பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 16

1

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:

வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின்…….. தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்க முடியாது. தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி………….. ஈழத் தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

“தமிழ்ப் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள இடைவெளி நெருங்கிவர வேண்டும்”  என்ற என் கருத்துக்கு எதிர்வினையாக எழும் கேள்வி இது. அதாவது, பேச்சுத் தமிழ் இடத்துக்கு இடம் மாறும்; எழுத்துத் தமிழே இடம் கடந்து பொதுவாக உள்ளது; எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழுக்கு நெருங்கி வந்தால் தமிழ் பின்னப்பட்டுத் தனி மொழிகளாகப் பிரிந்து விடலாம். இந்தப் பயத்தை அர்த்தமற்றது என்று தள்ளிவிட முடியாது. இந்த பயத்திற்கு ஆதாரமாகக் காட்டப்படுவது மலையாளம் தனி மொழியாகப் போன வரலாறு.

ஒரு மொழி இரண்டாகப் பிரிவதற்கு மொழியில் உள்ள வேற்றுமைகள் மட்டும் காரணம் அல்ல. ஒரே இலக்கணம் உள்ள மொழியை இரண்டு மொழிகளாகக் கொள்வதையும் (இந்தி, உருது ஒரு உதாரணம், பழைய யூகோஸ்லோவாக்கியாவின் செர்பியன், குரோஷியன் இன்னொரு உதாரணம்), வேறுபட்ட இலக்கணங்கள் உள்ள இரண்டு மொழிகளை ஒரு மொழியாகக் கொள்வதையும் (தென்சீனாவிலும் ஹாங்காங்கிலும் வழங்கும் கான்டனீஸ், ஒரளவு சொற்களிலும் இலக்கணத்திலும், பெருமளவு உச்சரிப்பிலும் வேறுபட்டு, மாண்டரின் பேசுபவர்களுக்குப் புரியாமல் இருந்தாலும், இரண்டும் புறக் காரணங்களால் சீன மொழி என்று அழைக்கப்படுவது இதற்கு ஒரு உதாரணம்) உலகில் காணலாம். மொழி பிரிவதற்கு அரசியல், கலாச்சாரக் காரணங்கள் முக்கியமாக இருக்கும். ஒரு கிளை மொழி, தனி மொழியாவதும் இப்படியே.

இடைக்காலத்தில் சேர நாட்டில் பாட்டு, மணிப்பிரவாளம் என்று இரண்டு இலக்கிய வகைகளும் மொழிகளும் இருந்தன. பாட்டிலக்கியத்தின் மொழி, வழக்கில் இருந்த தமிழ்; மணிப்பிரவாள இலக்கியத்தின் மொழி தமிழோடு சமஸ்கிருதம் கலந்த மேல்தட்டு மக்களின் மொழி. மேல்தட்டு மக்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் மாறிய அரசியல், கலாச்சாரக் காரணங்களால், மணிப்பிரவாள இலக்கியத்தின் மொழி தனியானது, தமிழிலிருந்து (அன்றைய பிரயோகத்தில் பாண்டி பாஷையிலிருந்தும், சோள பாஷையிலிருந்தும்) வேறானது என்று நிறுவினார்கள். அதை நிலை நாட்ட (கேரள பாஷையைப் போலவே சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கியிருந்த கர்நாடக பாஷையிலிருந்தும் ஆந்திர பாஷையிலிருந்தும் வேறுபட்டது என்று காட்டவும்), பதினான்காம் நூற்றாண்டில், கேரள பாஷையின் முதல் இலக்கணமாக லீலாதிலகம், சமஸ்கிருத்தில் எழுதப்பட்டது. பின்னால் கேரள பாஷைக்கு மலையாளம் என்ற பெயர் வந்தது.

யாழ்ப்பாணத்தில் பேசப்படும் தமிழ், பேச்சில் உள்ள வித்தியாசத்தால் மட்டும் ஒரு தனி மொழியாகப் பிரியாது. தமிழிலிருந்து விலகுவதற்குப் பெரிய அரசியல், கலாச்சாரக் காரணங்கள் தோன்ற வேண்டும். அவை, மலையாளம் போல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தை உதறும் அளவுக்கு உரமாக இருக்க வேண்டும். அப்படி ஒருவேளை நேர்ந்தால், மொழியளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தேசிய அடிப்படையில், தமிழ் இரண்டாகும். ஆனால் யாழ்ப்பாணத்தவர்கள் தமிழ்க் கலாச்சார மறுப்பைத் தழுவ முகாந்திரம் இல்லை. அரசியல், கலாச்சாரக் காரணங்கள் ஒற்றுமைக்குச் சாதகமாக இருந்ததால், வெப்ஸ்டர் அமெரிக்கன் மொழியை நிறுவத் தனி அகராதி தயாரித்தும், ஆங்கிலம், தனிப் பெயர்கள் வைத்துக்கொண்டு, இரண்டாகப் பிரியவில்லை.

