காற்றே காற்றே
பிச்சினிக்காடு இளங்கோ
கருணையில்லாக் கடல் காற்றே
கரையைக் கடந்து ஏன் வந்தாய்?
கடன் பட உயிர் விட ஏன் வைத்தாய்?
பண பலம் இல்லை எங்களுக்கு
மனபலம் ஒன்றே எங்களுக்குத்
துணையெனத் தெரிந்தும் ஏன் வந்தாய்?
துன்பம் சோகம் ஏன் தந்தாய்?
கடல் முகம் பார்த்து விழிக்கின்றோம்
கடலலைப் பாட்டில் துயில்கின்றோம்
கடலில் வலையை விரிக்கின்றோம்
கவலையில் வாழ்வைக் கழிக்கின்றோம்
சொந்தம் பந்தம் கரையினிலே
தொழிலாய் வாழ்க்கை கடலினிலே
நிலவை மீனைப் பார்ப்பதுண்டு
நெஞ்சில் ஏதும் நிகழ்வதில்லை
வலையில் மீனைப் பார்த்தால்தான்
வாழ்க்கைப் படகு கரை சேரும்
அலையில் வாழும் எங்களை ஏன்
ஆட்டிப் படைக்கக் கரை வந்தாய்?
வாழ்க்கை முழுதும் கடலினிலே
வாழ்வது சில நாள் கரையினிலே
துயரக் கடலை ஏன் தந்தாய்?
தூக்கி வீசி ஏன் பார்த்தாய்?
தென்றல் என்பதும் உன் பேர்தான்
கொண்டல் என்பதும் உன் பேர்தான்
வாடை என்பதும் அப்படியே
கோடை என்பதும் அப்படியே
பெயரை மாற்றி ஏன் வந்தாய்?
பெரிதாய் என்ன பலன் கண்டாய்?
இயல்பாய் வீசி கை குலுக்கி
இனிதாய் வாழ வழி செய்வோம்.
படத்திற்கு நன்றி: http://ibnlive.in.com/news/cyclone-thane-expected-to-hit-tn-coast-soon/216201-3.html
கவிதையில் குறையில்லை. வாழ்த்துக்கள்! இருந்தும் “தானே” ஏற்படுத்திய தாக்கத்தை கவிதை ஏற்படுத்தவில்லை..வார்த்தை செதுக்கலில் இருக்கும் சிரத்தை, கவிதையின் கருத்தாழத்தில் இல்லையோ எனத் தோன்றுகிறது.