இனிய பாடல்கள்..
யுகநிதி, மேட்டுப்பாளையம்
உறங்கியும் உறங்காமலும்
என் தாயின் சிறகுகளுக்குள்
நான் புதைந்து கிடந்த
அந்த இரவுகள்..
எந்தையொடு
தேயிலைக் காட்டு மலைகளில்
ஏறி இறங்கி
கடைகளுக்கும்
திரை அரங்குகளுக்கும்
நடந்த அந்தக் குளிர்ப் பொழுதுகள்..
பள்ளிக்குச் சென்று வருகையில்
மூங்கில் காடுகளினிடையே
புத்தகத்தை வைத்துவிட்டு
விளையாடி மகிழ்ந்த
அந்த இளைய காலங்கள்..
பனி சிந்தும்
நிலாப்பொழுதுகளில்
வரிசையான வீடுகளின்
முற்றத்தில்
அம்மாக்களும்.. பாட்டிகளும்..
கதைசொல்லி
அமர்ந்திருக்கையில்
கண்ணாமூச்சு ஆடிய
அந்த நிமிடங்கள்..
விடுமுறை நாட்களில்
தூரத்திலோடும் ஆற்றுநீரை
சுமந்து வருவதும்..
வீட்டுக்கு விறகு
சேர்ப்பதும்..
அந்தி வெய்யிலில்
கோலி, கில்லியில் எங்களை
இணைத்து கொள்வதும்..
அப்பப்பா..
இப்படி பின்னோக்கிய
எல்லாப் பொழுதுகளும்
நினைவுகளாய் முன்வந்து
நெஞ்சை நிரப்புகின்றன..
அறுபதுக்கும் எண்பதுக்கும்
இடையேயான
இனிய பாடல்கள்..!