துலா ராசியில் நுழையும் மந்தன்

1

விசாலம்

சனி பகவான் வரும் புதனன்று 21ம் தேதி மார்கழி 5ம் தேதி {கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரத்தில்} கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலா ராசிக்குள் நுழைகிறார். இந்த இடத்தில் 16-12-14 வரை இருப்பார். துலா ராசி என்பது சுக்கிரனின் வீடு. ஆகையால் கலை, அழகு, ஆடம்பரம்,  காமம் போன்றவைகள் மக்களிடையே அதிகரிக்கும். கலையில் இயல் இசை நாடகமும் வருவதால் சினிமா டிவி கலைஞர்கள் புகழ் உயரும் வாய்ப்பு உண்டு. துலா ராசியின் படமே ஒரு தராசுதான் ஆகையால் நீதி நிலை நாட்டப்படலாம். ரிஷபம்,  தனுர்ராசி,  சிம்மராசியில் பிறந்தவர்களுக்கு யோகம் தான். அதிருஷ்டக் காற்று வீசும். மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் வந்து மத்திமப் பலன்கள் கிடைக்கும்.

மேஷம், கடகம், விருச்சிகம், மீனம் ராசிக் காரர்களுக்குக் காரியத் தடை, உடல் நோய், மனக் கலக்கம் வந்து நீங்கும்.

 சனி பகவான் காயத்ரி

“காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தப் பிரசோதயாத்” 

சனிக்குப் பிரீதி: எள் சாதம் செய்து பிரசாதம் படைக்கலாம். கறுப்புத் துணியில் கறுப்பு எள்ளை சிறு மூட்டைக் கட்டி அதில் நல்லெண்ணை விளக்கேற்றலாம். அனுமானுக்கு வெற்றிலை மாலை சார்த்தலாம், அனுமானுக்கு வெண்ணெயும் சார்த்தலாம். அனுமானிடம் சனி பகவான் வர மாட்டார். சனிக்கு நீல வண்ண மலர்கள் பிடிக்கும். நீல வண்ணச் சங்குப் புஷ்பங்களால் அர்ச்சிக்க வேண்டும். சனி தோஷம் இருப்பவர்கள் நீலக்கல்லை அணிய வேண்டும். சனிக்குப் பிடித்த தானங்கள் இரும்பு, பஞ்சலோகம், ஈயம், குடை,  நீலவண்ண மணிகள் முதலியவைகள்.

சனிக்கு ஈஸ்வரன் என்ற பட்டம் உண்டு. சனியின் தந்தை சூரியன். சூரியனுக்கு மகனாக இருப்பினும் தன்னைக் கண்டு எல்லோரும் விலகி ஓடுகின்றனர் என்ற வருத்தம் கொண்டு சனி பகவான் காசிக்குச் சென்றார். அங்கு பரமேஸ்வரனைக் குறித்துத் தவமிருந்தார். ஈஸ்வரன் மகிழ்ச்சியுடன் தோன்றி அவருக்கு ஈஸ்வரன் என்ற பட்டமும் நவக்கிரகத்தில் முக்கிய  ஸ்தானத்தையும் வழங்கினார். 

சனியின் பரிகார ஸ்தலம் திருநள்ளாறு என்று பலருக்கும் தெரியும். இதைத் தவிர பல்லாவரத்தில் பொழிச்சலூர் என்ற இடத்தில் சனிக்கு ஒரு கோயில் இருக்கிறது. இந்த இடத்தில் சனிபகவான் அகஸ்தீஸ்வரை வழிபட்டு நள்ளாறு என்ற தீர்த்தத்தை உண்டாக்கினாராம்.  ஆகையால் இதை வட திருநள்ளாறு என்கின்றனர். இங்கு ஸ்வாமிக்கு நேராகச் சனிக்குத் தனிச் சன்னதி உண்டு.

