ஒரு உதவாக்கரையின் உலகம்
அருண் காந்தி
ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் சாமம் அது. நிலவு உச்சந் தலைக்கு நேரே நகர்ந்த வேளையில் சமரன் மெல்ல சாரட்டை வீட்டின் பின்பக்கம் மதிலுக்கு வெளியே அவளது அறைக்கு நேரே நிறுத்துகிறான். நளாயினி ஜன்னலைப் பார்த்துக் கொண்டே மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் அசையாது அமர்ந்திருக்கிறாள். அவன் அவளைப் பார்க்கிறான். அறையில் விளக்கு அணைக்கப்படுகிறது. மாடத்தில் வந்து நின்று பார்க்கிறாள். அந்த இடம் அமைதியின் உச்சமாகத் திகழ்கிறது. அவனது இதயப் படபடப்பு மட்டுமே அவனுக்குக் கேட்டுக் கொண்டிருந்த வேளையில் குதிரையொன்று செரும சமரன் அவனையறியாது திடுக்கிடுகிறான். குளிர்ந்த காற்று சில்லென்று வீச மரக் கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசும் சத்தம் சமரனுக்குக் கூடுதல் பயத்தைத் தருகிறது. சமரன் அந்த மாளிகையின் முற்றத்தில் அவளின் வருகையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த உருவம் அவனுக்கு வெகு அருகில் வந்து விட்டது. நளாயினி சாரட்டில் வந்து பேசாமல் அமர்கிறாள்.
சமரன் சாரட்டில் ஏறி மெதுவாகச் செலுத்த ஆரம்பிக்கிறான். கோட்டை மதிலைக் கடந்ததும் இருட்டைக் கிழித்துக் கொண்டு பாய்கின்றன வெண் குதிரைகள். நளாயினி அந்த இருளில் தம்மை யாரோ அதே வேகத்தில் பின் தொடர்வதாக எண்ணிப் பயத்தில் திரும்பிப் பார்த்துக் கொண்டே வருகிறாள். ஆக்ரோசமாய்ச் சத்தமிட்டுக் கொண்டு கையில் ஏந்திய வாளுடன் அவர்கள் வருவதாகத் தோன்றுகிறது அவளுக்கு. சமரனிடத்தில் நெருங்கி அமர்கிறாள் நளாயினி. குதிரைகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அவளுக்குக் குதிரைகளின் மூச்சிரைச்சல் மட்டுமே கேட்கிறது.
தொலைவில் தெரியும் வெளிச்சத்தின் திசையில் குதிரைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஏதோ கண் தெரியாத பறவை ஒன்று அந்நேரத்தில் அவள் தலைக்கருகே உரசிப் பறந்து செல்கிறது. நரிகளின் ஊளைச் சத்தம் மீண்டும் அவள் நிம்மதியைக் கெடுக்கின்றன. சமரன் வேகம் குறையாமல் கவனமாகச் சாரட்டைச் செலுத்திக் கொண்டிருக்கிறான். ஒரு பெரிய நீர் நிலையின் மீது அமைந்த ஒரு குடிசையில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
அந்நேரத்தில் குடிசைக்கு வெளியே நீர் மீதமைந்த பலகையில் ஒரு ஆணும் பெண்ணும் சிரித்துப் பேசி தாயம் போன்ற ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த ஆண் அவள் மீது குளிர்ந்த நீரை அள்ளி வீசுகிறான். அந்தப் பெண் அவன் மீது செல்லமாகக் கோபப்படுகிறாள். நளாயினிக்கும் அது போல் அவனுடன் வாழ வேண்டுமென்று ஆசை. சட்டென அந்தக் காட்சி அவள் கண்களிலிருந்து நகர்கின்றது. அவள் அவர்களை ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டே செல்கிறாள். குதிரைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
“டேய்!… டேய்!.. நிறுத்துடா வண்டிய… என்னோட ஆபீஸ விட்டுட்டு எங்க போற? என்ன பகல் கனவா? போயி இன்னக்கிப் பேப்பர்ல வந்த வேலைக்கு அப்ளை பண்ணு. உருப்பட எதாச்சும் வழியத் தேடு… உதவாக்கரை நாயி”
“சரிப்பா…” எனக் கூறி விட்டு நகர்ந்த ஆனந்த், செல்வியின் வீட்டுக்குப் பின்னே சென்று வண்டியை நிறுத்தினான். செல்வி ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு சரித்திர நாவலின் துவக்க அத்தியாயத்துக்குரிய அத்துணை அம்சங்களும் பொருந்திய கதை, கடைசி இரண்டு வரிகளில், ஒரு சம காலக் கதையாக மாறிய அற்புதம்.. நல்ல வித்தியாசமான முயற்சி..வாழ்த்துக்கள்..