எல்லாம் இருந்தும் …. எதுவும் இல்லாமல் …….
சக்தி சக்திதாசன்
என்ன இது ஒரு புரியாத புதிர் தலைப்பு ? எனப் புருவங்கள் உயர்வது தெரிகிறது. வருட இறுதியிலே இங்கிலாந்திலிருக்கும் ஒரு புலம் பெயர் தமிழனின் பார்வையில் அவ்வருட நடப்புக்களை அசை போட்டுப் பார்ப்பது என் வழக்கம். அந்த அசைபோடுதல் தான் இம்முறை இவ்வடிவத்திலான தலைப்பை எடுத்துள்ளது.
காரணம் என்ன என்கிறீர்களா?
2011 சிக்கலான பல கேள்விகளை அரசியல் தலைவர்கள் மத்தியில் குறிப்பாக மேலைநாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் தூக்கிப் போட்டுள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்தளவில் இவ்வாண்டின் ஆரம்பமே சிக்கல்களுடன் தான் ஆரம்பமாகியது. ஆனால் ஆண்டின் முடிவு இன்னும் பாரதூரமான விளைவுகளுடன் முடிவடைகிறது.
முதலில் அரசியல் களத்தை எடுத்துப் பார்ப்போம்.
2011ன் ஆரம்பம் , இழுபட்டுக் கொண்டே போய்க்கொண்டு இருக்கும் இங்கிலாந்து கூட்டரசாங்கத்தின் முன்னே பொருளாதாரச் சிக்கல்கள் கொடுத்த முடிச்சுகளை அவிழ்க்கும் பயங்கரமான பணியைப் பூதாகரமாகத் தூக்கிப் போட்டது.
இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழி அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்துவது என்னும் கொள்கையை முன்வைத்து தேர்தலில் கூட்டரசாங்கம் அமைத்த கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் தமது பொருளாரச் சீராக்கலுக்கான அறுவைச் சிகிச்சையைத் தொடங்கினர். அதாவது அரசாங்கச் செலவினைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத் திணைக்களங்களில் ஆட்குறைப்புத் தொடங்கப்பட்டது.
அரசாங்கப் பணியிலிருக்கும் ஊழியர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டாலும், தனியார் நிறுவனங்கள் இப்பணி இழந்தவர்களை உள்வாங்கிக் கொள்வதனால் வேலையில்லாதோர் பட்டியலில் அதிகமான ஏற்றம் காணப்படாது என்னும் அரசாங்கத் தரப்பு வாதம் , பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தினால் பொய்த்துப் போன நிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லாத காரணத்தினால் மக்கள் செலவு செய்யப் பயந்தார்கள் விளைவு வியாபரத்தளங்கள் வியாபாரமற்ற நிலையில் தமது வியாபாரங்களையே மூடிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி அவர்களின் எண்ணத்திற்குப் புறம்பாக மிகவும் மந்த நிலையிலேயே வளர்ச்சி அடையத் தொடங்கியது.
அன்றாட மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்க, ஊதிய உயர்வு கிடைக்காத நிலையில் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசாங்கமும் , நிதியமைச்சரும் தமது கொள்கையே பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.
எதிர்க் கட்சியோ நீங்கள் உங்கள் கொள்கைவழி எடுத்த நடவடிக்கைகள் பலனிக்கவில்லையே ! உங்களின் திட்டத்தை மாற்றியமையுங்கள். அரசாங்கச் செலவைக் கட்டுப்படுத்துவதை நிறுத்தி பொது மக்களுக்கான சேவைகளில் முதலீடு செய்வதன் மூலம் முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை கைதூக்கி விடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறது.
இந்நிலையில் இடிமேல் இடி விழுந்தாற்போல ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் சில கிறீஸ், போலந்து, இத்தாலி போன்றவை தத்தமது அரசாங்கம் வங்கிகளில் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத அளவிற்கு பொருளாதார வீழ்ச்சியை கண்டன.
விளைவு !
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பல கடைப்பிடிக்கும் நாணயமான “யூரோ” ஆட்டம் காணத் தொடங்கியது. இந்நாணயத்தின் வீழ்ச்சி ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல உலக அளவில் அனைத்து நாடுகளினதும் பொருளாதாரத்தை தாக்கும் என்னும் அச்சம் மேலோங்கியது.
யூரோவைக் காப்பதற்கான திட்டமொன்றை பிரான்ஸ், ஜெர்மனி முன்மொழிந்தன. ஆனால் அத்திட்டத்தில் லண்டன் நகரின் பொருளாதார வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் விடயங்கள் அடங்கியிருக்கின்றன என்னும் காரனத்தினால் இங்கிலாந்து கையொப்பமிட மறுத்து விட்டது.
இங்கிலாந்து கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், வலிபரல் டெமகிரட்ஸ் கட்சிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இரு தலைவர்களும் ஓரளவு பூசிமெழுகி விட்டார்கள்
அது மட்டுமா? இங்கிலாந்தில் அபூர்வமான சமூகச் சீர்கேடாக 2011 ஆகஸ்ட் மாதக் கலவரங்கள் அமைந்தன. பல கடைகள் சூறையாடப்பட்டன. பல வியாபாரத் தளங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.. நாட்டின் சட்டம், ஒழுங்கு மூன்று தினங்கள் கட்டுப்படுத்த முடியாதவகையில் சீர்கேடாகியது. இக்கலவரங்களுக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இளைஞர், யுவதிகளுக்கு போலீஸ் மீது கொழுந்து விட்டெறிந்த நம்பிக்கையின்மை, இளைஞர், யுவதிகளிடையே காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டம் இவைகள் அக்காரணங்களில் சிலவாகக் கூறப்படுகிறது.
எல்லாமே இடர்பாடுதானா? இல்லை சில நல்ல நிகழ்வுகளும் நிகழத்தான் செய்தன.
மக்கள் மனங்களை மகிழ்விக்கும் நிகழ்வாக இங்கிலாந்து ராஜகுடும்பத்தில் நடந்த திருமண நிகழ்வு அமைந்தது. இங்கிலாந்து இளவரசர் சார்ளஸ் அவர்களின் மூத்த மைந்தன் வில்லியம் அவரது நெடுநாளைய காதலியான கேட் (Kate) அவர்களை 2011 ஆகஸ்ட் மாதம் மணமுடித்தார். இதுவே பொருளாதாரச் சிக்கல்களுக்குள் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்களுக்கு ஆறுதலைத் தரும் நிகழ்வாக அமைந்தது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
2012ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் பந்தயமே அடுத்த மக்கள் மனதில் ஆறுதலை அளிக்ககூடிய நிகழ்வாக அமையும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பு
2012ம் ஆண்டு தரப்போகும் சவால்களை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இங்கிலாந்து எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சர்வதேச நிகழ்வுளைப் பார்த்தோமானால் முக்கியமாக அரபுநாடுகளில் சர்வாதிகாரத் தலமைகளுக்கெதிராக நடைபெறும் மக்கள் போராட்டங்கள் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது.
எகிப்து, லிபியா, துனிசியா,சிரியா என இப்போராட்டங்கள் கிளர்ந்தெழும் நாடுகளின் வரிசை நீண்டு கொண்டே போகிறது. சர்வாதிகாரத் தலைவர்களின் ஆட்சியில் வெறுப்புற்ற மக்கள் ஜனநாயக நீரோட்டம் வேண்டி நடத்தும் போராட்டங்கள் இன்றும் தொடர்கின்றன.
எகிப்தின் தலைவர் முபாரக், லிபியா தலைவர் கடாபிஃ ஆகியோர் தூக்கி வீசப்பட்டுள்ளார்கள். கர்னல் கடாபிஃ தனது உயிரையே பறிகொடுத்துள்ளார்.
இப்போராட்டங்களுக்கு மனத்தளவிலான ஆதரவையும், சில சமயங்களில் இராணுவ உதவிகளையும் வழங்கி வரும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களின் மனதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. சர்வாதிகாரத் தலைமைகளைத் தூக்கியெறியும் இந்நாடுகள் தீவிரவாதக் கொள்கையின் அடிப்படையில் அமையும் மதச்சார்பான இஸ்லாமிய கொள்கைகளின் வழி சென்று விடுமா? என்பதுவே அது.
இந்தியா, சீனா , பிரேஸில் போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவை முன்னேயும் கேள்விகள் இல்லாமலில்லை. சீனாவின் பொருளாதார முன்னேற்றம் அந்நாட்டின் அரசியல் அழுங்குப்பிடியைக் கொஞ்சம் தளர்த்துமா? இந்திய நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தினால் கிடைக்கும் நன்மைகள் அந்நாட்டின் அடிமட்டத்திலிருப்போரைச் சென்றடைகின்றனவா? என்பது போன்ற கேள்விகளே அவை.
இலங்கையில் தமிழர்கள் இன்னமும் தமக்கு ஓர் நல்ல தீர்வை எதிர்நோக்கியவண்ணமே இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிந்து விடுமோ எனும் அச்சம் அந்நாட்டு மக்களிடையே ஓங்கி இருப்பது தெரிகிறது. இலங்கை அரசுடன் சிநேகப்பூர்வ உறவுகள் கொண்ட நாடுகள் ஈழத்தமிழரின் தீர்வுக்கான உந்துதலை அளிப்பார்களா என்பதற்கு விடை 2012 இல் தான் கிடைக்குமோ ?
அகிலத்தின் அளவு பயணத்தின் விஸ்தரிப்பால் குறைந்து கொண்டே போகும் காரணத்தினால் இன்றைய உலக நாடுகள் தமது பொருளாதாரத் தேவைகளுக்கு ஒன்றில் ஒன்று தங்கி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இத்தகைய சூழலில் உலகில் போர்கள் தவிர்க்கப்பட்டு சமாதானத் தீர்வுகளை முன்னெடுக்கும் பணியில் வல்லரசுகள் ஈடுப்பட்டாலொழிய உலகம் சீரான நிலையடைய முடியாது.
ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் என, பெரிய போர்கள் கொடுத்த பாடங்களை மனதில் நிறுத்தி 2011 கொடுத்த அனுபவங்களை 2012ன் அனுகூலமாக்கி வெற்றிக்காக அனைத்து நாடுகளும் உழைக்க வேண்டும் என்பதே நியாயமான உள்ளங்களுக்குச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு ஆகிறது.
சுருக்கமாகச் சொன்னால் 2011 எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வருடமாக வெறுமையாக முடிவுக்கு வருவது போலத் தென்படுகிறது.
இலண்டனிலிருந்து
சக்தி சக்திதாசன்
27.12.2011
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படங்களுக்கு நன்றி : http://en.wikipedia.org/wiki/Economy_of_England
http://justjared.buzznet.com/2011/04/29/prince-william-kate-middleton-are-married/