராது.
ரிஷபம்: சனி நன்மை தரும் 6-ம் இடத்தில் உள்ளார். பணியில் இருப்பவர்கள் முக்கியமான பணியைச் சிறப்பாக முடித்து தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்வார்கள். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்ப லாபமும் அதிகமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள், ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வீண்சோர்வால், வாரமும், வேலைப்பட்டியலும், தடம் புரளாமலிருக்கும். சுய தொழில் புரிபவர்கள் சோர்வு, சோம்பலின்றி செயல் பட்டு வந்தால், பணிகள் தேங்காது. சூரியன் 8-ல். சுய தொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையைக் குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. கலைஞர்கள் செலவு என்னும் பட்டியலில் கவனம் செலுத்தி வந்தால், வரவிற்குள் வாழ்வது என்பது எளிதாகும்.
இ(ந)ல்லறம்: வேலைக்குச் செல்லும் பெண்கள் அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும். சில சமயம் பிள்ளைகளின் போக்கு புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்.
மிதுனம்: 11-ல் இருக்கும் குரு, நல்ல பலன்களைத் தந்து உங்களை மகிழ்விப்பார். சனி 5-ல். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, அவ்வப்போது, குழப்பம் வந்து போகும் என்றாலும், உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருப்பது அவசியம். செவ்வாய் 3-ல். பணியில் இருப்பவர்களுக்கு, அலுவலகம் சென்று வர உதவும் வாகன வசதிகள் பெருகும். கேது 12-ல். சக கலைஞர்களின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டாலும், கலைஞர்கள் இணக்கமான போக்கினைக் கையாண்டால், உறவுகளின் நடுவே உள்ள இறுக்கம் சற்றே குறையும். சூரியன் 7-ல் வியாபாரிகள், சரக்குகளின் போக்குவரத்தின் மீது தங்கள் கவனத்தை பதிய வைத்தால், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது சுலபமாக இருக்கும்
இ(ந)ல்லறம்: 6-ல் ராகுவும், புதனும். பிள்ளைகளின் திருமணம் போன்றவைகள் பெண்களின் விருப்பப்படியே நடைபெறுவதால், இந்த வாரம் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிராது. கருத்து வேறுபாடு கொண்டு விலகியவர்கள் மீண்டும் நேசக்கரம் நீட்டுவார்கள்.
கடகம்: உங்கள் ராசியிலிருந்து 10-ல் குரு வீற்றிருப்பதால், சுய தொழிலில் உள்ளவர்கள், இந்த வாரம், சில தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். 6-ல் சூரியன். பணியில் உள்ளவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்ட உயரதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதால், அவர்கள் மீண்டும் உயர் நிலையை அடைவார்கள். செவ்வாய் 2-ல் இருப்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள், புறம் கூறுபவர்களை அருகில் சேர்க்காமலிருந்தால் புதிய தொல்லைகள் தோன்றாமலிருக்கும். வியாபாரிகள், அகலக் கால் வைக்காமல், கட்டுக் கோப்பாய்ச் செயல்பட்டால், லாபத்திற்குக் குறைவிராது. கலைஞர்கள் எந்தச் சூழலிலும், தவறான திசைப் பக்கம் திரும்பாமலிருந்தாலே, அவர்கள் எதிர்பார்க்கும் நன்மை யாவும் உறுதியாய் கிட்டும்.
இ(ந)ல்லறம்: சுக்ரன் 7-ல். பெண்கள், தேவையற்ற விஷயங்களுக்காகக் கவலைப்படும் சூழல் உருவாகும். அத்துடன், அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு, தவணை சொல்லிப் பணம் தருவதையும் பெறுவதையும் சற்றே நிறுத்தி வைத்தால், வீண் விரயத்தை தவிர்த்து விடலாம்.
சிம்மம்: பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, 9-ல் உள்ள குரு பொருளாதாரத்தில் இருந்த கட்டுக்களை நீக்குவார். செவ்வாய் 1-ல். பொறுப்பான பதவி வகிப்பவர்கள், பிறர்க்கு சிபாரிசு செய்யும் முன் அவர்களின் பின் புலம் பற்றி அறிந்து செயல்படுவது நல்லது. 4-ல் ராகு. சுய தொழில் புரிபவர்கள், செலவுகளில் சற்றுக் கவனமாக இருந்தால், சேமிப்பதற்கான வழி வகைகள் கிடைக்கும். பணி புரிபவர்களுக்கு, உங்களைக் கண்டாலே பதுங்கிச் சென்றவர்கள், மீண்டும் உங்களை நாடி வரும் மாற்றத்தை 3-ல் உள்ள சனி நிகழ்த்திடுவார். புதன் 4-ல் நங்கூரமிட்டுள்ளார். மாணவர்களும், கலைஞர்களும், “கண்டதே காட்சி கொண்டதே கோலம்” என்றிராமல், பழக்க வழக்கங்களிலும், உணவு வகைகளிலும், கட்டுப்பாடாய் இருப்பது அவசியமாகும்
இ(ந)ல்லறம்: பெண்களுக்குப் பொருளாதார நிலை சற்று இறுக்கமாக இருந்தாலும், மனம் தளராமல் செயல்பட்டால், நிலைமை சுமூகமாக இருக்கும். இந்த வாரம், உடல் ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவு உண்டாகலாம்.
