ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 13

அண்ணாமலை சுகுமாரன்  

நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை.

எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை. 

புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் படவேண்டியிருக்கிறது. உயிர் உடலை விட்டு நீங்கும் போது மனமோ, புலன்களோ வேலை செய்வதில்லை. 

உடலுக்கும் உயிருக்கும் இருக்கும் நேசத்தினாலேயே, புலன்களினால், தன் மாதிரியாகிய மனம் சித்தி, புத்தி, அகங்காரம் ஆகியவைகளால் உண்டாகும் உணர்வுகள் செயல்படுகின்றன. 

குறள்  எண் 17 

ஓசை உணர்வுகளேல்லாந் தருவிக்கும்

நேசத்தாலாய உடம்பு  

இந்தத் தேகமானது ஐம்புலமற்றும், தன் மாத்திரை உணர்வுகளை எல்லாம் உடம்பினுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள நேசத்தால் உணர்கிறது என்கிறது இந்தக் குறள்.  

மனித சரீரத்தில் இருக்கும் பல உறுப்புகளின் மூலம் மனிதன் பலவற்றையும் உணர்கிறான். இதுவே ஸ்பூர்த்தி எனப்படுகிறது. ஆத்மா என்பது என்ன என்பதை விளக்கும் ஆதிசங்கரர், நமது உடலில் இருக்கும் இந்திரியங்கள் அத்தனையும், எந்தச் சக்தியால் இயங்குகிறதோ, அதற்கு எது மூல சக்தியாக இருக்கிறதோ அதுவே ஆத்மா என்கிறார்.  அதன் இருப்பிற்குப் பிரத்தியட்சப் பிரமாணம் மரணம் தான் என்கிறார் (அத்தனை உறுப்புகளும், உடலும் சரி வர இருந்தாலும், ஜீவன் இல்லையேல் அத்தனையும் இயங்குவதில்லை.

உயிருக்கும் உடம்பிற்கும் இருக்க வேண்டிய நேசத்தைஉணர்த்துவதே இந்தக் குறளில் வலியுறுத்தப்படும் முக்கிய செய்தி. 

உடலின் பயன் என்ற இந்த அதிகாரத்திலே ஔவைப் பிராட்டியார் ஒவ்வொருக் குறளிலும், மிக நுட்பமாக உடலின் பயனை விளக்குகிறார். இந்தக் குறளிலே உடலுக்கும், ஆத்மாவுக்கும் இருக்க வேண்டிய நேசத்தைk கூறுகிறார். அத்தகைய ஆன்ம உணருதல் இருந்தாலே, பிற உயிர்களிடத்தும் ஆன்ம நேய ஒருமைப்பாடு வளரும். உடலில் நல உணர்வுகள் மேலோங்கும். 

இவுலகிலே பலரையும் வென்று வாழ்ந்து, செல்வமும் புகழும் சேர்த்து, வாழ்வில் வசதியுடன் வாழ்ந்த ஒருவர், உயிர் நீந்த பின் யம தர்ம ராஜனின் முன் நிறுத்தப்பட்டார். 

வெற்றிகரமாகப் பேரும் புகழும் பெற்று வாழ்ந்ததால், உடலைப் பிரிந்து சென்ற உயிரும் பெருமிதத்துடன் எமனின் கேள்விகளை எதிர்க்கொள்ளத் தயாராக இருந்தது. 

ஆனால் அங்கே ஒரே ஒரு சிக்கல் பொய் சொல்ல இயலாது. உண்மையை மட்டுமே சொல்ல முடியும். 

“நீ யாரிடமாவது இதுவரை சுயநலமில்லாத அன்பு செலுத்தி இருக்கிறாயா ?” இது எமனின் முதல் கேள்வி. 

இவரின் பதில் “மௌனம்” 

“சரி அதுதான் இல்லை, இயற்கையை நேசித்து, இயற்கை எழிலை அனுபவித்து இருக்கிறாயா ?” 

“அதற்கு இதுவரை நேரமிருந்ததில்லை” இது இவரின் பதில்.  

“சமுதாயத்திற்கு உனது பங்களிப்பு என்ன?” 

“எனக்குத்தான் இதுவரை கணக்கற்ற சொத்துச் சேர்த்தேன்” 

“வாழ்வில் எப்போதும் நீ சந்தோஷமாக இருந்தாயா?” 

“இல்லை என்றும் பதட்டமும் ,பரபரப்புமே”

“நீதான் சந்தோஷமாக இல்லை, உன்னைச் சுற்றி இருந்தவர்களை, உனது நண்பர்களை, சந்தோஷப்படுத்தி இருந்திருக்கிறாயா?” 

“இல்லை, அவர்களை பயப்படுத்தி, கீழ்ப்படுத்திக் காரியங்ளைச் சாதித்து வந்தேன்” 

“வாழ்வில் என்றாவது வாழ்வின் பயன் என்ன? அதைக் குறித்த ஞானம் என்ன 

சிந்தித்திருக்கிறாயா ?” 

“இல்லை நேரம் இருந்ததில்லை” 

“யாருக்காவது எதிர் பார்ப்பில்லாது உதவியாவது செய்திருக்கிறாயா?” 

“நிறையப் பிச்சை அளித்திருக்கிறேன், சுவர்க்கம் கிடைக்குமென்று” 

“சித்திர குப்தா !  எங்கே போய் விட்டாய்?  நீ என்ன வேலை செய்கிறாய்? இவன் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கும் போலிருக்கிறதே? இவன் வாழவே இல்லையே? இவ்வளவு நாள் என்ன செய்தாய்” என்று அலறினார் எமன்.  

இது ஒரு கற்பனைக் கதைதான். ஆனால் வாழ்தலில் ஒரு பயன் இருக்கிறது. 

இந்த உடலின் பயன் நிச்சயம் தேடி  நிதம் சோறு  தின்பது மட்டுமல்ல, பிறருக்கு உதவுவது, நேசிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. பியா தேயம், ஸ்ம்விதா தேயம் என்கிறது உபநிஷிதம். 

இனி அடுத்தக் குறளைப் பார்ப்போமா?

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Avvaiyar

About அண்ணாமலை சுகுமாரன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க