கிறிஸ்மஸ் வந்தது

ஜி. ஆனி ஜோஸ்பின்

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இதைப் போன்ற ஒரு குளிர் காலத்தில் , விண்ணில் இருந்து தேவ தூதர்கள் இந்த மண்ணிற்கு வந்து கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற நற் செய்தியை இந்த உலகிற்கு அறிவித்தனர். இந்த நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் ஆடு மேய்க்கும் சாதாரணமேய்ப்பர்கள்.
யார் இந்த இயேசு கிறிஸ்து?

ராஜாதி ராஜாவாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அண்ட சராசரத்தையும் படைத்த தேவனின் குமாரனாவர். தேவன் இந்த உலகத்தைப் படைக்கையில் அவருடன் இருந்த தேவகுமாரன் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. வேதம் தெளிவாகச் சொல்லுகிறது ,

“ சகலமும் அவர் மூலமாக உண்டாயிற்று!

உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை” ( யோவான் 1-3 )

அப்படிப்பட்ட தேவ குமாரன் , வான லோக மகிமையைத் துறந்து , ஒரு சின்னஞ்சிறு குழந்தையாக , ஏதோ ஒரு நிராயுதபாணி போல, தாயின் அணைப்பைச் சார்ந்து வாழ வேண்டிய நிலையில் இங்கே அழுது பிறந்தார்.

பல வேளைகளில், தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் தெய்வக் குழந்தைகள் என சித்தரிப்புக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. ஆடம்பரமான அலங்காரத்தோடு , தெய்வக் குழந்தைகள் போல , சிறு குழந்தைகள் நடிக்க வைக்கப்படுகின்றன. அந்தக் குழந்தையின் தெய்வத் தன்மையை நிரூபிப்பதற்காக , செயற்கையாக அனிமேஸன் செய்யப்பட்ட காட்சிகள் காட்டப்படுகின்றன. ஆனால் இயேசு பாலகனோ , சர்வ வல்லவமையுள்ள தேவனுடைய குமாரனாக இருந்த போதிலும், எல்லா விதத்திலும் மனுசிகத் தன்மையுடன் நம்மைப் போலப் பாடுள்ளவராகவே , பிறந்தார். அவர் சகல வசதிகளோடும் அரண்மனையில் பிறக்கவில்லை. உண்மையான தேவ குமாரனைச் சுமந்து நின்ற இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு, பிரசவ காலம் நேரிட்ட போது வாடகைச் சத்திரத்தில் கூட இடம் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி , பிரசவ காலம் நெருங்கியதால் மாட்டுத் தொழுவத்தில் பிரசவிக்க நேரிட்டது. தேவ குமாரன் என்பதால் எவ்வித மேன்மையையும் இயேசு கிறிஸ்து இவ்வுலகில் அனுபவிக்கவில்லை. அவர் இந்தப் பூமியில் வாழ்ந்த காலம் முழுவதிலும் ஒரு ஏழைத் தச்சனின் குமாரனாகவே வாழ்ந்தார்.

உலகில் நிமிடந்தோறும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. ஆனால் இயேசு பாலகன் எதற்காக இப்பூவுலகில் பிறந்தார்? எந்த நோக்கத்தோடு அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள் என்று பார்ப்போமானால் , வேதம் தெளிவாகச் சொல்கிறது. . .

” அவள் ( அதாவது கன்னி மரியாள் ) ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு ,இயேசு என்று பெயரிடுவாயாக! ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்”, என்றான்.

ஆம் . நமது பாவங்களை நீக்கி நம்மை இரட்சிப்பதற்காக, இந்த உலகில் மனிதனாக அவதரித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு மனிதக் குழந்தையாக இப்புவியில் பிறந்திராவிட்டால், நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்காது.. பாவங்களில் இருந்து நமக்கு விடுதலை கிடைத்திருக்காது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிக எளிமையான முறையில் பிறந்த போதிலும், அவரின் பிறப்பை வானலோகம் கொண்டாடியது. விண்ணின் தூதர்கள் மண்ணில் உள்ள சாதாரண ஆடு மேய்க்கும் மக்களுடன் சேர்ந்து கிறிஸ்துவானவர் உலகில் பிறந்தார் என்ற நற்செய்தியை அறிவித்துப் பாடல் பாடிக் கொண்டாடினர்.

இந்தக் கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரு விசயத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதற்காக தேவன் தமது சொந்தக் குமாரனை இங்கு அனுப்ப வேண்டும்? ஒரு வேளை தேவன் மனிதனுக்கென்று படைத்த ஏதேன் தோட்டமாகவே இன்றைக்கும் இந்தப் பூமி இருந்திருந்தால்? சற்று யோசித்துப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சுற்றுலாவுக்கு வருவது போல விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்து போயிருப்பார். அது ஒரு இன்பச் சுற்றுலாவாக இருந்திருக்கும். அவர் நமக்காகப் பாடுபட்டு மரித்திருக்கத் தேவையில்லை. சிலுவைப்பாடுகள் தேவையில்லை. ஆனால் , நாம் பாவிகளாக இருந்தாலும், தேவாதி தேவன் நம்மைத் தண்டிக்க விரும்பவில்லை. நம்மில் அன்பு கூர்ந்தார். பாவத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கத் திட்டமிட்டார். அதற்காக, நமக்கு இரட்சிப்பின் வழியைக் காட்டுவதற்காக, நமக்கு சத்திய வழியைக் காட்டுவதற்காக தமது சொந்தக் குமாரனை அனுப்பினார் என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது.

அவர் மரித்தாலும் மீண்டும் உயிரோடு எழுந்தார். இன்றும் பரலோகத்தில் வீற்றிருக்கிறார். மறுபடி திரும்ப வருவார். அவரது இரண்டாவது வருகையின் போது, குழந்தையாக அல்ல. இந்த உலகத்தினை நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியாகவே அவர் மீண்டும் வரவிருக்கிறார். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரும்ப இந்த உலகத்தில் வரும்போது, அவரைப் பற்றி நாம் கேள்விப்பட்டும், அவரை ஏற்றுக்கொண்டு அவர் காட்டிய வழியில் நடக்காமல் இருந்தால். . . நாம் எப்படி அவரை எதிர்கொள்வோம்? நம் நிலைமை என்னவாகும்? மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை நிச்சயம் நாம் அடைய முடியாது.

எனவே இந்த கிறிஸ்துமஸ் தினத்திலே, கிறிஸ்து நம்மை இரட்சிக்கப் பிறந்தார் என்ற நற்செய்தியை அனைவருக்கும் சொல்லுவோம்.ஏனெனில் அவர் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமல்ல. குறிப்பிட்ட நாட்டினருக்காக அல்ல. உலகில் உள்ள எல்லா மக்களுக்காகவும் தான் அவர் பிறந்தார். இயேசு பாலகனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அந்தப் பெயர் இம்மானுவேல். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தம். இயேசு பாலகனை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டால், இந்தக் கிறிஸ்துமஸ் நாளில் மட்டுமல்ல என்றென்றும் நம் உள்ளத்திலும் இல்லத்திலும் இறைவன் வாசம் பண்ணுவார்.

அனைவருக்கும் மீண்டும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

படங்களுக்கு நன்றி :

http://www.christmasgreetings123.com/

 http://www.jesus-explained.org/picture-of-baby-jesus.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.