தில்லியில் நான் சனிதாம் என்ற இடத்திற்குப் பல முறை போயிருக்கிறேன். இங்கு இயற்கையாகவே ஒரு கற் பாறையில் சுயம்புவாகத் தோன்றியிருக்கிறார் சனி பகவான். இதனால்தான் இந்த இடத்திற்குச் சனிதாம் எனப் பெயர் வந்ததாம். இங்கிருக்கும் சனிபகவான் சுமார் 21அடிகள் உயரமாக இருக்கிறார். இதைத் தவிர அஷ்டதாதுப் பொருட்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள சனியும் அங்கு இருக்கிறார். அருகருகே பல சனீஸ்வரச் சிலைகளும் உள்ளன. அருகே சனீஸ்வர ஆராய்ச்சி மையமும் இங்கு அமைக்கப்பட்டு பல மேதைகள் வல்லுனர்கள் இதில் பங்கு பெறுகின்றனர் .

கும்பகோணத்தில் கால பைரவ கோயில் ஒன்று உள்ளது. இங்கு 12 ராசிகள் தமிழ் எண்களுடன் ஒரு நவகிரகச் சக்கரம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டு இருப்பது வேறு எங்கேயும் காண முடியாத ஒன்று என்று மக்கள் கூறுகின்றனர்.

சென்னையில் மேற்கு மாம்பலத்திலும் ஒரு வித்தியாசமான சனியைக் காணலாம்.  சனி பகவான் சாந்த ஸ்வரூபியாகக் காகத்தின் வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் அருள் புரிகிறார். இங்கு பஞ்சமுக ஆஞ்சநேயரும் இருக்கிறார். இருவரையும் வணங்கினால் ஆயுள் விருத்தி என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

இப்போது ஒரு வித்தியாசமான சனியைப் பார்ப்போம். ஆரணி என்ற ஊரின் அருகே திரு ஏரிக் குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்கு சனிபகவான் ஒரு கல்லாக இருக்கிறார். சுமார் ஆறு அடி உயரம் இரண்டரை அடி அகலம் உள்ள நீள சதுரக்கல் தான் சனி பகவான்.

இதன் நடுவிலே காகத்தின் உருவம் பார்க்க முடிகிறது. வலப்புறம் சூரியன் இடப்புறம் சந்திரன் இருக்கின்றன. இதன் கீழே ஒரு யந்திரம். அந்த யந்திர அமைப்பில் ஒரு தாமரை தன் பன்னிரண்டு இதழ்களை  விரித்தபடி இருக்க அதில் சனியின் பீஜாட்சர மந்திரம் இருக்கிறது.

புதுச்சேரி திண்டிவனம் போகும் வழியில் ஒரு விஸ்வருபச் சனீஸ்வரன் கோயில் உள்ளது.  இந்த இடத்தின் பெயர் மொரட்டாண்டி என்ற ஞாபகம்.மிகப் பெரிய நிலப்பரப்பில் இது அமைக்கப் பட்டிருக்கிறது. சுமார் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் இருக்கலாம். சனி பகவனின் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டது. இருபத்தேழு அடி உயரம் அப்படியே மெய் சிலிர்க்க வைக்கிறது. கீழே பீடமும் உள்ளது. அப்படியே தங்கச் சிலைப் போல் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இங்கு வாஸ்து பகவானும் படுத்த நிலையில் இருக்கிறார். இங்கு நவ கிரகங்களும் தங்கள் வாகனங்களுடன் அமர்ந்து அருள் புரிகின்றனர்.  

நாம் செய்யும் நல்லது கெட்டதிற்கேற்பச் சனி பகவான் பலன் தருகிறார். நாம் நல்லதே நினைப்போம். நன்மையே செய்வோம். சனி பகவானின் தாக்கம் குறைய அனுமானைச் சரணடைவோம். விக்னேஸ்வரையும் வழிபடுவோம். 

சனீஸ்வரன் தன் கடமையைச் செய்பவர்.  தருமத்தை நிலை நாட்டுபவர்.  அவர் காயத்ரியைச் சொல்லி அவரை வழிபட்டு அவர் அருளைப் பெறுவோம். 

 

படத்திற்கு நன்றி: http://jayasreesaranathan.blogspot.com/2010/07/saturns-polar-design-resembles-yantra.html  

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “துலா ராசியில் நுழையும் மந்தன்

  1. மிகவும் பயனுள்ள குறிப்புகள்.ஆலயங்களின் கூடுதல் விபரம் தந்தால் பயனளிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.