Featuredகட்டுரைகள்

நாலாயிர திவ்யப்பிரபந்தம்

விசாலம்

வைகுந்த ஏகாதசி என்றாலே அந்த ஸ்ரீரங்கமும் திரு அரங்கநாதனும் தான் என் கண்முன் வந்து நிற்கிறது. ஏகாதசி முன் பத்து நாட்கள் பகல்பத்து என்றும் பின் பத்து நாட்கள் இராப்பத்து என்றும் விமரிசையாக ஒரு பெரிய திருவிழாக் கோலம் தான் பங்கு வகிக்கிறது. “பகல் பத்து”, “இராப்பத்து” நாட்களில் இயற்பா 21 நாட்கள் பாடப்படும். பகல்பத்தின் போது திரு அரங்கநாதர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுவார், இராப்பத்தின் போது பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிச் சேவைச் சாதிப்பது தொன்று காலந்தொட்டே நிகழ்ந்து வருகிறது.

 பள்ளிக் கொண்டப் பெருமாள் முன் அரையர்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடல்களுக்கு மிக அழகாக அபிநயம் பிடித்து ஆடுவதைப் பார்க்க வேண்டுமே. கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் பற்றி முன்பு அதிகமாக எனக்குத் தெரியாது. ஆனால் என் சகோதரர் திரு.வெங்கட் இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு அதை எல்லோரிடமும் பிரபலப் படுத்தும் ஆசையில் சென்னை வந்து திருமதி. சௌபாக்கிய லட்சுமி என்ற அம்மாளிடம் சென்று முழு ஆடியோ கேசட்டை வாங்கினார்.

 திரு. ஸ்ரீராம் பாரதி என்ற இசைக்கலைஞரின் மனைவி இந்தப் பெண்மணி. ஸ்ரீராம் பாரதி அவர்களின் குருதான் மறைந்த இசை மேதை வி.வி சடகோபன் அவர்கள். தன் குருவின் கனவு நிறைவேற அவர் ஆசைப்படி ஒரு பெரிய ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலைக் கட்டியிருக்கிறார். நானும் அந்தக் கோயிலைப் பார்த்து அந்த அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். அதில் அரையர்கள் பற்றிப் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

ஆழ்வார்கள் பெருமாள் மேல் பாடிய பாடல்கள் மங்களாசனம் என்று சொல்லப்படுகின்றன. பல பாடல்கள் இருந்தும் எல்லாப் பாடல்களும் கிடைக்கவில்லை. இந்தப் பாடல்களில் மனம் பறி கொடுத்த ஒருவர் பல இடங்களில்தேடி அலைந்து எல்லாம் சேகரித்து வரிசைப்படுத்தித் தொகுத்தார். இதைச் செய்த புண்ணியவான் தான் திரு. ஸ்ரீ நாதமுனிகள். இவரால் தான் ஒவ்வொரு வைஷ்ணவக் கோயிலிலும் பெருமாள் முன் இந்தப் பாடல்கள் இடம் பெறுகின்றன. 

இதன் பின்னர் இந்தப் பாடல்களைப் பாடவும் ஆடவும் சில பக்தர்களைத் தேர்ந்தெடுத்து அரங்க நாதன் முன் ஆடிப்பாடி சேவை செய்ய ஆரம்பித்து வைத்தார்.  இந்தப் பக்தர்களுக்கு அரையர்கள் என்ற பெயரும் சூட்டினார். இத்துடன் அவர் நிறுத்தவில்லை. தன் இரு மருமகன்களுக்கும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை இயல் இசை நாட்டியம் என்று பிரித்து உபதேசித்தாராம். அரையர் இசையில் ஒரு தெய்வீக மலர்ச்சி ஏற்படுவதை கண் கூடாகக் காணலாம். அவர்கள் மனதில் எல்லாம் அரங்கனை மகிழ்விப்பதற்கே என்ற சிந்தனையைத் தவிர வேறு ஒன்றும் இருக்காது அப்படியே அதில் ஒன்றிப் போய் நிற்பர்.

இதைத் தவிர தசாவதாரங்களும் மிகச் சிறப்பாக அபிநயம் பிடிக்கப்பட்டு எல்லோரையும் கவருகிறது. தன் மேல் இத்தனைப் பக்தி கொண்டு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைச் சேகரித்து தமிழுக்கும் தனக்கும் தொண்டு செய்த ஸ்ரீநாத முனிவருக்குப் பெருமாள் காட்சியும் கொடுத்து தன் கிரீடத்தையும் அவருக்குக் கொடுத்தாக என் சகோதரர் கூறினார்.

 எல்லோரும் ஒரு தடவையாவது ஸ்ரீரங்கம் போய் வைகுந்த ஏகாதசியின் இந்தச் சிறப்புக்களைக் கண்டு களித்து அரங்கனின் அருள் பெற வேண்டும்.

 

ஸ்ரீரங்க நாதர் படத்திற்கு நன்றி: http://www.ranganatha.org/Devotional/Slokas/tabid/56/Default.aspx

பரமபத வாசல் படத்திற்கு நன்றி: http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article71621.ece

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க