சு.கோதண்டராமன்

2012இல் உலகம் அழிந்து விடும் என்ற செய்தியைக் கேட்டவுடன் என் மனம் கால இயந்திரத்தில் ஏறி ஐம்பது வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தது.

1962 பிப்ரவரி 5 அன்று  எட்டு கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்து 1½ மணி நேரத்துக்கு மாநாடு நடத்தப் போகின்றன என்ற செய்தி இரண்டு வருடங்களுக்கு முன்னே வந்து விட்டது. உடனே நம்மூர் சோதிடர்கள் “ஆகா, இது ஏதோ விபரீதத்தின் அறிகுறி. உலகம் அழியப் போகிறது”  என்று பதறினர். பத்திரிகைகள் இது சம்பந்தமாகத் தினமும் ஒரு சோதிடரைப் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டன. ஒருவர் பூகம்பம் வந்து உலகமே அழிந்து விடும் என்றார். மற்றொருவர் நெருப்பு மழை பொழியும் என்றார். மழை பெய்து உலகையே மூழ்கடித்து விடும் என்றும், தொற்று வியாதிகள் பரவி எல்லா உயிர்களும் பலியாகும் என்றும் ஆளுக்கு ஆள் பல விதமாகச் சோதிடம் கூறிக் கொண்டிருந்தனர். அந்தக் கால கட்டத்தில் சுனாமி பற்றி யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் அதையும் சேர்த்துக் கொண்டிருப்பர்.

செய்தித் தாளைத் திறந்தால் தினமும் ஒரு திகில் செய்தி கொட்டை எழுத்துகளில் வெளியாகியது. நான் பயந்து விட்டேன்  என்று சொல்லுவதை விட ஊரோடு ஒத்து வாழ்ந்தேன் என்று சொல்வது கௌரவமாக இருக்கும். என் ஜாதகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதில் காலியாக இருந்த மகர ராசிக் கட்டத்தில் எட்டு கிரகங்களின் பெயர்களை எழுதிப் பார்த்தேன். ஊகூம், எவ்வளவு முயற்சித்தும் நான்குக்கு மேல் எழுத அங்கு இடமில்லை. எட்டுக் கிரகங்கள் ஒரே இடத்தில் சேர்ந்தால் எவ்வளவு நெருக்கடியாக இருக்கும் என்பதை உணர்ந்ததும் என் பயம் அதிகரித்தது.

ஒரு ராசி என்பது முப்பது டிகிரி விரிவு உள்ள மிகப் பெரிய இடம். அதில் எட்டு என்ன, எட்டாயிரம் கிரகங்கள் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது,  எல்லாக் கிரகங்களும் ஒரே டிகிரியில் சேர்ந்தாலும் ஒன்றும் ஆகாது. ஏனெனில் அவை ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் வெவ்வேறு வட்டப் பாதையில் செல்கின்றன என்று விஞ்ஞானிகள் சொன்ன செய்தி பத்திரிகையின் ஒரு மூலையில் பொடி எழுத்துகளில் படிப்பாரற்றுக் கிடந்தது.

எல்லாக் கிரகங்களும் ஒன்று கூடி பூமியை அழிக்கச் செய்த சதித் திட்டத்தை, ராகு மட்டும்  ஒப்புக் கொள்ளவில்லை. ராகுவும் கேதுவும் நம் ஊர் திமுக, அதிமுக மாதிரி. தேர்தலுக்கு முன் கட்சிகள் தங்களுக்குள் பலவிதமாகக் கூட்டணியை மாற்றி அமைத்துக் கொண்டாலும்  ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். திமுக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அதற்கு எதிர் அணியில் தான் அதிமுக இருக்கும். அது போல, மற்ற ஏழு கிரகங்களின் கூட்டணியில் கேது சேர்ந்து விட்டதால், ராகு “நான் தனித்து நின்றாலும் நிற்பேன். கூட்டணிக்கு வர மாட்டேன்” என்று உறுதியாக நின்றது.

தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும்  அஷ்டக் கிரகச் சேர்க்கை வரப் போகிறதாம், உலகம் அழியப் போகிறதாம் என்று இதே பேச்சு. இதைக் கேட்கக்  கேட்க, நடுக்கம் அதிகரித்தது. சங்கராசாரியார் ‘திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்யுங்கள், எல்லாம் நல்லபடியாக ஆகிவிடும்’ என்றார். மற்ற மடாதிபதிகளும் அதை ஆமோதித்தனர். நல்ல மனம் கொண்டவர்கள் கோளறு திருப்பதிகத்தை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தனர்.

