சேது பாஸ்கரா பள்ளியில் ஒரு புதுமை

அண்ணாகண்ணன்

Sethu_Bhaskara_teachers
சென்னை அம்பத்தூரில் உள்ள சேது பாஸ்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், 2010 நவம்பர் 25ஆம் நாள், குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நவம்பர் 14 அன்றும் அதைத் தொடர்ந்தும் தேர்வுகள் நடைபெற்றமையால் இந்த விழாவை இந்தத் தேதியில் நடத்தினார்கள். இதில் நான் பார்வையாளனாகப் பங்கேற்றேன்.

வழக்கமான குழந்தைகள் தின விழாவில் குழந்தைகள் ஆடிப் பாடி, நிகழ்ச்சிகள் நடத்த, ஆசிரியர்களும் பெற்றோர்களும் கண்டு களிப்பார்கள். இதில் ஒரு புதுமையாக, இந்த விழாவில் ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, மாணவர்கள் கண்டு களித்தார்கள்.

திருமதி யமுனா கோபால் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்க்குமரன், மாணவர்களைப் பற்றிய கவிதையை வாசித்தார். ஆசிரியர்களின் ஒரு குழுவினர், சாக்ரடீசின் கடைசி நிமிடங்களை ஓரங்க நாடகமாக அரங்கேற்றினார்கள். இது, செல்பேசிகளைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.

ஆசிரியர்கள் சிலர், நைட்டிங்கேல் அம்மையாரை அழைத்து வந்துவிட்டார்கள். மேலும் சிலர், ஆங்கில நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். நீதிபதிகள் கவனக் குறைவாக இருந்தாலோ, சட்டத்தைப் பற்றி முழுமையாக அறிந்திராவிட்டாலோ என்ன ஆகும் என்பதை இந்த நாடகம், நகைச்சுவையாக எடுத்துரைத்தது.

சிறந்தவர்கள் யார்? அக்கால மாணவர்களா? இக்கால மாணவர்களா? என்ற தலைப்பில் ஆசிரியர்கள் நடத்திய பட்டிமன்றம், விறுவிறுப்பாக இருந்தது. ஆசிரியர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, வாதாடினார்கள். எஸ்.எஸ்.லதா நடுவராக இருந்து தீர்ப்பளித்தார். இக்கால மாணவர்களுக்கே அவரது தீர்ப்பு.

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி செல்வி பிரிக்டா கே. ஷெல்டன், இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவரும் தம் பங்குக்குப் பாடல்கள் பாடி, மாணவர்களை மகிழ்வித்தார். நல்ல கருத்துரையும் வழங்கினார்.

பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய ஆசிரியர்களைப் பாராட்டியதோடு, அமெரிக்கத் தூதரக அதிகாரி பிரிக்டாவின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார்.

தைலாம்பாளின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதே பள்ளியின் மழலையர் பிரிவிலும் ஆசிரியர்கள், தூள் கிளப்பினார்கள். அவர்கள் வெட்கப்படாமல் நடனம் ஆடியது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

அமெரிக்கத் தூதரக அதிகாரி செல்வி பிரிக்டா கே. ஷெல்டன், மிக எளிமையாகப் பழகினார். நிகழ்ச்சி முடிந்ததும் உடனே அமெரிக்காவில் இருக்கும் தன் அம்மாவைச் செல்பேசியில் அழைத்து, அங்கிருந்த மாணவர்களுடன் உரையாட வைத்தார்.

அடுத்த ஆண்டிலிருந்து, குழந்தைகள் தினத்தன்றே இந்த விழா நடக்கும் என்றும் அந்த நாளில் இனி தேர்வுகள் இருக்காது என்றும் சேது குமணன் அறிவித்தார். மாணவர்களின் கரவொலி, நீண்ட நேரம் கேட்டது.

2 thoughts on “சேது பாஸ்கரா பள்ளியில் ஒரு புதுமை

Leave a Reply

Your email address will not be published.