செய்திகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிக்கை – செய்திகள்

டேம் 999 பட பாடல்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அந்த படத்தின் இசையமைப்பாளருக்கு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இந்திய ஆஸ்கர் இசை நாயகன் திரு. ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து திரு. ரஹ்மான் அவர்கள் கொடுத்துள்ள அறிக்கை :

”சமீபத்தில் டில்லி, ஆக்ரா ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி பதிப்பான ‘ஏக் தீவானா தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘டேம் 999’ பட பாடல்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிடும் போது சக இசையமைப்பாளர் என்ற முறையில் ‘ஆவுசு பச்சனுக்கு’ வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் சிலர் இதனை வேறு விதமாக கூறத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தமிழனாகிய எனக்கு என் வளர்ச்சியில் தமிழக மக்கள் மிகவும் உறுதுணையாகவும் முக்கிய தூணாகவும் இருந்து வருகிறார்கள். அதற்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த மூன்று வாரங்களாக நான் ஹாலிவுட் பணியில் அமெரிக்காவில் மூழ்கி இருந்ததால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்து வரும் முல்லைப் பெரியாறு பிரச்சினை எந்த அளவிற்கு தீவிரமானது என்பதை நான் உணரவில்லை.

இந்தப் பிரச்சினையில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாமின் நிலைப்பாட்டினை நான் மதிக்கிறேன்.

இந்தியாவின் வேகமான வளர்ச்சியை இன்று உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் நமது ஒற்றுமையே.

அதனைக் கட்டிக் காப்பது மிகவும் முக்கியம்.

என் அருமை ரசிகர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.”

 

படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க