யாத்திரை
பிச்சினிக்காடு இளங்கோ
இயங்கும் நிலையில்
மனமும் இல்லை
உடலும் இல்லை.
எண்ணமும் நிகழ்வும்
வேறு வேறாய்,
அலுப்புத் தட்டி விடுகிறது
அவ்வப்போது.
எல்லாம் ஈர்ப்பதுமில்லை
எல்லாவற்றிலும் இழப்பதுமில்லை,
வழி தெரிந்தாலும்
பயணம் சாத்தியமில்லை.
அக்கம் பக்கம்
சாதகமானாலும்,
மனம் ஏனோ
அடம் பிடிக்கிறது.
அது ஒரு
ஞானப்பெட்டகம்
பட்டறிவின் குவியல்
கிரியா ஊக்கி
வரும் தலைமுறைக்கான
சுரங்கம்.
என்ன செய்வது?
கையில் எடுத்தால்
முதலில்
பார்ப்பதே நிகழ்கிறது,
பக்கம் எத்தனை? என்பதே
கேள்வியாகிறது.
இத்தனையும் கடந்துதான்
யாத்திரை நிகழ்கிறது.
படத்திற்கு நன்றி: http://flowpsychology.com/?attachment_id=12209