எனக்கும் ஒன்று கிடைத்தது. அதை ஒரு லட்சம் தடவை பாராயணம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டேன். ஆனால் எனக்கு அதை விட முக்கியமான வேலை இருந்தது. பொன்னியின் செல்வன் அப்பொழுது தான் படிக்க ஆரம்பித்திருந்தேன். உலகம் அழிவதற்குள் ஐந்து பாகமும் படித்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தி அடையாது. எனவே  நான் பதிகத்தை ஒரு முறை படித்து விட்டு, ‘ஒரு லட்சம் முறை படித்ததாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சுவாமியை வேண்டிக் கொண்டேன்.

சாலையில், பேருந்துகளில், அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் ஜனங்களின் வாய்கள் ஓயாமல் “அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

நான் அப்பொழுது சுவாமிமலையில் குடியிருந்து சுந்தரப்பெருமாள் கோவிலில் ஒரு தனியார் நடுநிலைப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீடு ஏற்கெனவே ஒழுகிக் கொண்டிருந்தது. கிரகங்கள் ஒன்றின் மேல் ஒன்று மோதி இடிந்து விழும் தூள்களை இந்த வீடு எப்படித் தாங்கும் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தோம்.

சுவாமிமலைக் கோவிலில் அடிக்கடி ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். எல்லாப் பேச்சாளர்களும், ‘கலி முற்றி விட்டது, பிரளயம் வரப் போகிறது, பகவான் நாமாவை விட்டால் வேறு வழியே இல்லை’ என்று பிரசாரம் செய்தனர். அதில் ஒருவர் ஒரு கதை சொன்னார்.

காவிரியில் பெரு வெள்ளம். ஒரு ஓடம் அக்கரைக்குச் செல்லத் தயாராக இருந்தது. அதன் ஒரு ஓரத்தில் ஒரு பாம்பாட்டியும் மறு ஓரத்தில் ஒரு குரங்காட்டியும் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் 30, 40 பேர் இருந்தனர். அப்பொழுது ஒரு பிரம்மசாரி வந்து ஏறினான். ஓடம் நடு ஆற்றில் போய்க் கொண்டிருக்கும்போது அவன் குரங்கைக் கட்டிப் போட்டிருந்த கயிற்றைச் சத்தமில்லாமல் அறுத்து விட்டான். குரங்கு தாவி ஓடிப் பாம்புப் பிடாரனின் கூடையைத் திறந்து விட்டது. உள்ளிருந்து பாம்பு சீறிக் கொண்டு வெளியே பாய்ந்தது. உடனே ஜனங்கள் அத்தனை பேரும் பயந்து போய் குரங்காட்டி இருந்த ஓரத்துக்கு ஓடினர். சமநிலை தவறி ஓடம் கவிழ்ந்தது. பாம்பாட்டி, படகோட்டி உட்பட அத்தனை பேரும் ஜலசமாதி ஆயினர்.

இந்தக் கதையைச் சொல்லி விட்டு அவர், இதைப் போல எல்லாக் கிரகங்களும் ஒரு ஓரத்தில் ஒதுங்கப் போகின்றன, உலகமாகிய ஓடம் கவிழப் போகிறது, ஜாக்கிரதை என்று எச்சரித்தார். என் பயம் மேலும் அதிகரித்தது.

 எட்டுக் கிரகச் சேர்க்கை அன்று பள்ளிக்கு லீவு விட்டு விடலாமா என்று எங்கள் தலைமை ஆசிரியர் யோசனை செய்தார். அரசாங்க நிதி உதவி பெறும் பள்ளியாக இருந்ததால் அதற்கு அனுமதி வாங்க வேண்டி இருந்தது. சூரிய கிரகணத்துக்கு லீவு விடும் பகுத்தறிவுக் கழகங்களின் ஆட்சியாக இருந்தால் பொங்கல் விடுமுறையை தை மாதம் பூராவுக்கும்  நீட்டி இருக்கும். அன்று இருந்த காங்கிரஸ் அரசு விடுமுறை விடவில்லை. நாங்கள் ‘வாழ்ந்தால் முன்னூறு பேரும் வாழ்வோம், வீழில் முன்னூறு பேரும் முழுமையும் வீழ்வோம்’ (290 மாணவர்கள் 10 ஆசிரியர்கள்) என்று சமாதானப் படுத்திக் கொண்டோம்.

