மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கெனியாவில் பிறந்தவர், கருந் தோலர், முகமதியர், பராக்கு ஒபாமா. மாணவனாகப் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்கா வந்தார். அவாய்த் தீவில் பட்டப் படிப்பு.

ஆன் சக மாணவி, வெண் தோலர், கிறித்தவர். காதலித்த இருவரும் 1961இல் மணந்தனர். கலப்பு மணத்தால் விளைந்த கருந் தோலர், சுருள் முடியர், முகமதியப் பெயராளர், மகன் பராக்கு உசேன் ஒபாமா.

2009 தையில் அமெரிக்க மாநிலங்களின்குடியரசுத் தலைவர் பராக்கு ஒபாமா! கருந் தோலும் சுருள் முடியும் தடித்த உதடுகளும் முகமதியப் பெயரும் கொண்ட அவரை, வெண் தோல் பெரும்பான்மை வாக்காளர் தம் அடுத்த குடியரசுத் தலைவராக 2008 கார்த்திகையில் தேர்ந்தனர்.

1619 தொடக்கம் கருந் தோலர் வட அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். அடிமைகளாக வந்தனர். 1964இன் வாக்குரிமைச் சட்டத்திற்குப் பின்னரே கருந்தோலர் அமெரிக்க அரசியலில் முழுமையாகப் பங்கேற்றனர். தூபுவா, மால்கம், ரோசா பார்க்சு, மார்ட்டின் லூதர் கிங்கு போன்ற பலரின் அயராப் போராட்டத்தின் விளைவே 1964இன் சட்டம்.

எனினும் அமெரிக்காவின் தலைமுறைவழிக் கருந்தோலர் அடையா வெற்றியை, செசி சாக்சன் போன்றோர் அமைத்த அடித்தளத்தில், கெனியத் தலைமுறைப் பராக்கு ஒபாமா பெற்றார்.

மனித உரிமை வரலாற்றில் ஒபாமாவின் வெற்றி பொன்னெழுத்தாலானது. வெண் தோலரின் மனமாற்றத்தின் அடையாளமாயிற்று. தோலின் நிறம் கடந்த மனித நேயத்தின் வெளிப்பாடாயிற்று. இணக்க அரசியலுக்கு முன்னோட்டமாயிற்று.

2012 தை 26ஆம் நாள் ஆத்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வும் அத்தகைய மனமாற்றத்தின் அறிகுறியாகும்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, மண்ணின் மைந்தரான தொல்குடி மக்கள். ஆத்திரேலியாவின் நிலப்பரப்பெங்கும் வாழ்ந்து வருபவர். ஒருவருக்கு ஒருவர் புரியும் மொழி பேசி வருபவர். கவலைகளின்றி வாழ்ந்தவர். இயற்கையை நேசித்து வருபவர். விடுதலையாக வாழ்ந்தவர்.

1788 தை 26 தொடக்கம், கடந்த 224 ஆண்டுகளாக ஆத்திரேலியத் தொல்குடியினரும் அமெரிக்கக் கருந் தோலர் கொண்ட துயரங்களையேக் கொண்டிருந்தனர்.

2012 தை 26ஆம் நாள் கான்பாரவில் நடந்த நிகழ்ச்சி, அந்தத் துயரங்கள் போகும் காலத்துக்குக் கட்டியம் கூறியது. ஒடுக்கப்பட்ட கருந் தோலருக்கு அமெரிக்க மாநிலங்களில் விடிவு வந்தது போல, ஆத்திரேலியாவிலும் வெண் தோலரல்லாத தொல்குடி மக்களே தலைமை தாங்கும் அரசு வரும் வாய்ப்புப் பெருகி உள்ளது.

வெண்தோலருக்கு 2012 தை 26 ஆத்திரேலியா நாள். தொல்குடியினருக்கு அதேநாள் படையெடுப்பு நாள். அன்று கான்பாரவில் ஆத்திரேலியப் பிரதமர் வெண் தோலரான சூலியா கில்லாடு தடுக்கினார். விழப் போன அவரைக் காவல்துறையினர் தாங்கினர். பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

 

அவ்வமயம் அவரது செருப்புகளுள் ஒன்று தடுக்கிய இடத்திலேயே கேட்பாரற்றுக் கிடந்தது. கான்பாரா நாடாளுமன்றத்துக்கு எதிரே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொல்குடி மக்களிடம் அச் செருப்புச் சிக்கியது.

