இலக்கியம்கவிதைகள்

குடிமை பிறந்தது கொடியும் பறந்தது

அவ்வைமகள்

வணக்கம்

தாயகத்தில் – தமிழ் மண்ணில் அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்!!

எனது கவிதை ஒன்று இங்கே!

 

குடிமை பிறந்தது கொடியும் பறந்தது

விடுதலை வந்தது விடிவு பிறந்தது
கடுதலை அந்நியர் ஓடினர் பறந்து
முடிமை வாழ்வை முறியடித்ததால்
அடிமை மரித்தது தீர்வு கிடைத்தது வீண்
படிமை உணர்வு உதிர்ந்து மறைந்தது
குடிமை பிறந்தது கொடியும் பறந்தது
அடிப்படையான வேகம் விரைந்தது
துடிப்பு பிறந்தது, பிடிப்பு மிகுந்தது
படிப்பினை கண்டதால் வீரியம் நின்றது
படிப்படியாக மதிப்பு வளர்ந்தது
கிடுகிடுவென பணிகள் எழும்பின
மடமடவென வேலைகள் ஆகின

சங்குமுழங்கிட வாத்தியம் ஓங்கிட
யாங்கும் ஒலித்தது தேசியமுரசு
ஓங்கு வையத்தில் உருப்படி நாடென
எங்குமுள்ளவரியம்பிடலாயினர்
தங்கும் இங்கு வளப்பமென்றுமென
பாங்கு புலர்ந்தது பணிவு நிறைந்தது
ஓங்கிய புகழைப்பாதுகாத்திட
ஏங்கினர் நல்லோர் கடிது முயன்றனர்
ஆங்கு காலப்போக்கில் கவனம் குறைந்தது
பொங்குஞான நல்லறம் நலிவு அடைந்தது
எங்கும் ஊழல் எதிலும் பூசல்
தொங்கும் புகழுடன் வாழ்வதானது

திடப்பண்புமறந்து பாசம் மறந்து நலம்
கெட மோசம் போதல் முறையென்றாமோ? அந்நியர்
கொடுமை ஓய்ந்து நிமிரும் வேளையில் நாமே
நடுமையை நலித்திடலாமோ?
கடமையெண்ணம் மறந்திடலாமோ?
மடமைப்போர்வை பாய்மரமாமோ?
மடிதுயில் நீங்கி ஓய்வு ஒழிக்கவேண்டுமே
கடிது உழைத்தலில் தாமதமேனோ?
கொடியை ஏற்றுதல் சடங்கென்றானால் மூத்தோர்
அடியைக்குறியாத பாவம் சேருமே! தானே
கெடுவது தன்னை விடுவது வேண்டுமே! பெயர்
எடுப்பது தன்னில் முனைந்திடவேண்டுமே!

 http://www.indianchild.com/flag_of_india.htm

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க