கன்னி: 2-ல் உள்ள சனி, வீண் செலவுகளோடு அலைச்சலையும், சேர்த்துத் தருவதால், இரண்டையும் சமாளிக்க உங்கள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கும். செவ்வாய் 12-ல். விளையாட்டு வீரர்கள் மற்றும் முதியவர்கள், ஆரோக்கியத்தை நன்கு கவனித்தால், மருத்துவச் செலவுகள் குறையும். 3-ல் புதன். மாணவர்கள் புதியவர்களிடம் அதிகம் ஒட்டி உறவாட வேண்டாம். பணியில் இருப்பவர்கள், கடன் வாங்கி கொண்டாட்டம் கேளிக்கை ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது. இந்த வாரம் வியாபாரிகள், பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பில் ஓரளவே கிட்டும். பொது வாழ்வில் உள்ளவர்களும், கலைஞர்களும் உணவு, உரை யாடல் இரண்டிலும், காரம் கூடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாரம் சீராக உருண்டோடி விடும்.
இ(ந)ல்லறம்: பெண்களுக்கு விருந்தினர் வரவால் கலகலப்பாகவும், இனிமையாகவும் பொழுது போகும். வரவும் செலவும் சமமாக இருப்பதால், சேமிப்பு என்பது பெயரளவில் தான் இருக்கும்.
துலாம்: சனி 1-ல். ஆதரவாளர்களின் செயல்பாடு, பொது வாழ்வில் இருப்பவர்களின் குடும்ப உறவில் தலையிடாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 2-ல் ராகு, 8-ல் கேது. சுய தொழிலில் உள்ளவர்கள், பணப் பரிமாற்றம், ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். வியாபாரிகள் வேண்டாத அலைச்சல்களைத் தவிர்த்து அமைதியாக இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். மாணவர்கள் யோசித்து நிதானமாகச் செயல்படுத்தக் கூடிய எல்லா விஷயங்களும் ஏற்றம் தரும். பணி புரிபவர்களுக்கு, கடமைகளைக் குறித்த காலத்தில் முடிப்பதற்குக் கூடுதல் கவனமும், உழைப்பும் தேவைப்படும். இந்த வாரம், கலைஞர்களுக்குப் பயணங்கள் பலன் தரும் விதத்தில் அமையும்.
இ(ந)ல்லறம்: பெண்களுக்கு மூட்டு வலி, முழங்கால் வலி ஆகியவை உங்கள் பணிக்குச் சற்று முட்டுக்கட்டை போடும் விதமாக இருக்கும். எனவே ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது அவசியம்.
விருச்சிகம்: கேது 1-ல். வியாபாரிகள் தொழில் தொடர்பான பிரச்னைகளை வளர விடாமல், சுமூகமாக முடித்துக் கொண்டால், தேக்க நிலை உருவாகாமலிருக்கும். பணியில் இருப்பவர் களுக்கு, 6-ம் இட குரு, வருமானம் தொடர்பாக சில சிக்கல்களைத் தோற்றுவித்து, அலைக்கழிக்க வைப்பார். கலைஞர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுதல் நல்லது. சனி 12-ல். சுய தொழில் புரிபவர்கள், கடனை வசூலிக்கச் செல்கையில் கனிவாகப் பேசினால், வரவினங்கள் அதிகமாகும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயலில் இறங்கினால், எடுத்த காரியம் வெற்றிகரகமாக முடியும். பணியில் உள்ளவர்கள், உதவி செய்தாலும், குறை சொல்பவர்களின் குற்றச்சாட்டை கேட்க நேரிடும்.
இ(ந)ல்லறம்: பிள்ளைகளின் விஷயத்தில் பெண்களின் அன்பான வழிகாட்டல், தேவையான அரவணைப்பு இரண்டும் குறையாமலிருந்தால், அவர்களின் வாழ்வு அற்புதமாக அமையும். இளம் பெண்கள் புதிய நட்பு வட்டத்தில், எச்சரிக்கையுடன் இருக்கவும்.
தனுசு: சனி 11-ல். மாணவர்கள் தங்கள் அறிவுத் திறமையால் அனைவரையும் அசத்தி விடுவார்கள். 9-ல் செவ்வாய். வியாபாரிகள் சொத்துகள் விற்கும் முயற்சியைத் தள்ளிப் போடுதல் நல்லது. 2-ல் உலா வரும் சுக்ரன், கலைஞர்களுக்குச், செழிப்பான வாழ்வைத் தருவார். புதன் 12-ல் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் உதட்டளவில் உறவு கொண்டாடுபவர்களின் நட்பைத் துண்டித்தல் நல்லது. 4-ல் இருக்கும் சூரியனால், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு, உடனிருப்பவர்களால், செலவும் அலைச்சலும் ஏற்படும். புதனிருக்கும் 12-ம் இடம் புதிய தொல்லைகளுக்கு வித்திடும் நிலையிலிருப்பதால், பணியில் உள்ளவர்கள் எவரிடமும் அளவாகப் பழகி வரவும். சிலர் ஆராய்ச்சி தொடர்பாக வெளி நாடுகளுக்குச் சென்று வருவர்.
இ(ந)ல்லறம்: பெண்களுக்கு உறவுகளின் ஆதரவும், அனுசரணையும் கிட்டுவதால், முன்பு நிலவிய கருத்து மோதல், கோப தாபம் யாவும் தானே மறையும். இல்லத்தில், விலையுயர்ந்த பொருட்க ளைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை.
மகரம்: சனி 10-ல். முதியவர்கள் உள்ளதால், நரம்பு சம்பந்தமான உபாதைகளுக்குத் தேவையான சிகிச்சையை எடுத்துக் கொண்டால், ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரிகள் பங்குச் சந்தை யில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். 11-ல் ராகு இருப்பதால், பணியில் உள்ளவர்களின் பேச்சும், நடை உடை பாவனையும் மிடுக்காகத் திகழும். 5-ல் கேது. ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது அவசியம். 12-ல் செவ்வாய். விடுதியில் படிக்கும் மாணவர்கள், இரவு நேரங்களில் வெளியில் செல்வதைக் குறைத்துக் கொண்டால், தொந்தரவுகள் ஏதுமிராது. கலைஞர்களுக்குப் புதிய பொருட்களின் சேர்க்கை இல்லத்தில் கூடும். சாதகமான நிலையில் சூரியன் இல்லை என்பதால், வெளிவட்டாரப் பழக்கங்களைக் குறைத்துக் கொள்ளவும்.
இ(ந)ல்லறம்: இந்த வாரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சில உடல் அசௌரிகயங்கள் ஏற்படக் கூடும் என்பதால், வெளியூர்ப் பிரயாணங்களில், உணவு, மற்றும் குடிநீர் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
கும்பம்: சனி 9-ல். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு வீண் அபவாதம், அலைச்சல் ஆகியவை தோன்றி மறையும். 3-ல் குரு. வியாபாரிகள், முன்கோபம், பதற்றம் ஆகியவற்றிற்கு இடம் தராமல், நிதானமாகச் செயலாற்றி வந்தால், வரவுகள் குறையாமலிருக்கும். மாணவர்கள், வாகனம் தொடர்பான ஆவணங்களை கையிலேயே வைத்திருந்தால், வீண்அலைச்சலைத் தவிர்க்கலாம். கலைஞர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். 10-ல் புதன், எதிர்பாராமல் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம், சுய தொழில் புரிபவர்களின் லாபம் அதிகரிக்கும். 11-ல் இருக்கும் சூரியனின் அருளால், இந்த ராசிக் காரர்களுக்கு அரசு வழி உதவி அனுகூலமாய் அமையும்.
இ(ந)ல்லறம்: பொருளாதார விஷயத்தில், சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால், பெண்கள் தகுந்த .விழிப்புணர்வுடனும் ஆலோசனையுடனும் செயல்பட்டு வருவது புத்தி சாலித்தனம்.
மீனம்: சனி 8-ல். பொது வாழ்விலிருப்பவர்கள், வழக்கு தொடர்பான விஷயங்களில், நேரடியாகக் கவனம் செலுத்துவது அவசியம். 2-ல் குரு. மாணவர்களுக்கு, நண்பர்கள், மனம் கோணாமல் நடந்து கொள்வதால், பணிகளை வெற்றியுடன் முடிப்பீர்கள். மறதி, குழப்பம், ஆகியவை எட்டிப் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், வியாபாரிகள், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்களைப் பத்திரமாக வைப்பது நல்லது. கலைஞர்களுக்கு உறவும், நட்பும் மனதிற்கு இதமாய் அமையும். சுய தொழில் புரிபவர்கள், அறிமுகமில்லாத நபர்களிடம் சரக்குப் பரிமாற்றம் செய்வதில் எச்சரிக்கை யாய் செயல்படவும் செவ்வாய் நற்பலனை அள்ளித் தரும் 6-ல் உள்ளதால், சக ஊழியர்கள் பணியில் இருப்பவர்களின் திறமையையும், அருமையையும் புரிந்து கொள்வார்கள்.
இ(ந)ல்லறம்: சுக்ரன் 11-ல். தள்ளிப் போன காரியங்கள் மள மளவென்று நடக்கும். பிள்ளைகளை அதிகாரத்தால் கட்டுப்படுத்துவதை விட, அன்பால் கட்டுப்படுத்தினால் நீங்கள் இட்ட வேலையை உடனுக்குடன் முடித்துத் தருவார்கள்.