வெண் தோலர் திருடிய நிலங்களைத் தொல்குடியினரிடம் திருப்பித் தந்தால் பிரதமரின் செருப்பைத் திருப்பித் தருவோம் எனத் தொல்குடித் தலைவர்கள் ஒரு சிலர் கூறினர்.

அல்ல அல்ல, அந்தச் செருப்பை ஏலத்தில் விடுவோம், வரும் நிதி கொண்டு தொல்கூடிக் கூடாரத் தூதரகத்தை நடத்துவோம் என்றனர் ஒரு சிலர்.

அல்ல அல்ல, அந்தச் செருப்பு, ஆத்திரேலியாவின் இரு சமூகங்களின் நல்லுறவுப் பாலம். பிரதமர் கில்லாடு வந்து கேட்டால் நட்புப் பாராட்டித் திருப்பிக் கொடுப்போம், அவரும் அந்த நட்புக்குக் கைகொடுப்பாராக, என்றனர் ஒரு சிலர்.

224 ஆண்டுகளுக்கு முன் ஆத்திரேலியாவின் தாவரக் குடாவில் வந்திறங்கத் தொடங்கினர் ஆங்கிலேய நாட்டுச் சிறைக் கைதிகள். 1788 தொடங்கி 1868 வரை 806 கப்பல்களில் 25,000 பெண்கள் உள்ளிட்ட 162,000 சிறைக் கைதிகள் ஆத்திரேலியா வந்திறங்கினர்.

இவர்கள் வந்து சேரத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த தொல்குடி மக்களின் எண்ணிக்கை தோராயமாக 1,000,000. ஆங்கிலேயக் கைதிகள் வந்திறங்கிய 80 ஆண்டுக் கால இறுதியில் தொல்குடி மக்களின் எண்ணிக்கை 100,000 என்கிறது ஒரு கணக்கு.

 

தொல்குடி மக்களை வேட்டையாடுவது வெண் தோலரின் பொழுது போக்கு. தெற்கே தாசுமானியாத் தீவில் இன்று தொல்குடி மக்கள் எவரும் இல்லை. கடந்த நூறு ஆண்டுகளில் அங்கு, 10,000 பேரைக் கொன்று குவித்ததாக ஒரு கணக்கு. அதற்கு முன்பு உள்ள காலத்தில் எத்தனை ஆயிரம் தொல்குடி மக்கள் தாசுமானியாவில் இறந்தார்களோ?

 

தொல்குடி மக்களின் நிலங்களை வெண் தோலர் கையகப்படுத்தினர். எதிர்த்தவர்களைச் சுட்டுத் தள்ளினர். வெண் தோலர் படைக்கருவிகளுடன் தொல்குடி மக்களின் வீடுகளுள் புகுந்தனர். குழந்தைகளைக் களவாடினர், எதிர்த்த பெற்றோர்களைக் கொன்றனர். களவுபோன தலைமுறை என்ற சொற்றொடர் ஆத்திரேலியாவின் அகராதிக்குள் புகுந்தது. களவாடிய குழந்தைகளைக் கிறித்துவ சமயப் பரப்புநர் நடாத்திய முகாம்களுள் வளர்த்தனர்

 

இந்தச் சூழ்நிலையில், 40ஆண்டுகளுக்கு முன்னர், 1972 தை 27ஆம் நாள், ஆத்திரேலியத் தலைநகர் கான்பாராவில் கூடாரம் ஒன்றைத் தொல்குடி மக்கள் நால்வர் அமைத்தனர்.

 

மயிக்கேல் அண்டர்சன், பில்லி கிறெயிக்கு, தொனி கூரே, பேர்ட்டி உவில்லியம் ஆகிய நால்வரும் கூடாரத் தூதரகத்தை அமைத்தனர். ஒன்று பத்தாகி, ஆத்திரேலியா எங்கணும் இருந்து தொல்குடி மக்கள் அங்கு வந்து பல கூடாரங்களை அமைத்துத் தங்கினர். கறுப்பும் சிவப்பும் நடுவே மஞ்சள் வட்டமும் கொண்ட தொல்குடிக் கொடியை ஏற்றினர்.

ஆத்திரேலியாவின் முதற்குடி மக்கள் நாம். தொல்குடி மக்கள் நாம். எம் இறைமை எம்முடையது. எமக்குத் தனியான கொடி உண்டு. தனியான நாடாளுமன்றம் அமைப்போம். தனியான அரசியலமைப்பு எழுதுவோம்.

