மலேசியாவில் அண்ணாகண்ணன்

1

அண்ணாகண்ணன்

Penang2010 நவம்பர் 28 அன்று காலை, சென்னையிலிருந்து பினாங்கை நோக்கி விமானம் புறப்பட்டது. 10.15க்குப் புறப்பட வேண்டிய ஏர்ஏசியா விமானம், 10.40க்குத்தான் கிளம்பியது. எனக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. பட்டப் பகலாய் இருந்ததால், அனைத்தும் துல்லியமாகத் தெரிந்தன.  சென்னையின் பிரமாண்ட கட்டடங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்க் குறுகின. மேலே மேகக் கூட்டங்கள் கட்டற்றுத் திரிந்தன. சிறிது நேரத்தில் மேகங்களையும் கடந்து, விமானம் உயர்ந்தது.

ஒரு கட்டத்தில் மேகங்கள் அனைத்தும் குட்டிக் குட்டியாய்த் தெரிந்தன. சற்றே நிமிர்ந்து பார்த்தால் விமானத்திற்கு மேலும் மேகங்கள் இருந்தன. தரையிலிருந்து பார்க்கையில் ஒரே அடுக்கில் மேகங்கள் தெரிகின்றன. ஆனால், உண்மையில் மேகங்களில் பல அடுக்குகள் உள்ளன.

மேகங்களைத் தவிர கடலை மட்டுமே பார்க்க முடிந்தது. தரையே தெரியவில்லை. முழுக்க முழுக்க, கடல். நீல நிற நீர்ப் பரப்பில் வரி வரியாய் அலைகள். 3.15 மணி நேரப் பயணத்தின் முடிவில் மலேசியக் கரை, கண்ணுக்குத் தெரிந்தது. ஆனால், வானிலை சாதகமாக இல்லாததால் விமானம் உடனே தரையிறங்கவில்லை.

தரையிறங்கிய தருணம், மிக இனிது. விதவிதமான மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றும் ஒரு மலையளவுக்கு இருந்தன. அந்திச் சூரியன் அருள் ஒளி பொழிய, பிரமாண்டமான வெண்மேகக் குன்றுகளுக்கு நடுவில், மரகதத் தீவு போல் பினாங்கு மின்னியது. பச்சையம் பூசிய கடல். அதன் மீது ஓரிரு கப்பல்கள், நீரைக் கிழித்துச் சென்றன. அது, ஒரு வெள்ளைக் கோடு போல், நீண்ட வால் போல் தெரிந்தது.

மலேசிய நேரப்படி அன்று மாலை 5 மணியளவில் விமானம், பினாங்கில் தரையிறங்கியது. நண்பர் சேது குமணனின் உறவினரான பூபாலன் மாணிக்கம், இணையவழித் தோழி யமுனேஸ்வரி ஆறுமுகம் ஆகியோர், விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். அங்கிரிட் விடுதியில் எனக்கு அறை பதிந்திருந்தனர். தமிழ்ப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியரான சங்கர், உடனே அறைக்கு வந்தார். இருவரும் கலந்துரையாடினோம்.

பினாங்கில் உள்ள உளவியல் பேராசிரியரும் சைவத் தத்துவங்களில் தோய்ந்தவருமான கி.லோகநாதன் அவர்களைச் சந்தித்தேன். சுமேரிய ஒலி வடிவங்கள், தமிழுடன் ஒத்திருப்பதை விளக்கினார். அவை, முதற்சங்கத் தமிழாக இருக்க வேண்டும் என்ற அவரின் கருத்து, எனக்குப் புதிது. சுமேரிய களிமண் பலகைகளிலிருந்து பெயர்த்து எழுதிய வரிவடிவங்களை அவர் படித்துக் காட்டினார். நினைவிலிருந்து பலவற்றை மனப்பாடமாகச் சொன்னார். அவை, தமிழின் ஒலி வடிவங்களுடன் நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு அஸ்கிரிய மொழியின் அடிப்படையில் அவர் பொருள் கூறினார். என் ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தேன்.

10 ஆயிரம் நூல்களைக் கொண்ட நூலகத்தைத் தன் இல்லத்தில் பராமரித்து வருகிறார். சைவத் தத்துவங்கள் தொடர்பான வகுப்புகளை நடத்தி வருகிறார். ஆகம உளவியல் என்ற பிரிவினை உருவாக்கியுள்ளார். இதன் வழி, ஒருவரின் மனத்தினைத் துல்லியமாகப் படிக்க முடியும் என அறிந்து வியந்தேன்.

முனைவர் கி.லோகநாதன், தம் இல்லத்திலேயே தங்க அழைத்தார். அதை ஏற்று, நவம்பர் 29 அன்று காலை, அங்கிரிட் விடுதியிலிருந்து பெயர்ந்து, அவர் இல்லத்திற்கே  வந்து சேர்ந்தேன். இங்கு மேலும் நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். 2010 டிசம்பர் 6ஆம் தேதி காலை, சென்னைக்குத் திரும்புகிறேன்.

=========================

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மலேசியாவில் அண்ணாகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.