தமிழ்த்தேனீ  

தம்பதி சமேதரரா சாஷ்டாங்கமாக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து எழுந்து கை கூப்பி நின்ற ராமசேஷன் பக்கத்தில் குனிந்து நமஸ்காரம் செய்து விட்டு எழுந்த அம்புஜத்தின் காதில் கிசுகிசுப்பாக,  “நிதானமா எழுந்திரு, முதுகு பிடிச்சிக்கப் போறது” என்றார். “என்ன திடீர்ன்னு இவ்ளோ கரிசனம் என் மேலே? என்னிக்கும் இல்லாத அதிசயமா?” என்று முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு கேட்டாள் அம்புஜம். 

“முதல்லே கழுத்தை இப்பிடியெல்லாம் நொடிக்காதே, சுளுக்கிக்கும். சாதாரணமாப்  பேசேன், எதுக்கு இவ்ளோ வளைசலும் நெடிசலும், நொடிப்பும்?” என்றார் ராமேஷன். 

“போதும் உங்க வழிசல்.  நேரா நின்னு உங்க பதிலைச் சொல்லுங்கோ” என்றாள் அவள். 

“கொஞ்சம் இரு  சொல்றேன்”. என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு சொன்னார். 

“எனக்கு வயசாச்சு, பாதித் தலை வழுக்கை, மீதி வெள்ளிக் கம்பியா முடி மின்றது, முகமெல்லாம் சுருக்கம் விழ ஆரம்பிச்சாச்சு,  இந்த வயசிலே யாராவது என்னைக் கல்யாணம் செஞ்சிக்க ஒப்புக்குவாளா? பெரிய மனசு பண்ணி நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துண்டியே! அதை நெனைச்சேன், ஒரு நன்றி உணர்வு. அதான்  கரிசனமா வெளிப்பட்டுத்துத்து” என்றார் நமுட்டுச் சிரிப்புடன் ராமசேஷன். 

“போறும் வழியாதீங்கோ!, பேரப்பசங்க, பேத்திகள், பையன்,  மாட்டுப்பொண்ணு, பொண்கள், மாப்பிள்ளைகள், கல்யாணத்துக்கு வந்தவா எல்லாரும் நம்மையே வேடிக்கை பாத்துண்டு இருக்கா. கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ வெக்கமா இருக்கு” என்றாள் அம்புஜம். 

“என்ன இப்பவும் ஏதோ சண்டை போட்டுண்டு இருக்கேள், அறுபதாம் கல்யாணம் செஞ்சிக்கக் குடுத்து வெச்சிருக்கணும், இங்கே பாத்துக் கவனமா மந்திரத்தைச் சொல்லி  திருமாங்கல்யத்தைக் கட்டுங்கோ, பெரியவாள்ளாம் அக்ஷதை போடுங்கோ, சின்னவாள்ளாம் வேண்டிக்கோங்கோ, ஹூம்..  கெட்டி மேளம், கெட்டி மேளம்” சாஸ்திரிகளின் மந்திர உச்சாடனத்துடன் நாதஸ்வரமும் கெட்டி மேளமும் மங்கலமாய் ஒலிக்கத் தொடங்கியது. 

முப்பது முக்கோடித் தேவர்களும் புஷ்பமாரி பொழிந்தனர். 

 

படத்திற்கு நன்றி: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=163359

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கரிசனம்

  1. நேற்று தான் படித்தேன், மூன்று வரியில் முழுக்கதையையும் சொல்லி விடலாம் என்று. செய்து காண்பித்து விட்டார், தமிழ்த்தேனி. அடுத்தாத்து அம்புஜத்தைக் கேட்டேன். இவர் தெரிஞ்சு தான் சொல்றார்ணா. இதற்கு மேலே என்ன நற்சான்றிதழ் வேணும் உமக்கு, ஐயா?

Leave a Reply

Your email address will not be published.