கூடாரத் தூதரகத்தின் நெடுநோக்கம் அஃதாம். எனினும் உடனடிக் கோரிக்கையாக, தொல்குடி மக்களின் நில உடைமையை முன்வைத்தனர். தம்மைக் கேட்காமல் எந்த நிலத்தையோ, எந்த வளத்தையோ யாரும் எடுக்கக் கூடாதென்பதே அவர்களின் தலையாய கோரிக்கை.

ஆத்திரேலிய அரசு அடிபணிந்தது. 1976ஆம் ஆண்டின் தொல்குடி நில உடைமைச் சட்டம் அந்த நால்வரின் கூடாரத் தூதரக முன்னெடுப்பின் விளைவு ஆகும்.

கூடாரத் தூதரகத்தை அகற்ற வேண்டும் என்ற அரசின் நிலை, கரந்துறைந்து கூடாரங்களைத் தாக்கிய வெண் தோலரின் நிலை யாவையும் கடந்து, 1995இல் கூடாரத் தூதரகம் தொல்குடி மக்களின் அரசியல் வேட்கைக் கூடம் என ஆத்திரேலிய அரசு ஏற்றது. 2000 ஆண்டு ஒலிம்பிக் விழா அரங்கிலும் தூதரகக் கூடாரத்தைத் தொல்குடி மக்கள் நிறுவ ஒத்துழைத்தது.

தொல்குடி மக்களின் கொடியும் ஆத்திரேலியக் கொடிகளுள் ஒன்றாயிற்று. ஆத்திரேலிய அரசு நிகழ்ச்சிகளில் தொல்குடி மக்களின் பாடலே முதலில் பாடுவர், கொடியை ஏற்றுவர்.

 

களவுபோன தலைமுறை நிகழ்வுகளுக்காகத் தொல்குடியினரிடம் வெண் தோலர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டமை, 2009இல் பிரதமர் கெவின் இரட்டர் ஆட்சியில் நிகழ்ந்தது.

 

அமைதி, நீதி, இறைமை ஆகிய முக்கொள்கைகளின் சின்னமானத் தீச்சுடர் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒளிர்கிற கூடாரத் தூதரகத்தை நீக்கவேண்டும் என ஆத்திரேலிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தொனி அபொட்டர் 2012 தையில் கூறினார்.

இதைக் காரணம் காட்டி, அவர் விருந்துண்ட நிகழ்வைத் தொல்குடியினர் 2012 தை 26 அன்று முற்றுகையிட்டனர். அந்த விருந்தில் பிரதமர் சூலியா கில்லாடும் கலந்துகொண்டமை தொல்குடியினருக்குத் தெரியாது.

முற்றுகை தொடர்பான அமளியில் பிரதமரைப் பாதுகாக்க முயல்கையில், அவர் தடுக்க, காவலர் காக்க, ஒற்றைச் செருப்பை விட்டுச் சூலியா கில்லாடு தப்பினார்.

இந்த முற்றுகை தொடர்பாகக் காவல்துறை எவரையும் கைது செய்யவில்லை. தொல்குடியினரின் நடவடிக்கைக்கு மதிப்புக் கொடுத்து நடந்தது.

224 ஆண்டுகால அடக்குமுறை நீங்கும், தொல்குடியினரின் ஆட்சி ஆத்திரேலியாவில் மலரும். அமெரிக்க மாநிலங்களின் குடியரசுத் தலைவரான பராக்கு ஒபாமா போலத் தொல்குடி மக்களும் தமக்குரிய ஒப்பற்ற தலைவரைத் தருவர் என்ற நம்பிக்கை மலர்ந்துள்ளது.

 1976இன் நில உடைமைச் சட்டம், 1995இன் கூடாரத் தூதரக ஏற்பு, தொல்குடிப் பாடலுக்கும் கொடிக்கும் அரச விழாக்களில் முன்னுரிமை, 2009இன் மன்னிப்புக் கோரல் யாவும் இணக்கமான அரசியல் மாற்றத்தை நோக்கிய வெண் தோலரின் பயணமாகும்.

 

 

2000 ஒலிம்பிக் போட்டிகளில் ஆத்திரேலிய ஓட்ட வீராங்கனை, தொல்குடித் திலகம், கதி பிறீமன் பெற்ற அதே மதிப்பும் சிறப்பும் தொல்குடி மக்கள் அனைவருக்கும் ஆத்திரேலியாவில் கிடைக்கும் என ஒளிர்தலே எதிர்காலமாகும். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.