மௌனம்
குமரி எஸ்.நீலகண்டன்
பறக்கும் தூள்களுக்கு
இடையே
பரந்து நிற்கும்
மௌனத்தின் வெளி.
மணக்கும் மயக்கும்
மௌனத்தின் நெடி.
அடைத்த செவிகளுக்கும்
அடங்காமல் கேட்கும்
மௌனத்தின் ஒலி.
கால மாற்றத்தில்
புயலின் மையம்
மௌனம்.
புரிவதற்காகவும்
புரியாமல் இருக்கவும்
எழுதப்பட்டும்
ஓரளவு
புரிந்துவிடுகிறது
மௌனம்.
சலசலப்பில்
சல்லாபிக்கும்
மௌனம்.
எதுவும்
முடிந்துவிடுகிறது
உலகில் மௌனத்தில்.
இன்னொன்று
முளைத்தும் விடுகிறது
மௌனத்தில்.