தமிழ்ப் பேச்சும் எழுத்தும் இரண்டறக் கலக்கப் போவதில்லை; அதற்குத் தேவையும் இல்லை. இரண்டுக்கும் இடைவெளியைக் குறைப்பதற்கு, பேசுவதைப் போலவே எழுதுவது என்ற அர்த்தம் இல்லை. உலக மொழிகளில் எழுத்துக்கும் பேச்சுக்கும் குறைந்த அளவிலாவது வித்தியாசம் இருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை, இரண்டின் இடைவெளியைக் குறைப்பதில் முதல் படி, பள்ளித் தமிழை அச்சு ஊடகத் தமிழுக்குப் பக்கத்தில் கொண்டுவருவது. ஊடகத் தமிழில் வர்ணனைப் பகுதியில் (narratives) வரும் தமிழ் இக்கால எழுத்துத் தமிழ்; அதில் உரையாடலில் (conversations) வருவது பேச்சுத் தமிழ். இந்த எழுத்துத் தமிழ், செந்தமிழிலிருந்து விலகி, பேச்சுத் தமிழ்க் கூறுகளைக் கொண்டிருக்கிறது. இந்தக் கூறுகள் தொடரியல், பொருளியல், சொல்லியல், சந்தி சம்பந்தமானவை. சொல் வடிவில் – அதாவது, சொல்லின் எழுத்துக் கூட்டு, உருபுகளின் வடிவம் ஆகியவற்றில் – வேறுபாடு போற்றப்படுகிறது. இந்தப் போக்கை ஊக்கப்படுத்தலாம். தமிழ் எழுத்துக்கும் பேச்சுக்கும் உள்ள வேறுபாடு, எழுதும்போது சொல்லின் வடிவிலும், அதைப் பேசும்போது உச்சரிப்பிலும் இருக்கும்; இலக்கணத்தில் இருக்காது. எழுதிய சொல்லைப் படிக்கும்போது உச்சரிப்பு பேசுவதிலிருந்து வேறுபட்டிருக்கும். ஆங்கிலத்தில், படிப்பதும் பேசுவதும் ஒன்றாக இருக்கும்; எழுதுவது வேறாக இருக்கும். தமிழில், எழுதுவதும் படிப்பதும் ஒன்றாக இருக்கும்; பேசுவது உச்சரிப்பில் மட்டும் வேறாக இருக்கும்.

தற்கால எழுத்துத் தமிழ் உருவாகியிருப்பது போல், பேச்சுத் தமிழில் தகு வழக்கு (Standard Speech) உருவாகியிருக்கிறது. இது ஜப்பானிய மொழி போல், பிரிட்டிஷ் ஆங்கிலத்தைப் போல், அந்தஸ்து உள்ள ஒரு இடத்தில், அந்தஸ்து உள்ள ஒரு சமூகப் பிரிவினர் பேசும் மொழியின் அடிப்படையில் அமையவில்லை. வட்டாரத்தையும் சாதியயையும் சார்ந்த – பேசுபவரின் வட்டாரத்தையும் சாதியையும் காட்டிக் கொடுக்கும் – மொழிக்கூறுகளை அகற்றி, அவற்றுக்குப் பதில், இணையான பொது மொழிக்கூறுகளைச் சேர்த்து உருவாகும் பொதுப் பேச்சு மொழி (Standard Spoken Tamil) அது. பொதுக் கூறுகளில் எழுத்து மொழியிலிருந்து பெறும் கூறுகளும் அடங்கும். தற்காலத் தமிழில் பொது எழுத்து மொழி (அல்லது நடை), பொதுப் பேச்சுத் தமிழ் (அல்லது நடை) என்ற இரட்டைப் பிரிவு இருக்கிறது. இந்த இரண்டுக்கும் மேல், முன்னதில் செந்தமிழ், அறிவியல் தமிழ் என்று பல துணை வகைகளும், பின்னதில் கிளை மொழி, தொழில் சார்ந்த மொழி என்று துணை வகைகளும் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்ததுதான் பல நிலைகளைக் கொண்ட தற்காலத் தமிழ்.

யாழ்ப்பாணப் பேச்சு மொழி, தமிழின் ஒரு வட்டார மொழி. அதன் எழுத்து மொழி, தமிழ் நாட்டு எழுத்து மொழியோடு ஒத்தது. இரண்டுக்கும் வேறுபாடு பத்து சதவிகிதத்திற்குக் குறைந்த சொற்களிலும், ஒத்த சொற்களின் பொருளில் ஓரளவும் இருக்கிறது. யாழ்ப்பாணத்தின் பொதுப் பேச்சு மொழி, தமிழ்நாட்டில் போல, வட்டாரத்திற்கு உரிய தனிக் கூறுகளை விலக்கி, பொதுக்கூறுகளை ஏற்று அமைந்தால், இரண்டு நாடுகளின் பொதுப் பேச்சு மொழியிலும், எழுத்து மொழியைப் போலவே, வேறுபாடு குறைவாக இருக்கும். மேலே சொன்னபடி, பொது எழுத்து மொழியும், பொதுப் பேச்சு மொழியும் இலக்கணத்தில் நெருங்கி வரும்போது இரு நாட்டு மொழியும் வேறோ என்ற எண்ணம் தோன்றாது. தமிழ்நாட்டில் வட்டார மொழிகள் போல, உரையாடல்களில் யாழ்ப்பாண வட்டார மொழி வழங்கும்.

இப்படியான நவீனத் தகு தமிழ் (Modern Standard Tamil) வளர்ச்சியில், பொது எழுத்துத் தமிழுக்கும் பொது பேச்சுத் தமிழுக்கும் இடையே பெரிய விரிசல் இல்லாமல், அதனால் கல்விக்கும் கற்பனைப் படைப்புகளுக்கும் வரும் இடர்கள் இல்லாமல், போகும். இவை இரண்டும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பொது என்ற நிலையும் இருக்கும். இந்த நிலை பெருமளவு அராபிய மொழி நிலையை ஒத்தது. அராபியத்தின் பேச்சு மொழி, மேற்கு ஆசியாவில் அது பேசும் நாடுகளில் வித்தியாசப்படுகிறது. தற்காலத் தகு அராபியம் (Modern Standard Arabic), இந்த நாடுகளுக்குப் பேச்சிலும் எழுத்திலும் பொது. பொதுப் பேச்சு வழக்கில், நாட்டைப் பொறுத்து, வட்டார வழக்கின் கூறுகள் கொஞ்சம் இருக்கும். பொது எழுத்து வழக்கில் செம்மொழி அராபியத்தின் (Classical Arabic) கூறுகள் கூடக் குறைய இருக்கும். அரசியல், கலாச்சாரக் காரணங்களால் அராபிய மொழி பல மொழிகளாகப் பிரியும் வாய்ப்பு இல்லை.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார். பேராசிரியரின் பதில்கள், சிந்தனையைத் தெளிவிக்கவும் மேலும் சிந்திக்கவும் தூண்டும் ஒரு முனையே. அதிலிருந்து தொடர்ந்து நாம் பயணிக்கலாம். அவரின் பதில்களுக்குக் கருத்துரை எழுதலாம். பதில்களின் அடிப்படையில் புதிய கேள்விகள் கேட்கலாம். நம் தேடலைக் கூர்மைப்படுத்த இது நல்ல தருணம்.)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 16

  1. உங்கள் “ .. முதல் படி, பள்ளித் தமிழை அச்சு ஊடகத் தமிழுக்குப் பக்கத்தில் கொண்டுவருவது.. “ என்பது அறிவுக்கு உகந்ததாக இருந்தாலும், காமன் சென்ஸ் ஆக இருந்தாலும், பல துறையினர் ஊடகத் தமிழை ஒரு அரக்கன் போல் பார்க்கின்றனர். பொதுவாக தனித்தமிழ் ஆர்வலர்கள் (அல்லது வெறியர்கள்) , ஊடகங்கள் தமிழைக் கெடுப்பதே முதல் கடமையாகக் கொண்டுள்ளது போல் நினைக்கின்றனர். ஊடகத் தமிழை வெறுக்கும் பலர் , ஜனரஞ்சக ரீதியில் எழுதி, தங்கள் எழுத்துகளை மக்கள் விரும்பி, தங்கள் காசைச் செலவழித்து வாங்கும் வகையில் எழுத விருப்பம் இல்லாதவர்கள் அல்லது திறன் அற்றவர்கள். அதனால் எங்கு எங்கு முடியுமோ, அங்கெல்லாம் மக்கள் விரும்பிப் படிக்காத தனித் தமிழைத் திணிக்கின்றனர்

    எனக்கும் தமிழ் ஊடகங்கள் மீது பல விமர்சனங்கள்; ஆனால் பொதுவாக தமிழ் மொழியை கையாளும் விதத்தில் இல்லை. அதனால் தமிழ் எங்கு திணிக்கப்படாமல் இருக்கிறதோ – அதாவது வணிக முறையில் தமிழ் புஸ்தகங்கள் எழுதப்பட்டு, விற்பனை ஆகிறதோ- அங்கு தற்காலத் தமிழ் வளர்கிறது.

    விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *