உயிர் தியாகம் வேண்டாம் – சீமான் அறிக்கை – செய்திகள்

0

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி விஷம் குடித்து உயிர் நீத்த தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த இராமமூர்த்திக்கு வீரவணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

”முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிடுமோ என்கிறஅச்சம் காரணமாகத் தான் உயிர்த் தியாகம் செய்வதாகக் கூறி, தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சின்னராசின் மகன் இராமமூர்த்தி விஷம் அருந்தி உயிர் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொண்ட கொள்கைக்காக உயிரைத் துறப்பது என்பது தமிழினத்தின் தனித்தன்மையாகும். அந்த அடிப்படையில் தமிழனின் உரிமை முல்லைப் பெரியாறு அணையில் பறிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சி, அதனை தன் உயிரைத் தந்தாதவது தடுத்து நிறுத்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடனேயே இராமமூர்த்தி விஷம் அருந்தி தனது இன்னுயிரை ஈந்துள்ளார் என்று அறியும்போது அவருக்காக வீரவணக்கம் செலுத்துகிறது நாம் தமிழர் கட்சி.

கேரள அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொண்டுவரும் திட்டமிட்ட பரப்புரையே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இரண்டு உயிர்கள் பறிபோகக் காரணமாகும். கடந்த 19ஆம் தேதி தேனியில் செயப்பிரகாசு என்று இளைஞர் தனது உடலில் தீயை மூட்டிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து கடந்த 22ஆம் தேதி இராசபாளையம் ஒன்றியம், சீலையம்பட்டியைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர் சேகர் விஷம் அருந்தி உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து இப்போது இராமமூர்த்தியும் உயிர்த் தியாகம் செய்துள்ளார். தென் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும் வாழ்விற்கும் அடிப்படை ஆதாரமாகவுள்ள முல்லைப் பெரியாறு ஆற்று நீரை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள் என்று தங்கள் இன்னுயிரை ஈந்து நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள் இந்த தியாகிகள். எனவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில், தமிழனின் உரிமை மீட்கும் அந்தப் போராட்டத்தில் நாம் வென்றே தீர வேண்டும், வெல்வோம் அது உறுதி.

அதே நேரத்தில் நாம் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வெற்றி பெறும் வரை ஓயாது நடத்த வேண்டிய நிலையில், இப்படிப்பட்ட தன்னலம் பாரா தமிழர்கள் தங்கள் உயிரை இழப்பது வேதனையைத் தருகிறது.

தென் தமிழ்நாட்டிலுள்ள ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதரத்தைக் காக்க மறியல், ஆர்ப்பாட்டம், பொருளாதாரத் தடை என்று பல்வேறு வழிகளில் நம்மால் போராடி வெற்றி பெற முடியும். நம் போராட்டம் தீப்பற்றி எரியலாமே தவிர, போராளிகள் எரிந்துவிடக் கூடாது. எதற்காக உயிரைத் துறக்க வேண்டும்? முல்லைப் பெரியாற்றில் நம் உரிமையை பறித்து நம் மக்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ள கேரள அரசியல்வாதிகளுக்கு அவர் மொழியிலேயே பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கிருந்து செல்லும் பொருட்கள் பெருமளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று அணைத் திட்டத்தை கைவிடும்வரையும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் தேக்கும் வரை நமது போராட்டம் தொடரும். அப்படிப்பட்ட போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்று வலிமை சேர்க்கவே இளைஞர்கள் தயாராக வேண்டுமே தவிர யாரும் உயிரை இழக்க வேண்டியதில்லை.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவரும் கேரள அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு அரண்டு போயுள்ளார்கள். நாம் தோற்கவும் மாட்டோம், அணையை விட்டுத் தரவும் மாட்டோம். உயிரைக் காக்கவே நாம் போராடுகிறோம். அதற்கு உயிரைத் தியாகம் செய்யத் தேவையில்லை, உணர்வுடன் நின்று போராடினாலே நம் உரிமையை வென்றெடுத்துவிட முடியும்.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.