இலையின் எல்லைக்கு அப்பால்
குமரி எஸ்.நீலகண்டன்
கங்காருவின் வயிற்றிலிருந்து
கங்காருக் குட்டிபோல்
இலைகள் துளிர்களாய்
விதைகளிலிருந்து
எட்டிப் பார்க்கின்றன.
கூடி விளையாட
கொம்புகளில் இலைகள்
வளர்ந்த போதும்
விரிந்த போதும்
காற்றின் தாளத்திற்குக்
கவிதைகள் படிக்கின்றன
இலைகள்.
காற்று இலைகளின் மேல்
மண்ணை வீசி
எறிந்த போதும்
கோபம் இல்லை இலைக்கு.
அடியில் புழுக்கள்
கூடு கட்டி
இலைகளைக் கீழே
தொங்கி இழுத்த போதும்
வருத்தமில்லை இலைக்கு.
பறவையாய்ப் பறந்த
பட்டாம் பூச்சி கீழே
மழை நீரில் தோய்ந்து
துவண்டு படபடத்த போது
இலையின் மேல்
விழுந்த நீர்த் துளிகளெல்லாம்
கண்ணீராய் சொட்டின.