செரியாத கல்வியின் சுமை..!
அன்பு நண்பர்களே,
”குருவில்லா வித்தை சிறக்காது “ என்பது ஆன்றோர்களின் வேத வாக்கு. ஆயினும், “ஒன்று எவ்வாறு சொல்லித்தரப் படுகின்றதோ அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகின்றது என்பதை முடிவு செய்கின்றது” என்ற ஆணித்தரமான தம் வாதத்தை அழகுற நடாத்திச் செல்லும், ’அவ்வை மகள்’ என்கிற முனைவர் ரேணுகா ராஜசேகரனின் ஆக்கப்பூர்வமான அறிவியல் சார்ந்த கட்டுரைகள், கற்பித்தலில் உள்ள குறைபாடுகளைக் களையும் முகமாக தொடராக வெளிவர உள்ளது. இவர் அமெரிக்காவில், அட்லாண்டாவில், கல்வியாளராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது நல்லாசிரியராகத் தம் பணியைத் தொடர விரும்பும் ஒவ்வொரு ஆசிரியரும் பயன்பெறத்தக்க வகையில் இத்தொடர் அமைந்திருப்பது தனிச் சிறப்பு! அவ்வகையில் டாக்டர் ரேணுகா ராஜசேகரன் அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்கிறோம்.
அன்புடன்
ஆசிரியர்.
கட்டுரை ஆசிரியரின் முன்னுரை:
பெட்டியில் ஒரு வஸ்து….!
என் முது நிலைக் கல்வி – வேதியியலில்!! இதில் க்வாண்டம் மெக்கானிக்ஸ் பிரிவில் முதலில் வந்த பாடம் “பெட்டியில் ஒரு வஸ்து” (Particle in a Box) என்பதாகும். முழுவதும் கணித வரையறையின் அடிப்படையிலான பாடம் இது. இதை எதற்காகப் படிக்கிறோம் — படிக்க வேண்டும் என்று புரியவில்லை. பேராசிரியர் மட மடவென்று எழுதித்தள்ள – எந்திரங்களைப் போல அச்சசல் காப்பியடித்துக் கொண்டிருந்தனர் மாணவ-மாணவியர். கேள்வி கேட்பார் எவருமில்லை.
அந்தப் பணியை நானே செய்யலாமே எனத் தோன்ற, கேட்டும் விட்டேன்.
“இந்த Particle in a Box ஐ நாம் ஏன் படிக்க வேண்டும்? வேதியலிலோ அல்லது நமது தினப்படி வாழ்விலோ இது எவ்வாறு பயன்படுகிறது? எடுத்துக்காட்டுகள் தந்தால் நீங்கள் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியும்.”
எனது வெளிப்படையான இந்தக் கேள்வியை ஆசிரியர் பொறுப்பான முறையிலே ஏற்றுக் கொள்வார் என்று தான் நான் எதிர்ப் பார்த்தேன்! மாறாக அவர் முகம் சிவந்து வெடிக்க ஆரம்பித்து விட்டார். எம் ஸ் சி என்பது ஆரம்பப் பள்ளியா? ஊட்டி விடுவதற்கு? எடுத்துக் காட்டுகள் இல்லாமல் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி இல்லாதவர்கள் இந்த வகுப்பிற்கு வரத்தேவையில்லை – என்றார்.
இவ்விஷயம் அன்றோடு நின்றுவிடவில்லை. அந்த அரையாண்டு முழுக்க என்னை அவர் ஒரு வைரியாகவே பாவித்தார். Internal Assessment என்று சொல்லப்படுகின்ற உள் நிலை மதிப்பீடு ஒவ்வோன்றிலும் கை வைத்தார். தன்னாலியன்ற ஒவ்வொறு வகையிலும் என்னை வகுப்பில் அவமானப் படுத்தினார். “மனமே பொறு” என்கிற ஒரே வைராக்கியத்தின் மூலம் அந்த அரையாண்டை நகர்த்தினேன்.
புரிந்துகொள்ளாமல் வெறும் மனப்பாடப் பயிற்சியின் மூலமே அந்தப் பாடத்தை நான் தேர்வில் வெற்றி கொண்டேன்.
சொல்லப்போனால், நான் இளம் அறிவியல் படிக்கும்போதே, இயற்பியல் வேதியலில் ஆய்வு நடத்தி அத்துறையில் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசைப் பட்டேன். அந்த ஆசையை வேரோடு பிடுங்கி எறியும் அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது இப்பேராசிரியரின் கற்பித்தலும் அவர் மாணவர்களை நடத்திய விதமும். இத்தனைக்கும் நான் இளம் அறிவியல் படிப்பில் பல்கலைக் கழக “ரேங்க்” வாங்கியிருந்தவள். முதுநிலைக் கல்வியின் போது கல்லூரியின் வேதியியல் கழகம், தமிழ் மன்றம், உள்ளிட்ட பல அமைப்புக்களில் பொறுப்பான பதவியும் வகித்து வந்தவள். எனக்கே இத்தனை அவதி என்றால் பிற மாணாக்கர்களின் நிலை பற்றி என்ன சொல்ல?
