தானே புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வரவேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை – செய்திகள்

0

‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை நேரடியாக பார்வையிட்டு இழப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு வர வேண்டும். இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஏற்பட்டுள்ள இந்த இழப்பபை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் முழுமையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

”வங்கக் கடற்பகுதியில் உருவான ‘தானே’ புயல் கடந்த வியாழக்கிழமை கரையைக் கடந்தபோது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தானே புயல், மழைக்கு 49 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த மக்கள் அனைவரும் குடிசைகளிலும், மண் வீடுகளிலும் வாழ்ந்த ஏழை, எளிய மக்களாவர்.

இந்தப் புயலால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான கடலூர், சிதம்பரம், நாகை, திருவாரூர், தஞ்சை, உள்மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலால் வாழை, தென்னை, மா மரங்களும், முந்திரிச் செடிகளும் வேரோடு பிடிங்கி எறியப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட இம்மரங்கள், மூன்று மணி நேர புயலால் பெயர்த்து
வீசப்பட்டுள்ளன. சாலைகளின் இருபக்கத்திலும் இருந்த 2 இலட்சம் மரங்கள் வேரொடு பெயர்ந்து விழுந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அறுவடைக்கு காத்திருந்த நெற்பயிர்கள் பெய்த மழையில் ஏற்பட்ட நீர்பெருக்கால் மூழ்கியுள்ளன. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும் நீர் வடியாததால் அந்த
நெற்பயிர்கள் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. காணும் தொலைக்காட்சிகளில் எல்லாம் முழ்கிக் கிடக்கும் நெற்பயிர்களை பிடிங்கி கவலையுடன் காட்டும் விவசாயிகளின் முகங்கள்தான் காட்டப்படுகின்றது.

புயலால் வேரோடு பிடிங்கி எறியப்பட்ட மரங்கள் சாலைகளில் விழுந்துகிடப்பதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு, பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்றிட போர்க்கால அடிப்படையில் மரங்களை அகற்றும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட வேண்டும். ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான அன்றாட அத்யாவசியப் பொருட்களை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட வேண்டும்.

மழை, புயலால் மேற்கண்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் மழை, புயலால் ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்களை எடுத்து வந்தாலும், அதன் அடிப்படையில் மாநில அரசு கேட்கும் நிவாரணத்தை மத்திய அரசு வழங்கப்போவதில்லை. எனவே, புயல், மழையால் ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பீடு செய்ய மத்திய அரசுக் குழு உடனடியாக தமிழ்நாட்டிற்கு வர வேண்டும். தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பையும், இழப்பையும் பேரழிவு என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டைத் தாக்கிய தானே புயல் கரையைக் கடக்கும்போது 145 கி.மீ. வேகத்தில் காற்று அடித்துள்ளது.

அதனால்தான் இந்த அளவி்ற்கு உயரிழப்பும், சேதாரமும் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் மட்டுமே உரிய இழப்பீடு பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும்.

மீனவர் பிரச்சனை, கூடங்குளம் அணு மின் நிலையம், முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதுபோல் இப்பிரச்சனையில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்காமல், நேர்மையாக நடந்துகொண்டு உரிய இழப்பை மதிப்பீடு செய்து வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *