நூ. த. லோ. சு

அன்பு நண்பர்களே,

பல ஆய்வுக்கட்டுரைகளும், வரலாற்று கட்டுரைகளும் அளித்ததில் நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர் திரு நு.த. லோகசுந்தரம். அந்த வரிசையில், ஒரு சில ஆண்டுகளாக திருவாதிரை அன்று சிதம்பரம் திருவாரூர் அங்கெல்லாம் சிறப்பு வழிபாடுகள் எவ்வாறு நடைபெறுகின்றன என அறியும் ஆவலில் செல்வதை ஓர் மாற்றாகக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.  அதன்வழி இம்முறை மணிவாசகர் திருவாசகம் தொடர்புடைய சிறப்புகள் கொண்ட திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயில் சென்ற போது நேர்ந்த ஓர் தகவல் பற்றியது என்கிறார்.

அன்புடன்

ஆசிரியர்.

 

திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடு எவ்வாறு நடக்கின்றது என அறிய இம்முறைத் திருப்பெருந்துறைக் கோயிலுக்குச் சென்ற போது புதுக்கோட்டை அருகுள்ள அறந்தாங்கி என்னும் ஊரிலிருந்து ஆவுடையார் கோயிலுக்குப் பேருந்தில் சென்றேன். அங்கு செல்ல ஒரு பேருந்து மீமிசால் எனும் பெயருடைய கடற்கரை அருகுள்ள ஊர் வரை செல்கின்றது, அதில் செல்லுங்கள் என்றார்கள். சென்றேன், வழிபாடும் செய்தேன்.

ஆனால், ஓர் ஊரின் பெயர் மீமிசால் என்பது எனக்கு மிக வியப்பளிக்கும் வண்ணம் சொற்களை உடையதாகக் காணப்பட்டது. அது என்ன மீமிசால் என ஒரு ஊர்ப் பெயர்? அச்சொல்லுக்குப் பொருள் ஏதும் அறிவீர்களா? எனப் பேருந்தில் உடன் வந்தோரைக் கேட்டேன். சாதாரண மக்களாகிய அவர் வாயில் இம்முறை வேண்டிய பதில் கிடைக்காமல் போகவே என் தமிழ் மொழிப் பயிற்சித் திறனைப் பயன் கொண்டு விடை காண முயன்றேன்.

‘மீ’ என்றால் ‘வானத்தைப் பார்க்கும்’ = ‘மேல் நோக்கும்’ உயர் நிலையைக் காட்டும்பண்புப் பெயர் எனவும் சில போது மேற்குத் திசைதனையும் (“மீகொங்கில் காஞ்சிவாய்“=தேவாரம்) குறிக்கும் எனவும் அறிவேன். பிறகு மிசால் என்ன என்று விளங்கவில்லை. சில மணி நேரம் கடந்த பின் பொன்னியின் செல்வன் கதையில் கல்கி அவர்கள் மசால் என்றால் தீப்பந்தம் என எழுதியது ஞாபகம் வந்தது. அதற்குச் சுளுந்து என்னும் சொல்லும் உண்டு என எழுதுவார்.

உயரத்தில் தீப்பந்தம் ஏன்?

இன்னாளில் வேறு (3) கூட்டுச் சொற்களால் விளிக்கப்படும் சொல்=கலம்+கரை+விளக்கம்

மீமிசால் கடற்கரை ஊர் ஆதலால் உயரத்தில் தீப்பந்தத்தை (மசால்) வைக்கும் இடம் என்னும் பொருளில் மீமசால் என்பது மீமிசாலாகத் திரிந்தது போலும் எனத் தோன்றியது. சிறுவயதில் மாமல்லபுரத்திற்குச் சென்ற போது புதிய கலங்கரை விளக்கத்திற்கு அருகுள்ள மற்றொரு அறையின் (பாறையின்) மேல் ஓர் உயரமான கல்மண்டப அமைப்புத்தான் மின்சார ஆற்றல் வழி விளக்குகள் இல்லாத முற்காலத்தில் உயரத்தில் தீப்பந்தத்தை ஏற்றிக், கார்த்திகை தீபத்தன்று, திருவண்ணாமலையில் தீ ஏற்றி வைப்பது போல், ஐயப்பன் கோயிலில் பொன்னம்பல மேட்டில் ஏற்றும் மகரவிளக்கு போல் முன் நாளில் தீ மூட்டிக், கலங்கரை விளக்காகப் பயன்பட்டது எனக் கற்றதும் ஞாபகமும் வரவே ‘மீமிசால்’ என்பது ‘மீமசால்’ என்பதாகும் எனவும் அச்சொல்லுக்குக் ‘கலங்கரை விளக்கம்’ என்னும் பொருளாகும் எனவும் சுய விளக்கம் அளித்துக் கொண்டேன். 

எனவே மீமிசால் > மீமசால் > கலங்கரை விளக்கம் எனலாம். இச்சொல்லே அது நின்ற ஊரின் பெயரும் ஆகியது போலும்.

சிறிதே, ஆய்வினை மேலும் சொடுக்கி விட ‘மசால் வடை’ என்பதில் வரும் மசாலும் தீயைத்தான் குறித்தது போலும். ஆனால் இன்னாளில் அவ்வடையை எள்நெய் போன்று ஓர் நெய் கொண்டு பொறித்து எடுக்கிறோம். ஒருக்கால் தீயில் நேரடியாகச் சுட்டு எடுக்கும் ‘கபாப்’ எனும் நல்ல மணமுள்ள தாளிதப் பொருள்கள் சேர்த்துச் செய்யும் உண்/தின் பண்டங்களை முற்காலத்தில் மசால் அடை=அடர்த்தியான. அடை=வடை /உடம்படு மெய்/ ஆனது என நினைக்கத் தோன்றுகிறது.

படத்திற்கு நன்றி: http://www.agasthiar.org/a/vpaug2009.htm

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மீமிசால்

  1. மீமிசாலில் ஆரம்பித்து மசால் வடை வரை வந்த தாங்கள், கடைசி வரைக்கும், திருவாதிரை அனுபவத்தை எழுதவில்லையே! தொடர்ந்து ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

  2. சில நாட்கள் பொறுங்கள் நான் அவசியம் இடுகிறேன்

    வேறு ஒரு ‘கரிகாலன்’ கல்லணை கட்டுரை உள்ளது

    அதனை முதலில் அனுப்புகிறேன்

  3. எனக்கு நன்கு அறிமுகமான
    எங்கள் ஊருக்கு சற்று பக்கத்திலேயே
    உள்ள ஊர் மீமிசல்.அதனை அடுத்த தொண்டி
    துறைமுகம் சோழர்கள் காலந் தொட்டு விளங்கும்
    ஊர்.அக்காலந் தொட்டு தமிழர்கள் கடலைக்
    காதலிப்பவர்கள்.கடல் மேலாண்மையில் வல்லவர்கள்.
    கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்த எல்லா
    ஊர்களும் சிறப்பு வாய்ந்தவை.
     
    மெய்ப் பொருளை உணர்த்தியமைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *