ஜோசப் குரியன்

நேர முள்ளின் வேக நகர்தலில்
கையில் வைத்த பனிக்கட்டியாய்க்
கரைந்தே போனதே, உறவுகளைக் காணும்
என் தாயக விடுமுறைப் பயணம்

என் உறவுகளைக் காணும் உற்சாகத்துடன்
உவப்புடன் உடன் வந்த என் கைப்பைகளும்
திரும்பிச் செல்லும் நாள் நெருங்குவது கண்டு,

காலத்தின் ஓட்டத்தினைக் கட்டி வைக்க,  
கயிறு ஒன்று கிடைக்குமா என
தமக்குள் பேசிப், பேசித் தவித்துப் போனது.

விடுப்பின் காலம் விடை பெற, 
களைத்த மனதுடன், திரும்பிக் 
களம் வந்த எம்மைக் கண்டு, 

எடுத்துச் செல்லும் பொருளின் 
எடை அளவு கூடியதால், நான் 
விடுத்துச் சென்ற மிட்டாய்ப் பெட்டிகள்,

அங்காடியில் எங்களை வாங்கிய போது 
உம்முடன் வரும் எம்மை உறவுகளுக்கு, 
அன்புப் பரிசாய்ப் பகிர்ந்தளிப்பீர் என 
ஆசை, ஆசையாய்க் காத்திருந்தோம், 

ஆனால் அவர்களைக் காணவும் முடியா
இருட்டு மூலையில் எம்மை இருத்திச் சென்றது  
என்ன நியாயம்? எனும் வினாவுடன் விசும்ப

உறவுகளைக் கண்டு வந்த எமக்கே 
இத்தனைக் கவலையென்றால்
காணாமல் இருக்கும் அவற்றின்
வேதனை எப்படி இருக்கும் எனத் தெரிய

அவற்றின் கவலை தீர்க்கும் பதிலாய்க் 
காத்திருங்கள், காலம் மீண்டும்,  
உறவுகளைக் காணச் செய்யும் என்னும் 
ஆறுதல் வார்த்தை சொல்லி, 

அவற்றோடு சேர்ந்து, 
உறவுகளை மீண்டும் காணும் 
உன்னத நாளிற்காய் உவப்புடன் 
நானும் காத்திருக்கிறேன்.   

 

படத்திற்கு நன்றி: http://www.aroundtheworldtraveller.com/the-good-things-about-the-jobs-that-travel-around-the-world

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க