புரிந்து கொள்ளாமலேயே என் மண்டைக்குள் ஒரு பாடத்தைப் பதித்தது எனக்குள் மாபெரும் சுமையாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல பல ஆண்டுகள் “செரியாத” கல்வியின் சுமையால் வாடினேன் வருந்தினேன்.
பல ஆண்டுகள் சென்றன; சிறையில் உள்ளவர்களுக்கு சேவை செய்வதற்காக, ஒரு சமூகப் பணிக் குழுவோடு ஒரு நாள் மைய சிறைச் சாலை சென்றேன். முதல் சிறை அறையின் முன், குழுவாகச் சென்று நிற்கிறோம். அந்த வினாடி, “he is a perfect particle in a box” என வாய்விட்டுக் கூவினேன். அனைவரும் என்னைப் பார்த்து, “என்ன ஆச்சு?’ என்றார்கள்.
“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெக்கானிகல் சித்தாந்தத்திற்கு, நடைமுறையில் ஒரு எடுத்துக்காட்டை, சிறைக்குள் இருந்த நிலையில் அந்த மனிதன் எனக்குத் தந்தான்.
“பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெக்கானிகல் சித்தாந்தத்தில் வரும் சில மொழிவழக்குகள் சிறைக் காட்சியில் மட்டுமே எனக்கு விளங்கின. “Boundary Conditions” “Degrees of Freedom” “escape impossibility” “solution to the problem is trivial” “the particle moves in a straight line until it reflects from wall.”
சிறை வாயிலில் எனக்கு அறிவியல் ஞானம் பிறந்தது. “பெட்டியில் வஸ்து” எனக்குப் புலப்பட்டது. எட்டாக் கனியென இருந்த க்வாண்டம் மெக்கானிகல் சித்தாந்தம் உள்ளங்கை நெல்லிக் கனியானது.
இதனைத் தொடர்ந்து, “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெக்கானிகல் சித்தாந்தத்திற்குப் பல எடுத்துக் காட்டுகள் இருப்பது பளிச்சிட்டது: கூண்டுக் கிளி, கருவறையில் இருக்கும் சிசு, தொழுவத்து மாடு என உதாரணங்கள் உதிர்ந்தன.
இந்த எடுத்துக் காட்டுகள் வாயிலாக “பெட்டியில் வஸ்து” என்கிற அந்த க்வாண்டம் மெக்கானிகல் சித்தாந்தத்தை எனது பேராசிரியர் அன்று விளக்கியிருந்தால் அந்த சித்தாந்தத்தைக் கற்றுக்கொள்வது எளிதாயிருந்திருக்கும்.
நான் சேவை செய்வதற்காக, சிறைச் சாலை சென்ற காரணத்தால் மட்டுமே கிடைத்த ஞான தீட்சை இது. இவ்வகை ஞானம் பெற என்னுடன் படித்த இன்னபிற மாணாக்கர்கள் என்ன செய்திருக்க முடியும்? சரியாகச் சொல்லித் தரப்படாத செரியாக் கல்வியால் அவர்களில் பெரும்பாலோர் வேதியியலை ஒதுக்கி விட்டு வேறு துறைகளுக்குச் சென்று விட்டார்கள். மொத்தம் 18 பேரில் நாங்கள் மூவர் மட்டுமே அறிவியல் துறையில் ஆய்வுப் பணியில் இருக்கிறோம்!!.
எதனை எவ்வாறு சொல்லித் தரவேண்டுமோ, அதனை அவ்வாறு மாணாக்கர்களுக்குப் புரியுமாறு, கற்பித்தல் என்பது ஆசிரியரின் கடமையல்லவா? இதற்காகத்தானே அவர்கள் பணியமர்த்தப்பட்டு சம்பளமும் வழங்கப் படுகிறார்கள்?
நடைமுறையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே சில நல்ல ஆசிரியர்களைப் பார்க்கிறோம் (இவர்களில் பெரும்பாலோர் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் அல்லர்). கற்பித்தலைக் கடமை எனக் கருதாது கடனே எனக் கருதும் ஆசிரியர்களே வெகுபலராயிருக்கிறார்கள் (இவர்களில் வெகு பலருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது!)
“குருவில்லா வித்தை சிறக்காது” என்கிற வாக்கை ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியபடி, கற்பித்தலின் பால் பற்றுதல் இல்லாது பணியாற்றும் ஆசிரியர்களைப் பார்க்கும் போது, “பிச்சைப் புகினும் கற்கை நன்றே!” என்கிற வாசகத்தை மறு பரிசீலனைச் செய்ய வேண்டும் போல் தோன்றுகிறது.
ஒன்று எவ்வாறு சொல்லித்தரப் படுகின்றதோ அதுவே அது எவ்வாறு கற்றுக் கொள்ளப் படுகின்றது என்பதை முடிவு செய்கின்றது. இவ்வகையில், நாம் நமது கல்வியின் நிலையை சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது என்பது முக்கியமாகின்றது!
இன்னமும் பேசுவோம்
உங்கள் கட்டுரை உண்மையனுபவங்கள் நிறைந்ததாக இருப்பதினால், படிக்க ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அந்த ஆசிரியர் வைத்துக கோண்டு உங்களுக்கு வஞ்சகம் பண்ணியதாகத் தெரியவில்லை. அப்படிப் பட்டதொரு புரிதலுடன், லோகாயுத வாழ்க்கையுடன், உதாரணத் தொடர்புப் படுத்தி அவர் படித்திருக்கவும் மாட்டார் என எண்ணுகிறேன். அதன் விளைவுதான் உங்கள் மேல் எழுந்த கோபம்.. ஒரு வகையில் அது ஒரு தற்காப்பு முயற்சி.. அப்படிப் பட்ட புரிதல் அற்றோர் ஆசிரியப் பணிக்கு வருதல் மிகவும் துயரமான நிகழ்வு.
என்றோ மனப்பாடம் செய்து படித்த திருக்குறளுக்கு, எத்துனையோ வருடம் கழித்து வாழ்க்கை பொருள் கற்றுத் தருவது போலத்தான், உங்களுக்கு சிறை வாயிலில் நிகழ்ந்ததும். தொடரும் உங்கள் கட்டுரைகளைப் படிக்க மிக்க ஆர்வத்துடன் காத்து இருக்கிறேன்.
“செரியாத கல்வியின் சுமை” கட்டுரை பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.
ஒருவன் அரிசி மூட்டை என்று எண்ணிக்கொண்டு மணல் மூட்டை ஒன்றைச்
சுமந்து செல்கிறான். எதிரே வந்த ஒருவன், ” ஏனப்பா! மணல் மூட்டையைச்
சுமந்து செல்கிறாய்?” என்று கேட்டபின்தான் தெரிந்தது தான் கொண்டு செல்வது
மணல் மூட்டை என்பது. என்ன சுமந்து கொண்டு செல்கிறோம் என்பது தெரியாமல்
இருந்தது அறியாமை. அறியாமையை விளக்குவது தான் கல்வியின் சிறப்பு. ஆனால்
தாங்கள் அரிசி மூட்டையையே மணல் மூட்டையாக சுமந்ததற்குக் காரணமான அந்த
ஆசிரியரின் செயல்பாடு பாராட்டத்தக்கது அல்ல. திருவள்ளுவர் கல்வி அதிகாரத்தில்
“எண்பொருளவாகச் செலச் சொல்லி தான் பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.” என்ற குறளில் அரியபொருளையும் எளிதில்
விளங்குமாறு சொல்லுவதே அறிவு என்கிறார். ஆசிரியர் தெளிவாக விளக்காவிடினும்
தாங்கள் நுண் பொருளைக் கண்டு கொண்டீர்கள்! வாழ்க!
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.
எனக்கு முனைவர் ரேணுகா ராஜசேகரினின் ஆதங்கம் புரிகிறது. ஒரு உதாரணம். கணக்குப்பாடங்கள் இரண்டு, எஸ்.எஸ்.எல்.ஸி.யில். மார்க் 100% & 95%. காலேஜில் கணக்குப்பாடங்கள் புரியவில்லை. காரணம்:“பெட்டியில் ஒரு வஸ்து” வாத்தியார். வேறு காரணத்தால், அவர் என்னை மட்டம் தட்ட நினைக்க, நான் அவரை மட்ட்ம் தட்டிவிட, பகை வளர்ந்தது. வகுப்பு தொடங்கினவுடன் என்னை வெளியே போக சொல்லிவிடுவார். எப்படியும் என்னால் அவருக்குக் கஷ்டம். எனக்கு பாஸ் பண்ணுவதே பெரும் பாடு ஆகிவிட்டது. அதையெல்லாம் தாண்டியாச்சு. இன்று பிரச்னை: பேத்தி கேட்கிறாள், ‘தாத்தா! உனக்கு ஏன் க்வாடிலேட்றல் ஈக்வேஷன் போட நேரம் ஆகிறது?’.“பெட்டியில் ஒரு வஸ்து” கதை சொன்னேன். சிரிக்கிறாள்.
மறுமொழி தந்திருக்கிற திரு இளங்கோவன், திரு தீத்தாரப்பன்,
திரு இன்னம்பூரான் -உம் மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
அறிவார்ந்த உமது கருத்துக்கள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன.
குறிப்பாக
ஆசிரியர்களின் தற்காப்பு முயற்சி – இளங்கோவன்
கல்வி அதிகாரம் – தீத்தாரப்பன்
மாணவர்களால் ஆசிரியருக்குக் கஷ்டம் – இன்னம்பூரான்
ஆகிய மூன்றும் நீங்கள் எனக்கு மீண்டும் வழங்கும் நினைவூட்டல்கள்.
மேலும் பேசுவோம்
வணக்கம்