தமிழ்த்தேனீ      

 பிரபலமான நீதிபதி திரு சதாசிவம் அவர்கள் வழக்கம் போல் காலையில் சீக்கிரமே எழுந்து நடைப்பயிற்சியை முடித்து விட்டு துண்டை எடுத்து முகத்தையும் துடைத்துக் கொண்டு  வந்து சிறிது நேரம் தியானம் செய்து மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டு இறைவனைக் கும்பிட்டு விட்டு, கையில் எடுத்த மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி  அன்றைய தினசரியைப் பிரித்தார்.

ஆனால் அவரது கவனம் செய்தித்தாளில் பதியவில்லை, இனம் புரியாத குழப்பம் அவருள் நிறைந்திருந்த்து. இது வரை அவர் இப்படிப்பட்ட மன நிலையில் இருந்ததில்லை.

சில நாட்களாக நடந்து இன்று அவருடைய தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த விசித்திர வழக்குக்கு  அவர் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார்ன்னு, சட்டப்படியா? தர்மப்படியான்னு அவருக்கே  குழப்பமா இருந்துது.

மனதைத் தெளிவாக வைத்துக் கொண்டு நடு நிலைமையுடன் தான்  அவர் தீர்ப்பு சொல்ல வேண்டிய  கோப்பைப் படிக்க ஆரம்பிப்பார். அவருடைய தீர்ப்புகள் இது வரை எல்லோராலும் பாராட்டப் பட்டன. நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்திருந்தார். அன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய  வழக்கின் கோப்பைக் கையிலெடுத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நீதிமன்றம் கூடியிருந்தது, நீதிபதி சதாசிவம் வந்து அவர் இருக்கையில் உட்கார்ந்தார்.  நிமிர்ந்து பார்த்தார்.

எதிரே குற்றவாளிக் கூண்டில் ஒரு மூதாட்டி வந்து கூப்பிய கையுடன் நின்று கொண்டு, “ஐயா  உங்கள் பொன்னான நேரத்தை நான் வீணடிக்க மாட்டேன், தயவு செய்து என்னைப் பத்து நிமிஷம் உங்க  முன்னாடி பேச அனுமதிக்கணும். எனக்கும் வயசாயிடிச்சுங்க   என்னால் உரக்கப் பேச முடியாது, ஆனால் உண்மையைப் பேசப் போறேன்.  எனக்கு ஒரு ஒலிபெருக்கி வேணும். நான் ஒலிபெருக்கிலே பேசறது உங்க காதுலே தெளிவா கேக்கணும்” என்று கோரிக்கை வைத்த அந்த மூதாட்டியை நிமிர்ந்து பார்த்த நீதிபதி அவளுக்குப் பத்து நிமிடம் பேச அனுமதி அளித்து ஒரு ஒலிபெருக்கியை ஏற்பாடு செய்து அவளிடம் அளித்தார்.

நீதி தேவதை தன்னுடைய கண்களிலிருந்த  கட்டை அவிழ்த்து வீசி விட்டு கையிலிருந்த தராசையும் கீழே போட்டு விட்டுக், குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த மூதாட்டியின் உடலில் ஆவிர்பவித்தாள்.

கணீரென்று அந்த மூதாட்டியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது,” ஐயா நம் தேசம் பாரத தேசம், பழம்பெரும் தேசம். பாவ புண்ணியங்களுக்கு மதிப்பளிக்கும் தேசம்.  பாசம் ,நேசம் ,அன்பு, இரக்கம், மனிதாபிமானம், நேர்மை,நன்றி, மரியாதை போன்ற நல்ல குணங்களோட ஊத்துக்கண்ணு.

நம்மோட இதிகாசம், புராணம் எதை படிச்சாலும் பெத்தவங்களுக்கு மதிப்பு குடுக்கத்தான் சொல்லிக் குடுத்திருக்காங்க. மாற்றாந் தாயான கைகேயியையும் அம்மான்னு மதிச்சு தன் நாட்டை விட்டே வெளியேறியவன் ஸ்ரீராமன். தன் தாய் தேவகி தந்தை வசுதேவரின்   துயர் துடைக்க   கோகுலத்துக்கு வெளியேறினவன் கிருஷ்ணன். ஞானப் பழம் கிடைக்கலைன்னு ஒரு காரணத்தைக் காட்டித் தமிழ் வளர்க்கத் தணிகை மலைக்கு புறப்பட்டுப் போனான் முருகன். யாருமே  பெத்தவங்களை வெளியே போகச் சொல்லவில்லை, அவங்கதான் வெளியேறினாங்க.

ஆனால் இன்னிக்கு பெத்தவங்களுக்கு உடம்புலே வலுவிருக்கும் வரைக்கும் அவங்களோட  அன்பு, பாசம் நேசம், உழைப்பு,  எல்லாத்தையும்  வாங்கிகிட்டு வயசும் ஆயி, வலுவும் போனதுக்கப்புறம் அன்பான சொல்லுக்கும் ஆதரவுக்கும் ஏங்கி நிக்கிற காலத்தில் பெத்தவங்களை  அனாதையாக வீட்டை விட்டு வெளியேத்தறது நியாயமா?

ஒருத்தரோட சொத்தைத் திருடினா சட்டப்படி அதுவும் நிரூபிச்சா திருடினவனுக்கு  தண்டனை வழங்குதே சட்டம். ஆனால் பெத்து, வளர்த்து பல தியாகங்களைச் செஞ்சு, பிள்ளைங்களைப் படிக்க வெச்சி ஆளாக்கி அவங்களுக்காகவே ஓடா உழைச்ச பெத்தவங்களோட அருமை புரியாம, கல்யாணம் கட்டி வீட்டுக்குள்ள வரும்போதே,ஏதோ தானே பெத்து தானே வளர்த்து தானே கல்யாணம் செஞ்சுகிட்டா மாதிரி, புருஷனைப் பெத்தவங்களை துரத்தறதிலேயே குறியாய் இருக்கும்  இந்தக் காலத்து மருமக்கப் பொண்ணுங்க. அவ பேச்சைக் கேட்டு பெத்தவங்களோட அருமையே தெரியாமல் அவங்களையே சந்தேகப்பட்டு வீட்டை விட்டுத் துரத்தற பிள்ளைகள். இது நியாயமா? வயசான காலத்திலே நிராதரவா அவங்க எங்க போவாங்க?

சொத்தைக் கொள்ளையடிச்சா, திருடினால் தண்டனை குடுக்கற சட்டம், இது மாதிரி  பெத்தவங்களோட உழைப்பை, தியாகத்தை, அன்பை பாசத்தை, திருடிக்கிட்டு  அவங்களை  அனாதையா வெளியே துரத்தி வயசான காலத்தில் அவர்களைக் கொடுமைப்படுத்தற  இவங்களைக் குற்றவாளிகளாக  ஏன் தண்டனை கொடுக்க மாட்டேங்குது?

இவங்க திருடர்கள் இல்லையா? கொள்ளையர்கள் இல்லையா? குற்றவாளிங்க இல்லையா? ஆக மொத்தம் பணத்துக்கும், சொத்துக்கும் இருக்கும் மதிப்பு  உயிரோடு இருக்கும் மனுஷனுக்கு கிடையாதா?

உலகத்திலே மனுஷனுக்குன்னு சட்டம் கிடையாதா? பணத்துக்கும்,சொத்துக்களுக்கும் உதவற சட்டம் மனுஷனுக்கு உதவாதா? அப்பிடீன்னா இது என்னா சட்டம்?

உடம்புலே காயம் பட்டுச்சுன்னாப் பணத்தைக் குடுத்துச் சரியாக்க முடியும்.  மனசுலே ஏற்படற காயங்களைப் பணத்தாலோ சொத்துக்களாலோ, குணப்படுத்த முடியாது. இன்னிக்கு  நீங்க சொல்லப் போற தீர்ப்பு எதுன்னாலும் ஏத்துக்கறோம்.  அதற்கு முன்னாலே இதோ  இந்த சொத்துக்களுக்காகத்தானே எங்களைப் பெத்தவங்கன்னு கூடப் பாக்காம எங்க மேலே வழக்குத் தொடுத்திருக்கிறாரு எங்கள் பிள்ளை? மொத்த சொத்துக்களையும் அவர் பெயருக்கே உயில் எழுதி வைச்சுட்டோம் ஏற்கெனவே. எங்களுக்கு அவன் வாழ்க்கைதாங்க முக்கியம், அப்போ எதுக்கு இவ்வளவு நாளு வழக்காடினீங்கன்னு கேப்பீங்க.

இந்தக் காலத்துப் பிள்ளங்களோட மனவிகாரங்கள் எப்படி இருக்குன்னு இந்த உலகத்துக்குக் காட்டணும், எங்களைப் போல கஷ்டப்படாமப் பெத்தவங்க எல்லாம் இருக்கணும், எல்லாருக்கும் இந்த வழக்கு ஒரு பாடமா இருக்கணுங்கிற எண்ணத்திலேதான் இத்தனை நாட்கள் நாங்களும் இந்த வழக்கில் ஈடுபட்டோம்.

இப்பவும் என் பிள்ளையைத் தண்டிக்கணும்னு நான் நெனைக்கலை. அவன் உணரணும். அவனை மாதிரி எல்லாப் பிள்ளைங்களும் உணரணும். 

எனக்கு பேச அனுமதி கொடுத்த ராசாவே  நீங்க நல்லா இருக்கணும். இனிமே நான் பேச ஒண்ணுமில்லே அந்த நீதி தேவதைதான் பேச வேண்டும். எனக்கு பேச சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு நன்றி” என்று கம்பீரமாகக் கூண்டை விட்டு இறங்கினாள் அந்த மூதாட்டி,

நீதிபதி சதாசிவத்துக்கு அவருடைய தாயார் முதியோர் இல்லத்தில்  இருப்பது நினைவுக்கு வந்தது. அவர் சற்று நேரம் விக்கித்துப் போனார். சுதாரித்துக் கொண்டு  இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற மே மாதம் 10 தேதி  அன்னையர் தினத்திற்குத் தள்ளி வைக்கிறேன். என்று அறிவித்து விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தார்.

மறுபடியும் நீதி தேவதை  கையில் தராசுத் தட்டை ஏந்தியபடி, கண்களை  கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு  மீண்டும் பழைய இடத்திலேயே வந்து நின்று கொண்டாள்.                                                  

 

படத்திற்கு நன்றி: http://www.photos.com/royalty-free-images/statue-of-lady-justice-with-court-gavel/86534912

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *