சு.கோதண்டராமன்

சுலப வழியில் வெற்றி பெற நாட்டில் எத்தனையோ வழிகள் உள்ளன நியூமராலஜி, ஜெம்மாலஜி, நேமாலஜி, வாஸ்தாலஜி என்று பல உள்ளன. அப்படியும் மக்கள் சுகமாக வாழ்வதாகத் தெரியவில்லை. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பழைய ஏட்டுச் சுவடிகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்த இரண்டு அரிய முறைகளை விஞ்ஞான முறையில் செம்மைப் படுத்தி நேயர்களுக்குத் தருகிறோம். 

பொட்டாலஜி (பெண்களுக்கு) 

நெற்றியில் அணியும் பொட்டுகள் அழகுக்கு மட்டுமல்ல, அதிருஷ்டத்திற்கும் அவையே காரணம்.  நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உங்களால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையா? உங்கள் கணவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டம் அடைகிறாரா? உங்கள் மகன் 90 சதவீதம் மார்க் வாங்கி தொழிற் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுகிறானா? சந்தேகமில்லாமல் உங்கள் பொட்டு தான் இந்தத் தோல்விகளுக்குக் காரணம். 

பொட்டுகளின் நீளம், அகலம், வடிவம், நிறம் இவை தான் ஒருவரது அதிருஷ்டத்தை நிர்ணயிக்கின்றன. உங்கள் ஜாதகம், கைரேகை, முக அமைப்பு இவற்றை வைத்து உங்களுக்குச் சரியான பொட்டு என்பதை நாங்கள் தீர்மானித்துச் சொல்கிறோம். அதைப் பின்பற்றி உரிய பொட்டு ஸ்டிக்கர்களை நீங்கள் அணிந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றியோ வெற்றி தான். மேலும் விபரம் அறிய ரூ.99.99 மணி ஆர்டர் செய்து கீழ்க்கண்ட விலாசத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

லெட்டராலஜி (ஆண்களுக்கு மட்டும்)

நீங்கள் பேசிய வார்த்தைகள் பிற்காலத்தில் உங்களுக்கு எதிராகவே திருப்பப் படுகின்றனவா? நீங்கள் சொல்லும் பொய்களை வாடிக்கையாளர்கள் / மேலதிகாரிகள்  நம்ப மறுக்கிறார்களா? வாக்கு வாதங்களில்/ வாய்ச் சண்டைகளில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கு உதவி செய்யவே இந்த லெட்டராலஜி. பிரபல ஜெர்மன் மேதை எரிச் பெர்ஹார்ட் அவர்களால் இந்திய ஓலைச் சுவடிகளிலிருந்து தேடிக் கண்டுபிடித்து உருவாக்கப்பட்டது. 

உங்கள் ஜாதகப்படி (ஜாதகம் இல்லாதவர்களுக்கு பெயர் ராசிப்படி) எந்தெந்த நாளில் நீங்கள் எந்த எழுத்தைப் பேசவேண்டும் என்று நாங்கள் ஒரு பட்டியல் தருவோம். அந்தந்த நாளுக்குரிய அதிருஷ்ட எழுத்தை நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் முன்னாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, இன்றைய உங்கள் அதிருஷ்ட எழுத்து ‘ என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பையனைக் கடைக்கு அனுப்புவதானால், கமணி, கஇங்கே கவா. ககடைக்கு கபோய் கபிளேடு கவாங்கி கவா என்று சொல்ல வேண்டும்.

சரியான எழுத்தைச் சரியானபடி பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் உங்கள் பேச்சு அட்சர லட்சம் பெறும். வியாபாரத்தில், பரிட்சைகளில் திருமணப் பேச்சு வார்த்தைகளில் எதில் நீங்கள் கலந்து கொண்டாலும் உங்கள் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. நீங்கள் கவனத்துக்கு உரிய வி.ஐ.பி. ஆகிவிடுவீர்கள். விவரங்களுக்கு ரூ.99.99 மணி ஆர்டர் செய்யவும். 

மனைவிக்குப் பொட்டாலஜி, கணவனுக்கு லெட்டராலஜி இரு முறைகளுக்கும் சேர்த்து ஆலோசனை பெற சலுகைக் கட்டணம் ரூ 150 மட்டுமே. 

தொடர்பு கொள்க-

டுபாக்கூர் சித்தர்,

420, ஏய்ச்சான் தெரு,

பித்தாபுரம் அஞ்சல்

குறுக்கு வெற்றி மாவட்டம்.

பின்கோடு 000 000

 

படத்திற்கு நன்றி: http://astro4business.com/2010/01/07/what-did-you-miss

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *