தற்கொலையைக் கை விட்டவள்
யாழினி முனுசாமி
இப்பொழுதெல்லாம் அவள்
தற்கொலை குறித்துப் பேசுவதில்லை
முன்பெல்லாம்
நேரிலோ
தொலைபேசியிலோ பேசினால்
தற்கொலையில்தான் முடிப்பாள்.
தற்கொலைதான் துயரங்களிலிருந்து
தன்னைப் பூரணமாக விடுவிக்குமென
நம்பினாள்.
முன்னெப்பொழுதும் காணாத சிரிப்புகள்
அவள் முகத்தை அலங்கரிக்கின்றன இப்போது.
உண்மையில்
இப்போதுதான் இந்த உலகம்
அவள் காலின்கீழ் இருப்பதை உணர்கிறாள்.
இப்பொழுதுதான் அவள்தன் இருப்பை
முழுமையாய் உணர்கிறாள்.
தளைகளை அறுத்தெறிந்த மகிழ்ச்சி அவள் நடையில்.
சிறைச்சுவரைத் தகர்த்தெறிந்த பெருமிதம் அவள் பேச்சில்.
ஊர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு திரிகிறது
அவள் பாட்டுக்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்
தன் வாழ்க்கையை.
படத்திற்கு நன்றி: http://aflourishinglife.com/2010/06/end-the-insanity-by-forgiving-yourself