அந்த நாளும் வந்தது. நான் பள்ளிக்குக் கிளம்பும் போது ஏட்டுத் தயிரையும் பாலையும் விட்டுப் பிசைந்து ஸ்பெஷல் தயிர் சாதம் கட்டிக் கொடுத்து ‘அஷ்டக் கிரகச் சேர்க்கைக்கு முன் சாப்பிட்டு விடு’ என்று என் தாய் அறிவுறுத்தினார். மறு உலகம் செல்லும் போது கூட வெறும் வயிற்றோடு போகக் கூடாது என்பது தாயின் உள்ளம்.

தலைமை ஆசிரியர், “கிரகண தர்ப்பணம் செய்ய வேண்டும். நான் வர முடியாது. நீ பார்த்துக் கொள்” என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார். உலகம் அழியும் போது மனைவி மக்களுடன் கூட இருக்க வேண்டும் என்று அவர் விரும்பியது தான் உண்மையான காரணம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள்.

அந்த முக்கியமான தருணத்தில் அறைக்குள் அடைந்து கிடக்காமல்  வெளியில் போய் வேடிக்கை பார்க்க எனக்கு ஆசையாக இருந்தது. ஆனால் வேறு ஒரு நிர்ப்பந்தம். என் மாணவர்கள் பெஞ்சு மேலும் மேஜை மேலும் ஏறி உலக அழிவு சாலை வழியாக வருகிறதா என்று எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். சிலர், விட்டத்தில் ஏறி கிரகங்கள் இடிந்து விழும் காட்சியை லைவாகக் காண்பதற்காகக் கூரையில் கீற்றை விலக்கிக் கொண்டிருநதனர். இன்னும் கொஞ்சம் விட்டால் எட்டுக் கிரகங்களுக்கும் உதவி செய்கிறேன் என்று சொல்லி கூரையில் நெருப்பு வைத்தாலும் வைத்து விடுவார்கள் போலிருந்தது. அவர்களுக்கு ஏதேனும் வேலை கொடுத்தால் தான் கட்டுப்படுத்தி வைக்க முடியும். “அடுத்த மாதம் ஈ.எஸ். எல்.சி. அரசாங்கப் பொதுத் தேர்வுக்குப் பணம் கட்டி இருக்கிறீர்கள். ஏற்கெனவே நீங்கள் கணக்கில் வீக்” என்று சொல்லி விட்டுப் பாடம் நடத்தத் தொடங்கினேன்.

“உலகம் தான் அழியப் போகிறதே, எதற்காக சார் படிக்க வேண்டும்?” என்று மாணவர்கள் கேட்டனர். “இப்பொழுது படித்து விட்டால் அடுத்த ஜன்மத்தில் படிக்க வேண்டியதில்லை. திருஞான சம்பந்தர் மூன்று வயதில் கவி பாடவில்லையா. அது போல நீங்கள் பிறந்த உடனேயே ராமானுஜம் ஆகி விடலாம்” என்றேன். ‘சார் புருடா விடறார்டா’ என்று கமெண்ட் அடித்தான் ஒருவன். “இப்பொழுது படித்தது அடுத்த ஜன்மத்துக்கு உதவும் என்பதற்கு என்ன ஆதாரம்” என்று ஒருவன் கேட்டான். “திருவள்ளுவர் தான் ஆதாரம். ஒருமையுள் தான் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்புடைத்து என்று சொல்கிறார்” என்றேன். வள்ளுவர் பேரைச் சொன்னதும் அவர்கள் வாயை மூடிக் கொண்டார்கள்.

ஒரு தொட்டியில் ஒரு அங்குல விட்டமுள்ள குழாய் வழியாகத் தண்ணீர் மணிக்கு 10 மைல் வேகத்தில் கொட்டிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து ¾ அங்குல விட்டமுள்ள குழாய் வழியாக மணிக்கு 20 மைல் வேகத்தில் நீர் வெளியேறுகிறது. தொட்டி நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும் என்ற கணக்கை எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும் அவர்கள் மூளையில் தங்காமல் அந்தத் தொட்டியைப் போலவே காலியாகிக் கொண்டிருந்தது.

அவர்களைத் தயார் செய்ய வேண்டும்.  இன்றைக்கு எப்படியாவது அவர்கள் மூளையில் துணியை வைத்து அடைத்தாவது அந்தக் கணக்கை நிரப்பி விடவேண்டும் என்று தீர்மானித்து தலைமை ஆசிரியர் பீரியடையும்  என் பீரியடையும் சேர்த்துப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். 1 ½ மணி நேரம்  மாணவர்களை அறுத்துத் தீர்த்த பின் திடீரென்று ஞாபகம்  வந்து, தலைமை ஆசிரியர் அறையில் வைத்திருந்த கடிகாரத்தைப் போய்ப் பார்த்தேன். 

அடேடே, கிரகச் சேர்க்கை நேரம் முடிந்து விட்டது. நாங்கள் எல்லோரும் உயிருடன் தான் இருக்கிறோம். ஒருக்கால் என் கடமை உணர்வை மெச்சி எங்கள் எல்லோரையும் கூண்டோடு கைலாசத்துக்குக் கடவுள் அழைத்து வந்து விட்டாரோ என்று சந்தேகம் வந்தது. வெளியில் வந்து பார்த்தேன்.  ஒரு பஸ் கும்பகோணத்தை நோக்கிச் சென்றது. அடுத்தாற் போலத் தஞ்சாவூருக்குப் போகும் பஸ் வந்தது. அப்பாடா, உலகம் அப்படியே தான் இருக்கிறது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

அந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு சந்தேகம் தோன்றியது. என் தலைமை ஆசிரியர் 1,08,000 தடவை வேயுறு தோளி பங்கன் பாடலைச் சொல்லியிருந்தார். அவருடைய பக்தியின்  வலிமையினால் இந்த ஊர் மட்டும் தப்பித்திருக்கும். என் பெற்றோர் என்ன ஆயினரோ என்று கவலை வந்தது. முருகன் இருக்கும் இடத்தில் ஒரு இடையூறும் வராது என்று ஒரு மனம் சொன்னாலும் கோவிலைச் சுற்றி இருப்பவர்களில் 90 சதவீதம் பேர், கோவில் பணியாளர் உள்பட, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அவர்களைத் தண்டிப்பதற்காக முருகன் அந்த ஊரையை அழித்திருக்கக் கூடும் என்றும் தோன்றியது. வழியெங்கும் உற்றுப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் வீடு நோக்கிச் சென்றேன். சுவாமிமலையில் முருகன் கோவில் முதல் என் ஓட்டை வீடு வரை எல்லாம் அப்படியே இருந்தன. வீட்டில் என் பெற்றோரும் தம்பியும் நலம். நான் வளர்த்த நாய், எருமை மாடு, தேனீக் கூட்டம் மற்றும் நான் வளர்க்காமலேயே என் வீட்டில் வளர்ந்த பெருச்சாளிகள், பாம்புகள் எல்லாம் முன்பு போலவே இருந்தன.

“இத்தனை பேர் கோளறு திருப்பதிகம் பாராயணம் செய்தது வீண் போகவில்லை” என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். எனக்கு என்னவோ ராகு பகவான் தனித்து நின்று மற்ற எட்டு பேரின் எடையையும் சமநிலைப் படுத்தி அவர்களது சதித் திட்டத்தை முறியடித்து விட்டதாகத் தான் தோன்றியது. பார்வதி கல்யாணத்தின் போது வட இந்தியா கடலுக்குள் மூழ்காமல் அகத்தியர் தனி ஒருவராகத் தென்னாடு வந்து இந்தியாவைச் சமநிலைப் படுத்தவில்லையா, அது போல. கதையில் வந்த பாம்பாட்டி போல மெஜாரிட்டியின் வலிமைக்குப் பலி ஆகாமல், தன்னையும் காப்பாற்றிக் கொண்டு உலகத்தையும் காப்பாற்றிய ஹீரோவாகவே அவர் எனக்குத் தோன்றினார்.

அது முதல் ராகு பகவானிடம் எனக்குத் தனி மரியாதையும் அன்பும் ஏற்பட்டு விட்டது. நான் எந்த வேலையைச் செய்வதானாலும் அவருடைய காலத்தில் தான் செய்வது என்று தீர்மானித்தேன். என்னுடைய திருமணம் ஒரு திங்கள் கிழமை நடந்தது. அன்று காசி யாத்திரை  காலை 8.45க்கு ராகு காலத்தில் தான் துவங்கியது. இன்று வரை நானும் என் மனைவியும் அரசியல் வாதியும் ஊழலும் போல இணை பிரியாமல் வாழ்வதற்குக் காரணம் ராகு தான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.  எங்களில் ‘அ’ யார், ‘ஊ’ யார் என்பதில் மட்டும் எங்களிடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படும். அது அந்த எட்டு கெட்ட கிரகங்களின் வேலை. 

எட்டுக் கிரகச் சேர்க்கையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பையும் நான் சொல்லியாக வேண்டும். அதற்கு முதல் நாள் தான் எனக்கு ‘ஐயா வீட்டுத் தம்பியின் அறிமுகமும் அவரோடு பேட்மின்டன் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. சுந்தரப் பெருமாள் கோவிலில் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டினாற் போல ‘வளைவு’ என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்ட அவரது மாளிகை இருந்தது. அவருடைய தோட்டத்தில் கோர்ட் போடப்பட்டிருந்தது. நானும் ‘தம்பி’யும் ஒரு அணி. ‘தம்பி’யின் உறவினரான என் சக ஆசிரியர் ஒருவரும் வேலை இல்லாப் பொறியாளர் ஒருவரும் எதிர் அணி.  நான் அன்று தான் முதன் முதலாக மட்டையைப் பிடித்திருந்தேன். ஒரு பந்து கூட உருப்படியாக எடுக்கவில்லை. இருந்தாலும் ‘தம்பி’ என்னை மிகவும் ஊக்கப் படுத்தினார். என்னை விட ஐந்தாறு வயது மூத்தவராகவும் ஐநூறு வேலி நிலச்சுவான்தாரராகவும் இருந்த போதிலும் அவர் துளிக் கூட கர்வமில்லாமல் பழகினார். என்னைப் பற்றி அன்புடன் விசாரித்தார். தொடர்ந்து விளையாட வருமாறு அழைப்பு விடுத்தார். மறுநாள் உலகம் அழியாமல் இருந்தால் வருவதாகச் சொன்னேன்.

மறுநாள் அவர் தோட்டத்துக்குப் போனேன். அவர் கும்பகோணம் போய் விட்டதாகத் தெரிந்தது. அடுத்த அடுத்த நாட்களில் அவர் வேறு வேலைகளாக வெளியூர் சென்று கொண்டிருந்தார். அதன்பின் நான் ஒரு பயிற்சிக்காக 1½ மாதம் சென்னையில் தங்க நேரிட்டது. கோடை விடுமுறைக்குப் பின் நான் அந்தப் பள்ளியை விட்டு வேறு ஊரில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியனாகப் போய்ச் சேர்ந்தேன். எட்டுக் கிரகச் சேர்க்கை மட்டும் ‘தம்பி’யுடனான  என் நட்பை முளையிலேயே கிள்ளாமல் இருந்திருந்தால் நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகவோ அல்லது குறைந்தது தமிழ்நாட்டு முதல் மந்திரியாகவோ ஆகியிருப்பேன். இந்தியாவுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. நம் நாட்டின் தலைவிதியை மாற்றி விட்டன பொல்லாத அந்த எட்டுக் கிரகங்களும்.

யார் அந்தத் ‘தம்பி’ என்று கேட்கிறீர்களா? பிற்காலத்தில் ‘கிங் மேக்கர்’ என்று புகழப்பட்ட ஜி.கே. மூப்பனார் தான். 

 

படத்திற்கு நன்றி: http://www.evgschool.org/planets%202.htm

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “உலகம் அழியப் போகிறது

  1. நகைச்சுவை ஊற்றெடுக்கும் நயமான கட்டுரை. வரலாற்றை இப்படி எழுதினால், மாணவர்கள் அனைவரும் அதிலேயே சேர்ந்துவிடும் வாய்ப்பு உண்டு. இந்தியப் பிரதமர் ஆகாவிட்டாலும் சிறந்த எழுத்தாளராகிவிட்டீர்கள்; அந்த வகையில் எட்டு கிரகங்களும் நன்மையே செய்திருக்கின்றன. 🙂

  2. என்னவொரு சரளம், அனுபவப் பகிர்விலே..கிண்டலும், கேலியும் தாராளம்! எந்த இடத்திலும் உங்களை தனிமைப் படுத்திக் கொள்ளாமல், கதை கால மாந்தரில் ஒருவராய் உங்களை சித்தரித்திருப்பது அருமை.
    அனுபவப் பகிர்வு தொடரட்டும்.. மூழ்கித் திளைக்க நாங்கள் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *