மெட்டைக் கேட்டு பாட்டைப் போடு – செய்திகள்
திரை இசையில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகும் பாடல்களைக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இப்போது கதாநாயகனாக ’நான்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனும் ஏ.வி.ஆர். டாக்கீஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவா சங்கர். இவர் மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியவர். தவிர விஜய் ஆண்டனியின் கல்லூரித் தோழரும் ஆவார்.
விதி புரட்டிப் போட்ட ஒரு இளைஞன், புதிய வாழ்க்கை தேடி சென்னைக்கு வருகிறான். வந்த இடத்திலும் அவனைத் துரத்துகிறது சோதனை சுனாமி. தனது இலக்குகளின் பாதைகளில் இருள் சூழும் சூழலில் அவனுக்குக் கிடைக்கிறது புதியதோர் நட்பு. அந்த நட்பின் மூலம் கிடைக்கும் புதிய வாழ்க்கையில் அடுத்த அடிகளை எடுத்து வைக்கும் போது, மீண்டும் கிளம்புகிறது பிரச்சனைப் புயல். அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் கதை.
இதில் விஜய் ஆண்டனி முக்கிய காதாபாத்திரம் ஏற்று அறிமுகமாவதுடன் படத்தின் இசையையும் அவரே அமைக்கிறார். ‘ஆனந்த தாண்டவம்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த் மற்றொரு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘திரு திரு துறு துறு’ படத்தின் நாயகி ரூபா மஞ்சரி நடிக்கிறார். மேலும் அனுயா, விபாவும் நடிக்கிறார்கள்.
‘நான்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் பாடல்களுக்கு புதிய வடிவம் கொடுக்கும் நோக்கில் வெளிநாட்டிலிருந்து இசை வல்லுநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை வரவழைத்து பாடல்களை உருவாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. மற்றொரு சிறப்பு அம்சமாக புதிய கவிஞர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத ஒரு புதிய முயற்சியில் இறங்குகிறார்.
பொதுவாக எல்லாக் கவிஞர்களுக்கும் இசையமைப்பாளர்கள் தத்தகாரத்தில் தான் (லாலாலா…) மெட்டுக்களை வழங்குவார்கள். அதை கேட்டுவிட்டு அதற்கேற்ற வரிகளை கவிஞர்கள் எழுதுவார்கள். இந்த முறை விஜய் ஆண்டனி, அந்த பாடலுக்கான மெட்டை இணையதளத்தில் பாடல் வெளியீட்டுக்கு முன்னதாகவே வெளியிடுகிறார்.
ஆர்வமுள்ள, வாய்ப்பு தேடுகின்ற கவிஞர்கள், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக தங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்த மெட்டை கேட்டு அதற்கேற்ற வரிகளை எழுதி அனுப்பலாம். விஜய் ஆண்டனி அமைத்துள்ள மெட்டை கீழ்கண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
மேற்கண்ட இணைய முகவரியில் யூ டியூப், ஃபேஸ் புக் லிங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடல் வரிகளை, கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபேக்ஸ் எண்ணுக்கு அனுப்பலாம்.
vijayantonylyrics@gmail.com
Fax: +91-44-45542917
19-12-2011 அன்று அந்த பாடலுக்கான மெட்டு இணையதளங்களில் வெளியிடுப்பட்டுள்ளது. இந்த பாடல் தேர்வு வரும் 31-12-2011 அன்று முடிவடைகிறது. இதில் வெற்றி பெற்ற பாடலாசிரியர் யார் என்ற விபரம் ஜனவரி 1, 2 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படும்.
‘நான்’ பாடலாசிரியர் நீங்களாகவும் இருக்கலாம். இப்போதே களத்தில் இறங்குங்கள்!